(எல்ஏசி) அமைந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய படையினருடனான மோதலில் சீன ராணுவ தரப்பு பலத்த சேதத்தை எதிர்கொண்டதாக இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்ஏசி பகுதியில் நிர்ணயிக்கப்படாத எல்லை கோடு தொடர்பாக இரு தரப்பு வீரர்களும் மோதிய சம்பவத்தில் கடந்த ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். ஆனால், சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்பு விவரத்தை இதுவரை அந்நாடு அலுவல்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் முறையாக சீனாவுடன் ஆன மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கியிருக்கிறார். சீன ராணுவத்துடன் இதுவரை இல்லாத வகையில் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடந்த மோதல் இருந்தாக ஒப்புக்கொண்ட ராஜ்நாத் சிங், தற்போதைக்கு எல்ஏசி மட்டுமின்றி மேலும் ஆழமான பகுதிகளில் தனது துருப்புகளை சீனா பெருமளவில் குவித்து வருவதாக தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கில் கோக்ரா, கோங்கா லா, பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக்கரை பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பதற்றம் தொடர்கிறது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
கிழக்கு லடாக்கை கடந்த எல்லை பகுதியில் சீனாவின் படைகள் குவிப்பு செயல்பாடு, 1993 மற்றும் 1996ஆம் ஆண்டில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை கருதுகிறது.
இது குறித்து மக்களவையில் விளக்கிய ராஜ்நாத் சிங், சீன படையினர் தாக்குதலில் ஈடுபட்டபோது, இந்திய படையினர் உரிய வகையில் பதிலடி கொடுத்ததாகவும், இந்திய பாதுகாப்பு நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், எல்ஏசி பகுதியில் பதற்றம் தொடருவதால் இரு தரப்பு ராணுவ கட்டளை அதிகாரிகள் நிலையிலான கூட்டம், கடந்த ஜூன் 6ஆம் தேதி நடந்தபோது எல்ஏசி பகுதியில் பரஸ்பரம் முன்னேறாமல் பின்வாங்கிக் கொண்டு கண்காணிப்பை தொடர ஒப்புக் கொள்ளப்பட்டதாக ராஜ்நாத் சிங் விளக்கினார்.
ஆனால், அதன் பிறகும் ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் வன்முறை மோதலைத் தூண்டிய சீன படையினருடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது என்றும் அந்த சம்பவத்தில் இந்திய எல்லையை பாதுகாக்க முற்பட்ட அதே சமயம், சீன தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்றும் ராஜ்நாத் சிங் விவரித்தார்.
ஆகஸ்ட் மாதம் என்ன நடந்தது?
மக்களவையில் இந்தியா, சீனா இடையிலான எல்லை பதற்றம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வாறு இருந்தது என்று ராஜ்நாத் விவரித்தார்.
"தற்போதைய எல்லை பதற்ற சூழ்நிலைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண இந்தியா விரும்புகிறது. இது தொடர்பாக ராஜீய மற்றும் ராணுவ நிலையிலான தொடர்புகளை சீனாவுடன் வைத்துள்ளோம். இந்த விவாதத்தின்போது மூன்று முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.
முதலாவதாக, எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டு எல்லையை மதிப்பது, இரண்டாவதாக, இரு தரப்பும் தற்போது நிலைகொண்டிருக்கும் பகுதியை மீறி முன்னேறிச் செல்லக்கூடாது, மூன்றாவதாக இரு தரப்பிலும் எல்லை கண்காணிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து உடன்பாடுகளையும் மீறாமல் அவற்றை மதித்துச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது" என்று ராஜ்நாத் சிங் விளக்கினார்.
இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்த வேளையில், கடந்த ஆகஸ்ட் 29 முதல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சீன ராணுவத்தினர், ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாங்கோங் ஏரியின் தென் பகுதியில் அவர்கள் நிலைகொண்டிருந்த பகுதியை மீறி முன்னேறி வர முயன்றார்கள் என்று ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
ஒருபுறம் இந்திய எல்லையை பாதுகாக்க உறுதிபூண்டிருந்த வீரர்கள், மறுபுறம் அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்கவும் பரஸ்பரம் நுட்பமான இந்த விவகாரத்தில் அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
மாஸ்கோவில் என்ன நடந்தது?
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4ஆம் தேதி, மாஸ்கோவுக்கு சென்றபோது அங்கு வந்திருந்த சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எல்லை விவகாரத்தில் சீன வீரர்களின் நடவடிக்கை, இரு தரப்பு பரஸ்பர நல்லுறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவுபடுத்தியதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் எல்லையில் அமைதியை நிலைநாட்ட ஒப்புக்கொண்டதாகவும், சிக்கலான எல்லை விவகாரத்தில் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சவாலான இந்த கட்டத்தை களத்தில் நமது படையினர் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள் என்பதால் அவர்களை நினைத்து நாடாளுமன்றம் பெருமிதப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
எல்லை பதற்றம் தொடர்பாக மேற்கொண்டு தகவல் வெளியிடுவது களப்பணியில் உள்ளவர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை சிக்கலாக்கும் என்று கூறி மேற்கொண்டு தகவல்களை வெளியிட தன்னால் இயலவில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
எல்லை விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
வெளிநடப்பு செய்த காங்கிரஸ் எம்.பிக்கள்
முன்னதாக லடாக்கில் சீன படையினரின் அத்துமீறல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சிலர் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு குரல் கொடுத்தார்கள்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்க மக்களவை சபாநாயகர் மறுத்தார். இதையடுத்து, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராகுல் காந்தி எங்கே?
இதற்கிடையே, மக்களவை அலுவலில் பங்கேற்க, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக வரவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜ்நாத் சிங்கின் விளக்கம் தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ராகுல் காந்தி, "பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையின் மூலம் சீன அத்துமீறல் விவகாரத்தில் இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோதி தவறாக வழிநடத்தியருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்திய ராணுவத்துடன் நாடு எப்போதும் உடனிருக்கும். ஆனால், மோதி ஜி, நீங்கள் எப்போது சீனாவுக்கு எதிராக நிற்கப்போகிறீர்கள்? எப்போது சீனாவிடம் இருந்து நமது நிலத்தை திரும்பப்பெறப் போகிறீர்கள்? சீனாவின் பெயரை குறிப்பிட அஞ்சாதீர்கள்" என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக