கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள இராணுவம் தடை விதித்ததாகவும், எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டை அரசாங்கம் நேற்று நிராகரித்தது.
இனவாதக் கருத்துக்களினால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தூரமாகும் எனவும், நாட்டில் அரசியல் தீர்வு ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான 5 ஆவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும்.
இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அமைந்தது.
நாட்டைத் துண்டு போட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் நாமும் கைகோர்த்து செயற்படவேண்டும்.
கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தது முற்றிலும் தவறான கருத்தாகும். அவ்வாறு எதுவித குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களே அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்களும் இராணுவ முகாம்கள் அமைக்குமாறு கேட்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மத உற்சவம் நடத்த இராணுவம் தடைவிதித்ததாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். எந்த மத அனுஷ்டானத்தையும் நாம் தடை செய்யவில்லை. ஆனால் மத வைபவம் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை படைவீரர்களாக அனுஷ்டிக்க இடமளிக்கமாட்டோம். நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என்றார்.
வடக்கில் திட்டமிட்டு இராணுவ குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்து மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும் மங்கள சமரவீர தனது உரையின்போது கூறுனார். அவரின் உரையை பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் அடுத்து உரையாற்றினார். இதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக