dailythanthi.com :
இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கையை
அமல்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள குமாரசாமி, நாட்டின்
ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடாது என கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில்
பல்வேறு மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் கன்னடம் உள்பட பிற
மொழிகள் மீது இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இன்று (அதாவது நேற்று) கொண்டாடிய இந்தி தின விழா கூட அத்தகைய நோக்கம்
கொண்டது தான். மொழி ஆணவத்துடன் கொண்டாடப்படும் இந்தி தின விழாவுக்கு
கன்னடர்களின் எதிர்ப்பு உள்ளது. இந்தி தேசிய மொழி அல்ல. அத்தகைய ஒரு அம்சம்
அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை.
>ஆயினும் இந்தி தேசிய மொழி என்று முன்னிறுத்தும்
முயற்சி முன்பு இருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தற்போது
மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் பிற மொழியினர் கிளர்ந்து எழுவதற்கு
முன்பு இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இந்தி திணிப்புக்கு
கற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்
மொழிகளை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் ஒரு மொழியை திணித்து கற்றுக்கொள்ள
கட்டாயப்படுத்தினால் அது சாத்தியமில்லை.நாட்டின்
ஒற்றுமை, கலாசாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இந்தி தின விழா
கொண்டாடுவதை ரத்து செய்ய வேண்டும். இந்தி தின விழா கொண்டாடுவது போல்,
கன்னடம் உள்பட பிற மொழிகளின் தின விழாவையும் கொண்டாட வேண்டும். நவம்பர்
1-ந் தேதியை கன்னட தினமாக கொண்டாட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில்
343, 344, 345 ஆகிய பிரிவுகளில் இந்திக்கு ஊக்கம் அளிக்கும் குழப்பமான
அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் அமைப்பு
சட்டத்தில் அடிக்கடி திருத்தங்களை செய்து வரும் பா.ஜனதா, இதையும் மாற்ற
வேண்டும். இதன் மூலம் கன்னடம் உள்பட பிற மொழிகளை பாதுகாக்க வேண்டும். இந்தி
விழாவை போல் மும்மொழி கொள்கையை முன்னிறுத்தும், தேசிய கல்வி கொள்கையிலும்
இந்தியை திணிக்கும் முயற்சி இடம் பெற்றுள்ளது. இருமொழி கொள்கை இருந்தால்
என்ன பிரச்சினை?. இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மும்மொழி கொள்கை
பின்பற்றப்படுகிறதா?.
இந்தி பேசாத மாநிலங்களில்
மட்டும் ஏன் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையை
மத்திய அரசு ஏற்கக்கூடாது. சமீபகாலமாக இந்தி மொழி சித்தாந்த ரீதியாக
மாற்றப்பட்டு வருகிறது. தேசிய வாதம், தேசபக்தி, இந்துத்துவாவுடன் இந்தி
மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி மிகப்பெரிய தேசத்துரோகம்.
பல்வேறு மொழி பேசும் நமது நாட்டில், இந்தி மூலம் தேசபக்தியை ஏற்படுத்த
முயற்சி செய்வது சரியா?. இது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால்.
தென்இந்தியாவில்
உள்ள மாநிலங்களில் கர்நாடகத்தில் இந்தியை எளிதாக புகுத்திவிடலாம் என்று
சிலர் திட்டமிட்டு உள்ளனர். இதற்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் நடந்து
கொள்ளும் விதமும் ஒரு காரணமாக இருக்கலாம். கன்னடர்கள் நல்லிணக்க குணம்
கொண்டவர்கள். அதை பலவீனம் என்று கருத வேண்டாம். கன்னடர்களுக்கு இன்னொரு
குணம் உள்ளது. அது வெடித்தால் என்ன ஆகும் தெரியுமா?.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக