ஞாயிறு, 28 நவம்பர், 2010

கவிஞர் வைரமுத்து ::பாவம் காதல் மன்னன் மாட்டிக்கொண்டார். ஜெமினி தனது வாழ்க்கையில்

ஒரு சாதனையாளனின் புகழைப் பரப்ப இரண்டு விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறுவனம். மற்றொன்று மகன்கள்.ஜெமினிக்கு இந்த இரண்டுமே இல்லை.ஆனால், இந்த இரண்டையுமே முறியடித்து இருக்கிறார்கள் ஜெமினியின் மகள்களான கமலா செல்வராஜ் சகோதரியர்.


தந்தைக்கு மகன் ஆற்றும் பணியை மகள்கள் ஆற்றியிருக்கிறார்கள். தனது தந்தையின் 90 வது பிறந்த நாளை சிறப்பாக எல்லோரும் வியக்கும் வகையில் நடத்தியிருக்கிறார் கமலா செல்வராஜ். ஜெமினியின் வாழ்க்கையை ஆவணப்படமாக்கி அதையும் தமிழக முதல்வர் கலைஞர் கையால் வெளியிட்டும் இருக்கிறார். இதை மகன்களாலும்கூட இத்தனைச் சிறப்பாய் செய்திருக்கமுடியாது. அதை இந்த மகள்கள் செய்திருக்கிறார்கள். ‘பெண் பிள்ளை பெற்றால் எல்லாம் போகும், ஆண் பிள்ளை தான் ஆளும்’ என்று கூறுவதை பொய்யாக்கியிருக்கிறார்கள்.


எந்த ஒரு நடிகனிடமும், “நீங்கள் நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டால்”, மருத்துவராக ஆகியிருப்பேன், பொறியாளராக ஆகியிருப்பேன் இப்படி ஏதோ ஒன்றை கூறுவார்கள். ஆனால், நடிக்கவரும் முன்பே ஜெமினி கணேசன் ஒரு பட்டதாரி. பி.எஸ்.சி வேதியியல் படித்துவிட்டுதான் நடிக்க வந்திருக்கிறார்.
இப்படி ஒரு நல்ல மனிதர். ஆனால் எல்லோரும் இவரை காதல் மன்னன், பல திருமணங்கள் ஆனவர், பல பெண்களின் சகவாசம் உள்ளவர் என்று எல்லாம் கூறுகிறார்களே அது ஏன் என்று யோசித்ததுண்டு.

அப்போதுதான் எனக்கொரு உண்மை தெரியவந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள வேண்டும். ஒரு துறையிலேயே முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டவர்கள் மனது இறுக்கத்தை போக்குவதற்காக சிலவற்றில் மனதை திருப்புவதுண்டு.


சிலர் புத்தகம் படிப்பர். சிலர் இசை கேட்பர். படம் பார்த்தல், பட்டணம் பொடி, காப்பி, இயற்கை, கஞ்சா, மது, பெண்... இப்படி எதாவது ஒன்றில் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளவேண்டும்.


இன்று முற்றும் துறந்த சாமியாருக்கும் பெண் துணை கேட்கிறது. ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், சமூகத்திற்கு அவன் என்ன செய்கிறான் என்பதைதான் யோசிக்கவேண்டும்.


காதல் சக்கரவர்த்திகள் எல்லாம் தப்பித்துவிட்டார்கள். பாவம் காதல் மன்னன் மாட்டிக்கொண்டார். ஜெமினி தனது வாழ்க்கையில் எதையும் மறைத்ததில்லை. அவர் வெளிப்படையானவர். அதற்கே தனி தைரியம் வேண்டும்.
ஜெமினி கணேசன், கமலை பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியது பற்றி வாலி சொன்னார். கமலை பாலசந்தரிடம் மட்டுமல்ல, சின்னக் குழந்தையாக இருக்கும் போதே, ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தி களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைத்தவரே ஜெமினிதான்.


மிகவும் அழகாக நாட்டியம் ஆடக்கூடிய தெய்வநாயகி என்பவரை, இவர் திறமையானவர் என்று திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் ஜெமினி. அந்த தெய்வநாயகிதான் கே.ஆர் விஜயா.
ஜெமினியைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். ஒரு அக்ரகாரத்து வீட்டுப்பையன் இப்படி ஒரு உடல்வாகுடன் திகழ்கிறாரே என்று.


வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் காளை அடக்கும் வெள்ளையத்தேவனாக நடித்திருப்பார். அதே போல் சரஸ்வதி சபதத்தில், கோழை வீரனாக மாறி மல்லனோடு மோதும் காட்சியில் நடித்திருப்பார். அப்போது அந்த மல்லனை அப்படியே தோளில் தூக்கிபோட்டு எறிவார்.
ஜெமியின் தந்தையான ராமசாமி அய்யர் அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையர் என்று தேவர் குலத்தவர்களுடனே அதிகம் நட்புறவாடக்கூடியவர். அந்த வகையில் ஜெமினியும் சின்ன வயதில் இருந்தே தேவர்குலத்து சிறுவர்களுடன் பழகியிருக்கிறார். அவர்களிடம் இருந்து வீரத்தையும், உடல் தீரத்தையும் பெற்றிருக்கிறார்.


கல்யாண பரிசு படம் பார்த்து உண்மையில் நான் அழுதுவிட்டேன். அதில் வரும், உச்சக்கட்ட காட்சியில்... தனது முன்னால் காதலியும், தனது மனைவியின் தங்கையுமான கொழுந்தியாளுக்கு கல்யாணம் நடக்கும். அப்போது, தாயில்லாத தனது குழந்தையை கல்யாணப்பரிசாக கொளுந்தியாளிடமே விட்டுவிட்டு தனது அத்தனை சோகத்தையும் தனது முதுகில் காட்டி நடந்து போவார். இதுவரை எல்லோரும் முகத்தில்தான் சோகத்தைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஜெமினி, அந்த அத்தனை சோகத்தையும் தன் முதுகில் காட்டியிருப்பார். அந்தச் சோகம் சுமந்த முதுகில்தான் படமே முடியும். அப்படி தனது முதுகிலும் நடிப்பை வெளிப்படுத்திய ஒப்பற்ற நடிகர் ஜெமினி.

கருத்துகள் இல்லை: