ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

தே.மு.தி.க., - காங்., கூட்டணியில் மூன்றாவது அணி உருவாகுமா?

பத்து மாநகராட்சிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க., அதிரடியாக அறிவித்தது, தே.மு.தி.க.,வுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. "மதியாத வாசலை மிதிக்கவேண்டாம்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது அதிருப்தியை வெளியிட்டதாகவும், அதற்கு "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, தொடர்ந்து பேசுவோம்' என அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சமரசப்படுத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தி.மு.க., தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளதால் அக்கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள காங்கிரசும், அதிருப்தியில் இருக்கிற தே.மு.தி.க.,வும் புதிய கூட்டணியை உருவாக்குமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் தனித்து போட்டியிடலாமா? அல்லது தனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கலாமா? என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடும் மனநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் பத்து மாநகராட்சிகளின் மேயர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தே.மு.தி.க., வுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

"எதிர்கட்சியாக இருக்கிற எங்களிடம் இட பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அ.தி.மு.க., தனிச்சையாக மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது நியாயமா? எங்களை மதிக்காதவர்களை நாங்கள் தேடி செல்ல மாட்டோம். மதியாத வாசலை மிதிக்க வேண்டாம்' என எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது கட்சியினரிடம் ஆவேசமாக கேட்டுள்ளதாகவும், அப்போது அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், ""கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்' என கூறி சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளதாகவும், ஆனால், கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு அ.தி.மு.க., தரப்பில் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு உள்ளது. அதனால் தான் அ.தி.மு.க., வின் 100வது நாள் ஆட்சியை பற்றி எந்த கருத்தும் விஜயகாந்த் தெரிவிக்கவில்லை. சட்டசபையில் முதல்வரை தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் புகழ்ந்து பேசவும் விரும்பவில்லை. சட்டசபைக்கு தே.மு.தி.க., புதியவர்கள். அவர்களின் பேச்சுக்களை கன்னிப் பேச்சாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுக்கு பாலப்பாடம் நடத்துவதா? என்று கேட்டு உறுப்பினர்களின் மனம் வேதனைப்படும் அளவுக்கு விமர்சிக்கப்பட்டுள்ளோம்.

எங்கள் வளர்ச்சியை அ.தி.மு.க.,வுக்கு பிடிக்க வில்லை. இன்றைய எதிர்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் நாளைய முதல்வராக வந்து விடுவாரோ என்று அ.தி.மு.க., வினர் அச்சப்படுகின்றனர். கூட்டணி தர்மத்தை மதிக்கும் வகையில், எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் மேயர் தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவித்து விட்டனர்.சட்டசபை தேர்தலில் தாமரை இலை மீது விழுந்த தண்ணீரை போல தான் அ.தி.மு.க.,வுடன் எங்கள் உறவு இருந்தது. பரஸ்பரமான உறவு இல்லை. நாங்கள் என்ன முடிவு எடுக்க என்ற குழப்பத்தில் தான் இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க.,வினர் வந்தால் எங்கள் உறவு நீடிக்கும். இல்லை யென்றால் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை என்ற ரீதியில் நாங்களும் முடிவு எடுக்க வேண்டியது வரும்.

காங்கிரஸ் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தாலும் பேசுவோம். ஆனால், எங்கள் தலைமையை காங்கிரஸ் ஏற்க வேண்டுமே தவிர நாங்கள் காங்கிரசின் தலைமையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று அணியாக அமைந்தாலும் அமையலாம் அல்லது ஆளுங்கட்சியோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான போக்கையும் கடைபிடிக்கலாம். என்ன முடிவு என்பது விஜயகாந்திற்கு மட்டும் தான் வெளிச்சம்.இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் மாநிலக்குழு விரைவில் கூடுகிறது : உள்ளாட்சி தேர்தலில் மதுரை அல்லது திருப்பூர் மாநகராட்சிகளில் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த கட்சிக்கு மாநகராட்சியை ஒதுக்க வாய்ப்பு இல்லை என அ.தி.மு.க., கைவிரிவித்து விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பிரச்னை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அக்கூட்டத்தில் சிட்டிங் நகராட்சிகளான கோவில்பட்டி, சிதம்பரம், பழநி ஆகிய மூன்றையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: