minnambalam :ஒரு பக்கம் நீட் தேர்வு, ஒரு பக்கம் ஆன்லைன் வகுப்புகள் என தமிழக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செல்போன்கள் இல்லாததாலும், வகுப்புகள் புரியாததாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. துபாயில் வேலை பார்த்து வந்த இவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பி, ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகள் சுபிக்ஷா, மதுரையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பயின்று வந்த நிலையில், தொடக்கத்தில் உற்சாகத்துடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பின் ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை எனவும் கூறி வந்திருக்கிறார்.
காலை 4 மணி முதல் இரவு 11மணி வரை படித்து விட்டு அதன் பிறகுதான் படுக்கச் செல்வாராம். அதோடு பத்தாம் வகுப்பு என்பதால் பாடச் சுமையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போய்விடுவோமோ என அச்சத்தில் சுபிக்ஷா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி மாலை கழிவறைக்குச் சென்ற சுபிக்ஷா, தனது தாயின் சேலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் உறவினர்கள் கூறுகையில், “ஆன்லைன் வகுப்புகள் எரிச்சலாக இருக்கிறது என்று கூறி வந்தாள். போகப் போக சரியாகிவிடும் என்று தெரிவித்தோம். சிறு வயதிலிருந்தே பேச்சு போட்டிகளில் திறமை மிக்கவள். மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல்வர் கையில் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்” என கூறுகின்றனர். படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால் எங்களிடம் கூட பேச அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
சிறுவயது முதலே, படிப்பிலும் பேச்சு போட்டியிலும் கலந்துகொண்டு பரிசை தட்டிச் செல்லும் சுபிக்ஷாவின் வீடுகளில் அவள் வாங்கிய பரிசு பொருட்கள் எல்லாம் நிறைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சுட்டியாகவும், படிப்பில் திறமை மிக்கவராகவும் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக