வெள்ளி, 18 செப்டம்பர், 2020

200 தொகுதிகளில் உதயசூரியன்: காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

 200 தொகுதிகளில் உதயசூரியன்:  காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளிலாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பொதுக்குழுவுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் நடந்த தலைமை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதுகுறித்து மின்னம்பலத்தில் 200 தொகுதிகளில் உதயசூரியன் - முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  திமுக தலைமையில் நடைபெற்றுள்ள இந்த ஆலோசனை காங்கிரஸ் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதன் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சிகள் 200 தொகுதிகள் என்றால் மீதி தொகுதிகள்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற சுய சின்னங்களில் நிற்பவர்களுக்கா என்ற கேள்வி காங்கிரஸ் தலைமை வரை எதிரொலித்துள்ளது.  இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது,

“திமுக எப்போதுமே ஒரு விஷயத்தை நேரடியாக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சொல்லாது. தான் சொல்ல நினைக்கும் விஷயத்தை மெல்ல மெல்ல கசிய விடும். அது ஊடகங்களில் செய்தியாக வரும். பின் அதற்கு என்ன ரியாக்‌ஷன் வருகிறது என்று பார்த்து அதன்படியே அந்த விஷயத்தை வலியுறுத்தும்.

இந்த வகையில்தான் இப்போது மீண்டும் திமுகவில் இருந்து தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய அழுத்தங்கள் மெல்ல மெல்ல செய்திகளாக கசிந்துவருகின்றன. 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுத்துவிட்டதால்தான் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போய்விட்டது என்று திமுகவில் கூறி வருகிறார்கள். ஆனால் 2016 தேர்தலில் காங்கிரஸ் நின்ற 41 தொகுதிகளில் குறைந்தது முப்பது இடங்களில் வெற்றிபெற்றிருந்தால் திமுகதான் ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் அதிக இடங்களில் ஜெயித்துவிட்டால் ஆட்சியில் பங்கு கேட்கும் என்பதால் திமுகவே காங்கிரஸின் பல தொகுதிகளில் முழுமையாக தேர்தல் பணியாற்றவில்லை. திமுக நின்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் நின்ற தொகுதிகளில் 20% இடங்களே ஜெயிக்க முடிந்தது.

2016 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது 8 தொகுதிகள். கரூர் தொகுதியில் 441 வாக்கு வித்தியாசத்திலும், தென்காசி தொகுதியில் 462 ஒட்டு வித்தியாசத்திலும் இதேபோல மேலும் சில தொகுதிகளில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் தோற்றது. அங்கெல்லாம் திமுக 100 சதவிகித ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் காங்கிரஸ் ஜெயித்திருக்கும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிட்டார். இவரை ஜெயிக்க விடக் கூடாது என்று திமுகவினர் வெளிப்படையாக செயல்பட்டதால் சுமார் 2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

தேர்தல் தோல்விக்குப் பின் திருநாவுக்கரசர் போன்றோர் திமுக தலைவர் கலைஞரிடம் திமுகவினர் தங்களை எவ்வாறு திட்டமிட்டு தோற்கடித்தனர் என்பதை மனுவாகவே கொடுத்துள்ளனர். குறிப்பாக எஸ்.டி. ராமச்சந்திரனுக்கு எதிராக திமுகவினர் எப்படியெல்லாம் வேலை பார்த்தனர் என்பதை கலைஞருக்கு இருபது பக்க அளவில் விரிவான புகாராக அளிக்கப்பட்டது. அப்போது நம் கையை வைத்து நம் கண்ணையே குத்திக்கொண்டோம் என்று கலைஞர் பேசியது இதை அடிப்படையாக வைத்துதான் என்று கூட பேசப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும் 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக வேலூர், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் திமுக அணியை கடுமையாக பாதித்தது. மக்கள் நலக் கூட்டணியும் வாக்குகளைப் பிரித்தது. இதுபற்றியெல்லாம் ஆராயாமல் காங்கிரஸ் நின்ற தொகுதிகள் எல்லாம் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்றும், எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கக் கூடாது என்று சொன்னால் அது திமுக தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் அமையும்” என்று கூறுகிறார்கள்.

மேலும், “திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது என்று ஏற்கனவே சிலர் பேசி வரும் யூகங்களை உண்மையென மக்கள் நம்பிவிடக் கூடும். இதையெல்லாம் கணக்கில் வைத்துதான் திமுக முடிவெடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: