ஞாயிறு, 28 நவம்பர், 2010

இனங்களிடையே மீண்டும் கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சில குழுக்களே சிங்கள மக்களை யாழ். குடாநாட்டுக்கு குடியேற அனுப்புகின்றன!

2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக ரூபா 214 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுடன் இவ்வருடம்(2010) பாதுகாப்புச் செலவினத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 13 பில்லியன் அதிகரிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.ஆனால் இவ்வருட (2010 ஆம் ஆண்டிற்கான) நிதி ஒதுக்கீட்டில் ரூபா 201 பில்லியனும் 2009 ஆம் ஆண்டுக்கான ரூபா 177 பில்லியனும் மட்டுமே பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 75 பில்லியனும் சுகாதார அமைச்சிற்கு 62 பில்லியனும் கல்வி அமைச்சிற்கு 31 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஏன் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எமக்குத் தெரியவில்லை.தற்பொழுது யுத்தம் முடிவுறுத்தப்பட்டு சமாதான சூழல் நிலவும் நிலையில் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்றிட்டத்தில் இவ்வாறான பெரிய தொகை பாதுகாப்புச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடாது.
மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பே ஆகும்.ஆனால்,இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மக்களது வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கக்கூடிய ஆக்கபூர்வமான முன்மொழிவுகள்/கருத்திட்டங்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. நுகர்வோர் பலமாக வயிற்றில் அடிக்கப்படுகிறார்கள். சாதாரணமானதும் எளிமையானதும் அதிக செலவற்றதுமான சோறு, கறி ஆக்கி உண்பதே ஒரு குடும்பத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இன்று ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தின் போது உற்பத்திப் பொருட்களது விலைகள் அதிகரிக்கப்படுகின்றமையே வழமையாக இருந்தது.ஆனால்,இந்த வரவுசெலவுத் திட்டத்தால் விலையுயர்வு தொடர்பில் எதுவும் செய்யமுடியாதிருப்பது தெரிகின்றது. யுத்தம் முடிவுறுத்தப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கடந்த பின்பும் இலங்கையில் நுகர்வோர் மாதாந்தம் தாம் விரும்பியவாறு கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர்.வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் அவர்களது மாத வருமானத்தின் மூலம் செலவினத்தை ஈடுசெய்ய முடிவதில்லை.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி 2001 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை அதிகரித்த வாழ்க்கைச் செலவினத்தாலும் குறைந்த வருமானத்தினாலும் மக்களது கொள்வனவு வலுவானது 60% த்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியற் திணைக்களத்தின் கூற்றுக்கமைய செப்டெம்பர் மாதத்திற்கான செலவுப்பொதி ரூபா 39,721,62 என்பதுடன் அரசதுறைப் பணியாளர் ஒருவரது மிகக்குறைந்த மாதாந்தப்படி ரூபா 16,980 உம் தனியார் துறைப்பணியாளர் ஒருவரது படி ரூபா 6,750 உம் ஒரு தோட்டத்தொழிலாளியின் நாளாந்தப்படி ரூபா 290 உம் ஆகக் காணப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டில் இதே மாதாந்த செலவுப்பொதி ரூபா 24,344.00 எனக் கணிப்பிடப்பட்டிருந்தது.இதிலிருந்து 2006 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையில் மாதாந்த செலவுப்பொதி ரூபா 14,377.62 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.இதற்கிடையில் 2009 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியினுடைய ஆண்டறிக்கையின்படி ஓர் இலங்கையரின் சராசரி மாதாந்த வருமானம் ரூபா 17,109.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள இப்புள்ளி விபரங்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் இலங்கைக் குடிமக்களால் எதிர்கொள்ளப்படும் பொறுப்புகளை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
உயர்பாதுகாப்பு வலயம்
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப்பிரகடனம் கொண்டு வரப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் எப்பொழுது கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சர் எனக்கோ அல்லது இந்தக் கௌரவ சபைக்கோ உரிய விளக்கம் கொடுப்பாரா? இவ்வுயர் பாதுகாப்பு வலயப் பிரகடனங்கள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டனவா?உண்மையிலே வடக்கிலே இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான பிரகடனத்திற்கு எந்த சட்ட அடிப்படையும் இப்போது இல்லை.வடக்கின் 30% பகுதியான வலிகாமம் வடக்கு படையினருடைய ஆதிக்கத்திலுள்ளதுடன் அவை உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.48 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த வலிகாமம் வடக்கில் 28 கிராம சேவகர் பிரிவுகள் படையினரின் ஆதிக்கத்திற்குட்பட்டுக் காணப்படுவதுடன் யாரும் சென்று மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை.12 கிராம சேவகர் பிரிவுகளிலேயே மக்கள் முழுமையாக குடியமர்ந்துள்ளனர் என்பதுடன் 05 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் பகுதியாகவே குடியமர்ந்துள்ளனர்.
பலாலி விமான நிலையம்,பலாலி ஆசிரியர் கலாசாலை,மயிலிட்டி மீன்பிடித்துறை,மயிலிட்டி இருதய சிகிச்சை வைத்தியசாலை,காங்கேசன்துறை துறைமுகம்,காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம்,மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம்,தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை,தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை,தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி ஆகியவை உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பகுதியினுள்ளேயே அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.வலிகாமம் வடக்கு, மண்டைதீவு,யாழ்ப்பாணத்திலிந்து கொழும்புத்துறை வரையான பகுதி, கரம்பகம்,எழுதுமட்டுவாள் வடக்கு,தெற்கு,நாகர்கோவில் மற்றும் மறவன்புலோ ஆகிய பகுதிகளும் உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பகுதியினுள்ளேயே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 100,000 பேரும் தென்மராட்சியிலிருந்து இடம்பெயர்ந்த 100,000 பேரும் மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர்வதற்கு உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பிரகடனத்தின் காரணமாக அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நாங்கள் தொடர்ந்த அடிப்படை உரிமைமீறல் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் அண்மையில் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், ஜேர்மனிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென்று ஏதும் இல்லையென்றும் கண்ணிவெடி அகற்றப்படவேண்டிய இடங்களே காணப்படுகின்றன என்றும் கூறியிருந்ததை இங்கு நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப்பெண்மணி இவ்வாறு அப்பட்டமாக பொய் கூறிவரும் துர்ப்பாக்கிய நிலையைவிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இனிமேலாவது அவர் வாயைத் திறக்குமுன்பு சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.ஒருவருடைய சொந்த இடத்தில் சென்று மீளக்குடியமர விடாது மறுப்பது அவருடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
இராணுவத்தினரை வெளியேற்றுதல்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஏறக்குறைய ஒரு இலட்சம் படையினர் வடக்கில் நிலைகொண்டிருந்தனர்.அவர்கள் இன்றும் அங்கேயே தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.சீன அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கிலே இவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என ஒரு பத்திரிகைச் செய்தியின் மூலமாக அறிகிறேன்.ஆசியாவிலேயே இலங்கை மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடõகவே காணப்படுகின்றது.இயல்புநிலையும் இராணுவ ஆட்சியிலிருந்து விடுதலையுமே இப்பொழுது தமிழர்களது தேவையாக உள்ளது.1990 ஆம் ஆண்டளவில் இருந்த நிலைக்கு அமைவாக படையினர் பின்னே சென்றுகொண்டு வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கவேண்டும்.
சிறைச்சாலைகள்
அளவுக்கதிகமான கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.உதாரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 145 ஆகும்.ஆனால்,ஏறக்குறைய 550 பேர் தற்போது அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடித் தன்மையைக் குறைப்பதற்காகத் தூர இடங்களில் மேலும் சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், அடுத்தவருடம் இதற்கான முதலீட்டுத் தொகையை விடுவிப்பதற்கு திறைசேரி நிராகரித்துள்ளதாக நான் அறிகின்றேன்.
போதிய நிதியின்மையால் வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியவில்லை.இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கடன்தொகை அந்த அளவிற்குப் போயுள்ளது என்பதுடன் நாட்டினுடைய வருமானம் அலுவலர்களுக்கான சம்பளங்களைக் கொடுப்பதற்கே போதுமானதாக உள்ளது. இந்நாட்டுக் குடிமகனது தலைக்கான கடன்தொகை 150,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.ஆதலால் வெளிநாடுகளின் முதலீட்டை உள்நாட்டில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர உயர் வட்டிவீதத்தில் வெளிநாடுகளில் கையேந்திக் கடன் வாங்குவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ளவேண்டும்.
தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல்
செலவினங்களைக் குறைக்கும்போது நாம் அவற்றின் உயர்ஸ்தானத்தில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும்.இலங்கை அரசை நடத்துவதற்கு 98 அமைச்சர்களுக்கு என்ன தேவைப்பாடு உள்ளது என எனக்குப் புரியவில்லை.720 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட ஜப்பான் நாட்டிலே ஆக 20 பேர் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.இலங்கையைப் போன்ற ஒரு நாட்டினை முகாமை செய்வதற்கு 20 அமைச்சர்களைக் கொண்டமைந்த ஓர் சிறிய அமைச்சரவை தாராளமாகப் போதுமானது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மில்லியன் கணக்கான தொகையினை களியாட்டங்களிலேயே செலவுசெய்து வருகின்றது.அண்மையில் பல மில்லியன் ரூபா செலவில் நடத்தப்பெற்ற திரைப்படக் களியாட்ட விழா இதற்கு ஓர் நல்ல உதாரணமாகும்.
எமது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றபோது அவருடன் 37 பேர் கூடச் சென்றிருந்தனர்.இவர்களுக்கு அங்கு என்ன தேவை இருந்தது?அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான தேவையற்ற செலவினங்களை இயன்றளவு குறைத்துக்கொள்ள வேண்டும் இதேவேளை, அண்மையில் 350 சிங்களக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தனர் என்ற செய்திபற்றிக் குறிப்பிடவிரும்புகின்றேன்.பின்னர் அவர்கள் நாவற்குழிக்குச் சென்று அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கிறார்கள்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதொடர்பில் சில விசாரணைகளை நடத்தியிருந்ததும் அதன்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னர் குடியிருந்ததாகவோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் அல்லர் என்பது தெரியவந்துள்ளது.
எங்களுக்கிடையில் கலகத்தை உண்டுபண்ண முனையும் சில குழுக்களே இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பிரச்சினைகளை உருவாக்குகின்றன.உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களாயின் அவர்கள் அங்கு மீள்குடியேற்றப்படல் வேண்டும்.ஆனால்,இவர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்துவந்த சில முஸ்லிம்கள் ஒரு காலத்தில் விரட்டப்பட்டவர்கள்.ஆனால்,இப்போது அவர்கள் முன்னர் குடியிருந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுகிறார்கள்.பயங்கரவாத தடைச்சட்டத்தையும் அவசர கால ஒழுங்கு விதிகளையும் நீக்கவேண்டும் என இந்த அரசாங்கத்தை வினயமுடன் வேண்டுகிறேன்.மேலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல தமிழ் அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென இத்தருணத்தில் மிக உருக்கமாக கோரிக்கை விடுக்கின்றேன்.

கருத்துகள் இல்லை: