ஞாயிறு, 7 நவம்பர், 2010

யாழ்ப்பாணக் குடாநாடும் தென்பகுதி உல்லாசப் பயணிகளும்……..!

.
தென்னிலங்கையில் இருந்து வடபகுதிக்கு குறிப்பாக, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தினமும் பெரும் எண்ணிக்கையான உல்லாசப் பிரயாணிகள் படையெடுப்பதன் விளைவாகத் தோன்றியிருக்கும் புதிய சூழ்நிலையில் அந்தப் பகுதி மக்கள் பல தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

உல்லாசப் பிரயாணிகளின் வருகையல்ல பிரச்சினை. அவர்களுடன் சேர்ந்து வருகின்ற விஷமத்தனமான பிரதிருதிகள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் பண்பு விழுமியங்களுக்கு ஏற்புடையதல்லாத காரியங்களிலும் ஆத்திரமூட்டும் வகையிலான நடவடிக்கைகளிலும் அகங்காரத்தனமாக ஈடுபடுவதே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.
இது குறித்து குடாநாட்டு மக்களினாலும் அவர்கள் மத்தியில் உள்ள கல்விமான்கள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களினாலும் பல மாதங்களாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்கவில்லை. இதனால் குடாநாட்டு மக்கள் பெரிதும் கவலைகொண்டிருந்தார்கள்.நிலைவரத்தின் பாரதூரத் தன்மையை சற்று காலந்தாழ்த்தியேனும் உணர்ந்ததனாற் போலும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள உளவியல் நடவடிக்கைப் பிரிவுடன் இணைந்து சிவில் விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு அலுவலகம் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கு வட பகுதியின் கலாசார பண்புகளையும் சமூக நடத்தைகளையும் பற்றி விளக்கமளிப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இத்திட்டம் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்கான நுழைவாயிலாக அமைந்திருக்கும் ஆனையிறவில் படையினரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது. தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும் உல்லாசப் பிரயாணிகள் கண்ணியமற்ற நடத்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்கவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே அவர் மேற்படி திட்டத்தை வகுத்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடாநாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கலாசார மற்றும் சமூக அக்கறைக்குரிய விடயங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் ஆனையிறவில் விநியோகிக்கப்படுவதுடன் சுற்றாடல் பாதுகாப்பு, யாழ்ப்பாண மக்களினால் பேணிப்பாதுகாக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து உல்லாசப் பிரயாணிகளுக்கு விளக்கவுரைகளும் நிகழ்த்தப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில் குடாநாட்டுக்குள் தவிர்க்கப்பட வேண்டிய நடத்தைகள் குறித்து தென்னிலங்கைப் பயணிகளுக்குப் படையினர் போதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தென்னிலங்கையில் இருந்து சிங்கள மக்கள் உல்லாசப் பிரயாணிகளாக வந்துபோவதை குடாநாட்டு மக்கள் எதிர்க்கவில்லை. போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் அவர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளின் மக்களுடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு விரும்புகிறார்கள். போக்குவரத்துப் பிரச்சினைகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் இந்த ஊடாட்டச் செயற்பாடுகள் கணிசமான அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆனால், குடாநாட்டு மக்கள் இன்னமும் வழமை வாழ்வுக்கு முழுமையாகத் திரும்பவில்லை. போரின் காயங்களினால் அவர்கள் இன்னமும் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தங்களது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் நிறுவனங்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய நடத்தைகளிலும் கண்ணியமற்ற செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்பதையே உல்லாசம் செய்ய வருபவர்களிடம் அந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த உண்மை சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லையானால்,நச்சுத்தனமான பிரசாரங்களைச் செய்யக்கூடிய அரசியல் சக்திகளின் தூண்டுதலினால் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதே எமது அபிப்பிராயமாகும்.
கடந்த மாதப் பிற்பகுதியில் உல்லாசப் பிரயாணிகள் என்று கூறிக்கொண்டு யாழ்நகருக்கு பல பஸ்களில் வந்திருந்த தென்னிலங்கைப் பிரகிருதிகள் செய்த இரு அடாவடித்தனங்களை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. யாழ்.பொதுநூலகத்திற்குச் சென்ற இவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அறிவுறுத்தலையும் மீறி உள்ளே நுழைந்து சேதம் விளைவித்து அட்டகாசம் செய்திருக்கிறார்கள். அடுத்து சில தினங்கள் கழித்து இராணுவத்தினரின் பலத்த பிரசன்ன முடைய பகுதியில் அமைந்திருக்கும் தந்தை செல்வாவின் நினைவுத்தூபி வளாகத்தில் அதன் புனிதத் தன்மையை அவமதிக்கும் வகையில் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இரு சம்பவங்களிலும் ஒரே குழுவினர் தான் ஈடுபட்டார்களா என்பது தெரியவில்லை. அது வேறுவிடயம். ஆனால், இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் எவருமே கைது செய்யப்படவில்லை. அவை குறித்து மேற்கொண்டு விசாரணைகளை நடத்துவதற்கு பொலிஸார் முன்வந்ததாகவும் தெரியவில்லை. இத்தகைய நிகழ்வுப் போக்குகள் உள்நாட்டுப் போர் மூளுவதற்கு முன்னதாக அரசாங்கத்தின் செல்வாக்கிற்குட்பட்ட சக்திகளின் அனுசரணையுடன் யாழ்நகரில் தென்னிலங்கைக் குண்டர்களினால் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களையே தவிர்க்க முடியாமல் நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
1981 நடுப்பகுதியில் இடம்பெற்ற யாழ்.பொதுநூலக எரிப்புச் சம்பவம் இலங்கைத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகவும் மிலேச்சத்தனமான இனவெறிக் கொடுமை என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்கள் மீதான அரசியல் அடக்குமுறை தொடர்பில் உலகை விழிக்க வைத்த நினைவை விட்டகலாத பாரதூரமான சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதற்குப் பிறகு பொதுநூலகம் தொடர்பான எந்தவொரு விடயமுமே உலகின் எந்த மூலையிலும் வாழக்கூடிய தமிழர்களை இலங்கையின் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நினைவுக்குக் கொண்டுவரும் வலிமை கொண்டவையாக மாறிவிட்டன என்பதில் சந்தேகமில்லை. கொழும்பில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசாங்கத்துக்கும் கூட யாழ்.பொதுநூலகத்தின் நலன்களில் அக்கறை காட்டுவதென்பது தமிழர்களுடன் நல்லிணக்கப் போக்கை கடைப்பிடிப்பதாக உலகிற்கு காண்பிப்பதற்கான ஒரு மார்க்கமாகவும் இருந்து வருகிறது. “யாழ்.பொதுநூலகம் மீண்டும் தாக்குதலுக்குள்ளானது’ என்ற தலைப்பில் கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகையொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியை அடுத்தே பொதுநூலகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்து அரசாங்கம் அதன் பிரதிபலிப்பை வெளிக்காட்டியது, “பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் விசாரித்தறிந்ததை தொடர்ந்து இந்தச் சம்பவத்துக்கும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினருக்கும் தொடர்பேதும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறோம்’ என்று ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை விடுத்தது. அத்துடன் அந்த விவகாரத்துக்கு அரசாங்கம் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. உண்மையில் அன்றைய தினம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது என்ன, அதில் ஈடுபட்டவர்கள் யார், அவர்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தி அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்வரை இது விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு முடிவுக்கு வந்துவிடமுடியாது என்பதே எமது உறுதியான அபிப்பிராயமாகும்!

கருத்துகள் இல்லை: