ஞாயிறு, 14 நவம்பர், 2010

வெருட்டி பயமுறுத்தி மக்களை இருட்டிற்குள் வைத்திருந்து கொண்டு எங்கள் மக்களை நீங்கள் ஏமாற்றிய காலங்கள்

பணம் பறிக்கும் குறுகிய நோக்கங்களிற்காக “தேசியம்  என்ற பெயரினில் எங்கள் மக்களின் சுதந்திரத்தினைப் பறித்தெடுப்பதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த உரிமையைத் தந்தது? புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கூட தமிழ் மக்களான எங்களை சுதந்திரமாக வாழவிடாமல் எங்கள் மக்களின் அடிப்படை மனிதஉரிமைகளை சிறிதும் கூட மதித்து நடக்காமல் எங்கள் மக்களின் மேல் ஏறி மிதித்து அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தும் முனைப்பில் இருக்கும் நீங்களா புலத்தில் வாடிக்கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கு மனித உரிமைகளையும் எங்கள் தாய்மண்ணுக்கு விடுதலையையும் பெற்றுத் தரப் போகின்றீர்கள்?
இங்கே புலம் பெயர்ந்த நாடுகளில் எங்கள் மக்களுக்கு சுதந்திரத்தை மறுக்கும் நீங்களா அங்கே புலத்தில் எங்கள் மக்களுக்கு சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள்? தயவுசெய்து சற்று சிந்தியுங்கள். உங்களின் பொய்களாலும் புரட்டுகளாலும் வரட்டு கௌரவத்தாலும் நேர்மையற்ற ஈனச்செயல்களாலும் நீங்கள் மொத்த தமிழினத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதனைக் கூட புரிந்து கொள்ளாத அளவிற்கு சுயநலவாதிகளாக நீங்கள் என்று மாறினீர்கள்  அல்லது உங்களை யார் இப்படி இன்று மாற்றியது?
எங்கள் மக்களை நீங்கள் இதுவரையில் ஏமாற்றிய காலம் என்றோ மலையேறி விட்டது. உங்களின் சுயநலங்கள் நிறைந்த உள்நோக்கங்களும் உங்களின் வரட்டு கௌரவமும் ஆதிக்க குணமும் உங்களின் அதிகார வெறியும் கூட எங்கள் மக்களுக்கு இன்று மிக நன்றாகப் புரிந்து விட்டது. எங்கள் மக்களிடம் பொய்களையும் புரட்டுகளையும் வதந்திகளையும் அவிழ்த்துவிட்டு எங்கள் மக்களை வெருட்டி பயமுறுத்தி எங்கள் மக்களை இருட்டிற்குள் வைத்திருந்து கொண்டு எங்கள் மக்களை நீங்கள் ஏமாற்றிய காலங்கள் எல்லாம் என்றோ எங்கேயோ ஓடி மறைந்து விட்டன என்பதனையும் நீங்கள் என்றென்றும் உங்கள் ஞாபகத்தில் இனிமேலாகினும் வைத்திருங்கள்.
உங்களின் அதிகாரத்திற்குள்தான் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் இருக்க வேண்டும் உங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான்  முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும் எங்கள் அனைவரினதும் தலையெழுத்தை ஏழேழு ஜென்மத்திற்கு நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் அதிகார வெறியுடனும் நடந்து கொள்ளும் கனவான்களே தயவுசெய்து மனித சரித்திரத்தை சற்று ஒருதடவை நீங்கள் திரும்பிப் பாருங்கள். “நான் நான் மட்டும்தான் சரியானவன் எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்” என்று ஆணவமும் அகம்பாவமும் அதிகார வெறியும் கொண்டு முன்னர் ஆடியவர்கள் எல்லோரும் இன்று எங்கே? இவர்கள் சரித்திரத்தில் எங்கே இடம் பிடித்துள்ளார்கள்? இவர்கள் தங்களுக்கும் தங்களை நம்பியவர்களுக்கும் மட்டுமல்ல மொத்த மனித இனத்திற்கும் கூட அழிவை மட்டும்தானே தந்துவிட்டு சென்றிருக்கின்றார்கள்?
salasalappu

கருத்துகள் இல்லை: