வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட மூலிகைத் தோட்ட திறப்பு நிகழ்வும் தேசிய மரநடுகை விழாவும் இன்று நவக்கிரியில் நடைபெற்றது.நவக்கிரியில் மூலிகைத் தோட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தோட்டத்திற்கான பிரதான நுழைவாயிலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைக்க பெயர்ப்பலகையினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததைத் தொடர்ந்து அங்கு மரக்கன்றுகளை அமைச்சர் அவர்களும் ஆளுநர் அவர்களும் நாட்டி வைத்ததுடன் ஏனைய அதிதிகளாலும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இன்று நாடு தழுவிய ரீதியாக தொடங்கப்பட்டிருக்கும் இம்மர நடுகைத்திட்டத்தை எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமித்து உணர்வுபூர்வமாக முன்னெடுக்க வேண்டும். முக்கியமாக ஆளுநரின் பெரு முயற்சியினால் இந்தப் பகுதியில் மூலிகைத் தோட்டம் தொடங்கப்பட்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் இங்கே மரம் நடுகை என்பது மட்டுமல்லாமல் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் எமது சமூகம் முழுமையான மூலிகை வைத்தியத்தைப் பெற்றுக் கொள்ள இந்த முயற்சி பேருதவியாக இருக்குமென்றும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் சுதேச மருத்துவத்துறை வைத்தியர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக