minnampalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் மதுரை காட்டியது. “அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்துவது ஒன்றே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மு.க.அழகிரியின் குறிப்பிடத்தக்க பணியாக இருந்து வருகிறது. கலைஞரின் மூத்த மகனான மு.க.அழகிரி அவர் இருக்கும்போதே ஸ்டாலினுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எதிர்த்து வெளிப்படையாகப் போர்க்கொடி தூக்கினார். கட்சி தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று பகிரங்கமாகத் தலைமையை எச்சரித்தார். ஒருகட்டத்தில் திமுக தலைவரான தனது தந்தைக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் பெரும் தலைவலி ஆகிப்போய் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி.
இதையடுத்து அவரைச் சுற்றி கணிசமாக இருந்த தென்மாவட்ட திமுக புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினார்கள். கலைஞர் இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த, அழகிரி ஏற்பாடு செய்த ஊர்வலம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அது முதற்கொண்டு விமான நிலைய பேட்டிகளைத் தவிர வேறெந்த வகையிலும் அரசியல் செய்யாதவராக இருந்தார் அழகிரி.
அழகிரியை பாஜக கையில் எடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பயன்படுத்தப் போகிறது என்றும்... ரஜினி கட்சி தொடங்கினால் தென்மாவட்டத்தில் அதன் முக்கியத் தலைவராக அழகிரி இருப்பார், இது தொடர்பாக அழகிரியுடன் ரஜினி போனில் பேசி இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. சில நாட்களாகவே வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அழகிரி கலைஞர் திமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும், அதன் மூலம் ஸ்டாலினுக்குக் குடைச்சல் கொடுக்கப் போவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அழகிரியை திமுகவுக்கு எதிராக குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக எந்த வகையிலேனும் பயன்படுத்தி திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பெருந்திட்டம் சென்னையிலும் டெல்லியிலும் தீவிரமாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் நடந்தாலும் அழகிரி சில வாரங்களாக தான் வழக்கமாக சந்திக்கும் தன்னுடைய ஆதரவாளர்களைக்கூட சந்திக்காமல் தனிமையிலே தான் இருக்கிறார். மதுரை புறநகரில் இருக்கும் பண்ணை வீடு, அதை விட்டால் தனது வீடு என்ற ரீதியிலேயே அவரின் சமீபத்திய நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன் மதுரையிலிருந்து கோபாலபுரத்துக்கு ஒரு தகவல் சென்றது. அழகிரிக்கு உடல்நலம் சரியில்லை என்றும் கால்கள் சற்று வீங்கியிருக்கின்றன என்ற அந்தத் தகவல் கோபாலபுரம் உறவினர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கால்கள் வீங்கியதால் உடல் நலனை பாதிக்கக் கூடிய சில பழக்க வழக்கங்களையும் முற்றாக நிறுத்திவிட்டார் அழகிரி.
முன்பெல்லாம் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தனது ஆதரவாளர்களீடமும் திமுகவை பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வது அழகிரியின் பழக்கம். ஆனால் சில நாட்களாகவே அந்தப் பழக்கத்தையும் நிறுத்திவிட்டார்.
இதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது. மதுரை திமுக மாவட்டச் செயலாளர் தளபதியை சில நாட்கள் முன்பு அலைபேசியில் அழைத்திருக்கிறார் ஸ்டாலின். அது வழக்கமாக ஸ்டாலின் பேசும் எண் அல்ல.
மதுரை கட்சி நிலவரம் பற்றி பொதுவாக சில நிமிடங்கள் பேசிய ஸ்டாலின், அழகிரியின் வீட்டுக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் போனை அவரிடம் தரும்படி கூறியிருக்கிறார். அதன்படி தளபதியும் அழகிரியின் வீட்டுக்குச் சென்று போனைக் கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டார். அந்த போனில் அழகிரியிடம் பேசிய ஸ்டாலின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு குடும்பத்தினருடனும் சற்று நேரம் பேசியிருக்கிறார். இந்த போன் உரையாடலுக்குப் பிறகே ஸ்டாலினையும், அவர் குடும்பத்தினரையும் பற்றி தனது வட்டாரத்தில் கடுமையாகப் பேசுவதை நிறுத்திவிட்டார் அழகிரி என்கிறார்கள்.
அழகிரி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டாலும் அதன்பின் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது கூட அதிகமாக சிரித்துப் பேசியதில்லை இருவரும். உதயநிதி இளைஞரணிச் செயலாளரான பிறகு அழகிரியின் கோபம் மேலும் அதிகமானது. இந்த நிலையில் அழகிரிக்கு உடல்நலக் குறைவு என்றதும் ஸ்டாலினே அவரைத் தொடர்புகொண்டு பேசியிருப்பது குடும்ப ரீதியிலான அக்கறையான விசாரிப்பா அல்லது இந்த அழைப்பில் அரசியலும் இருக்கிறதா என்று இந்த உரையாடலைப் பற்றி அறிந்த ஓரிரு திமுக புள்ளிகள் மட்டும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் ஆன இந்த உரையாடல்கள் தொடர்ந்தால் ஒருவேளை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராகப் பயன்படுவார் என எதிர்பார்க்கப்படும் அழகிரி, திமுகவுக்கே பயன்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்
1 கருத்து:
இருவரும் இணைந்து கலைஞருக்கு வெற்றி மாலை தெரிவிக்கவேண்டும்.அடுத்தவர்கள் சொல்லுவதை கேட்காமல் உண்மையான முடிவை சேர்ந்து எடுக்கவும்.இது முக்கியமான தருணம் உங்களில் யார் வீழ்வது என்று எண்ணாமல் உங்களின் உடன்பிறப்புகளை பாதுகாக்கும் பொறுப்பு திமுக விற்கு உண்டு
கருத்துரையிடுக