நேற்று இரவு (11.10.2010) சென்னை சத்யம் திரையரங்கில் 'சோஷியல் நெட்வொர்க்' என்ற ஆங்கிலப் படத்தின் பிரீமியர் காட்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் அறிந்தோ அறியாமலோ தனுஷும் சிம்புவும் சந்தித்துக் கொண்டார்கள். தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார். சிம்புவும் வந்திருந்தார். சிம்புவையும் தனுஷையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படங்கள் எடுக்க திரையரங்கத்தின் வெளியே காத்திருந்தனர் பத்திரிகையாளர்கள். படத்தின் இடைவெளியின் போது இரண்டு பேருமே வெளியே வரவில்லை. படம் முடிந்து வெளியே வந்ததும் தனுஷும் சிம்புவும் 'ஹாய்' சொல்லிக் கொண்டார்கள். அப்போது ஐஸ்வர்யா தனுஷ் அருகில் இல்லை. தனுஷும் சிம்புவும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இந்த சந்திப்பு பலருக்கும் ஆச்சரியமாய் இருந்தது.
எல்லா நடிகர்களைப் போலவும் இவர்களும் நண்பர்களாய் இருந்தவர்கள் தான் இப்போதும் இருப்பவர்கள் தான். தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' படம் வெற்றி பெற்ற நேரம் சிம்பு நடித்த 'அலை' படம் படு தோல்வி. அப்போது வெடித்தது சண்டை.
தன் திரைப்படங்களில் தனுஷை தாக்கி வசனங்கள் பேசத் துவங்கினார் சிம்பு. 'மன்மதன்' படத்தில் யாரு முன்னாடி போறான்கிறது முக்கியம் இல்ல, கடைசியில யாரு ஜெயக்கிறான்கிறதுதான் முக்கியம்' என்ற சிம்புவின் வசனம் அவர் ரசிகர்களிடத்தில் பெரும் கைதட்டலை வாங்கியது.
'தேவதையைக் கண்டேன்' படத்தில் தன் காதலுக்காக கோர்ட்டில் கேஸ் போடுவார் தனுஷ். சிம்பு நடித்த 'வல்லவன்' படத்தில் 'நான் ஒன்னும் காதலுக்காக கோர்ட்டில் கேஸ் போட மாட்டேன்னு' நக்கல் அடிப்பார் சிம்பு. இப்படி சிம்பு படங்களில் தனுஷை ஏகத்துக்கும் தாக்கிப்பேச, தனுஷோ 'எனக்கு அரவிந்த்சாமி மாதிரி கலர்தான் கொடுக்கல, அட்லீஸ்ட் அப்துல் கலாம் மாதிரி அறிவையாவது கொடுத்திருக்கலாமே' என்று பாவமாக வசனம் பேசுவார். சமீபமாக 'படிக்காதவன்' படத்தில் 'என்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிக்காது, பாக்க பாக்க தான் பிடிக்கும்' என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு வசனம் பேசுவார்.
இது பற்றி ஒரு முறை தனுஷிடம் நீங்கள் ஏன் எப்பவுமே ரொம்ப பாவமா உங்களைத் தாழ்த்திக் கொண்டு வசனம் பேசுறீங்க என்று கேட்டதற்கு, என்னங்க நீங்க... நான் உண்மையைத் தானே சொல்றேன். நான் என்ன ஹிருத்திக் ரோஷன் மாதிரி கலர்கலர் காஸ்ட்யூம் போட்டு டான்ஸாடவா முடியும். ரொம்ப காமெடியா இருக்குமே!! என்று சொன்னார்.
சரி அத விடுங்க சிம்பு தன்னுடைய படங்களில் உங்களை காலாய்க்கிறாரே அது பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லையா என்று கேட்டதற்கு, ஆமாம் அது பற்றி நானே அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், நான் உங்களை திட்டுனா, நீங்க என்னை திட்டுங்க. இதில் என்ன இருக்கு. அதத்தான் ரசிகர்கள் எதிர்பாக்குறாங்க. அப்போதானே நாமும் வளர முடியும் என்று சொன்னார். ஆனால் அதுமாதிரி ஒருவரை திட்டி நடிக்க எனக்கு மனசு வரலை என்று பதில் சொன்னார் தனுஷ்.
சரி இதெல்லாம் பழைய மேட்டர், சிம்புவும் தனுஷும் நடிக்க இப்போது வாய்ப்பிருக்கா? இருக்கலாம்... என்பதே பலரின் பதில். சமீபமாக தன் பேட்டியில் மனம் திறந்த சிம்பு. நான் பழைய சிம்பு இல்ல. எல்லா தலைக் கனத்தையும் தூக்கி போட்டுட்டேன். இப்போது பரத்துடன் சேர்ந்து வானம் படம் நடிக்கிறேன். வேறு ஹீரோக்கள் கூடவும் நடிக்க ஆசை இருக்கு. இந்த வயசில் தானே அப்படி நடிக்க முடியும் என்று சொன்னார். அப்போ... தனுஷுடன் நடிப்பீங்களா என்று கேட்க, நடிக்க நான் ரெடி, நீங்க கதை வச்சிருக்கீங்களா? என்று கேட்டார் சிம்பு.
அப்போ தனுஷ், சிம்பு சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கு என்று தானே அர்த்தம். (ரஜினி கமல் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தனுஷ் சிம்பு இணைவதையும் பேசிக் கொள்கிறது சில கூட்டம்!)
அதை விட முக்கியமான மேட்டர் தனுஷ் நடிப்பில் 'ஆடுகளம்' இசை வெளியீடு முடிந்து ரீலிசுக்கு தயாராகி வருகிறது. சிம்பு நடித்த 'வானம்' இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கும் நிலையில் ஆடுகளம், வானம் இரண்டும் ஒரே நாளில் ரிலீசாகும் என்றும் சொல்லப்படுகிறது.
அடடா... மீண்டும் மோதலா !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக