சனி, 19 செப்டம்பர், 2020

இயக்குநர் பாரதிராஜா : “என் முதல் பட ஹீரோயின் ஶ்ரீதேவி இல்ல; ஜெயலலிதா…!

“என் முதல் பட ஹீரோயின் ஶ்ரீதேவி இல்ல; ஜெயலலிதா…?!” – இயக்குநர் பாரதிராஜா

2013-ல் விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பாரதிராஜா அளித்த பதில்கள் இங்கே.. `என் இனிய தமிழ் மக்களே’னு பாசமாப் பேசுறீங்க. ஆனா, தமிழர்களின் கலாசார அடையாளமான வேட்டி, சட்டையைத் தவிர்த்துட்டு எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்லயே இருக்கிறீங்களே… ஏன் சார்?”

“அன்னசிங்… 

நம்ம சொஸைட்டில பார்த்தீங்கன்னா எப்பவுமே பிரபலங்கள் பத்தி ஒரு இமேஜ் இருக்கும். தமிழ்நாட்டுல எந்தப் பிரபலத்தின் பேர் சொன்னாலும் டக்குனு நம்ம மனசுல வந்துபோறது அவங்க தோற்றம்தான்.

பெரியார்னா, வெள்ளைத் தாடி, கறுப்புச் சட்டை. எம்.ஜி.ஆர்னா, பஞ்சு போன்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி. கலைஞர்னா, தோள் துண்டு, கறுப்புக் கண்ணாடி. மேடம்னா, கோட்டு போல சேலை அணிந்த தோற்றம். அப்படித்தான் பாரதிராஜான்னு சொன்னா… ஜீன்ஸ், டி-ஷர்ட் ஞாபகம் வர்ற அளவுக்கு இமேஜ் உண்டாகிருச்சு. அதே சமயம், ஐ லைக் திஸ் காஸ்ட்யூம்! அதனால இமேஜைத் தொந்தரவு பண்ணாம விட்டுட்டேன்!”

அன்பு மாதவன், சென்னை-14.

நீங்கள் பார்த்துப் பெருமைப்படும், பொறாமைப்படும் இயக்குநர் யார்?”

“1982-ம் வருஷம்னு நினைக்கிறேன்… ஓர் இளைஞன் என் ஆபீஸுக்கு வந்தார். வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் ரத்னத்தோட பையன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்ட அந்த இளைஞன், என்கிட்ட ஒரு கதை சொன்னார்.

நவீனமா, அதே சமயம் ரொம்ப க்ளாஸிக்கலா இருந்தது அந்தக் கதை. எக்ஸ்ட்ரார்டினரி ஸ்டோரி.ஆனா, நானே அப்போ வளரும் இயக்குநர்தான். அதனால அந்தப் படத்தை அப்போ நான் பண்ண முடியாதுனு சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிட்டேன்.

பின்னாடி அந்த இளைஞன் இயக்கிய `பகல் நிலவு’ படம் பார்த்து அசந்துபோனேன். யெஸ்… ஹி இஸ் மணிரத்னம்.

அவருடைய `மௌன ராகம்’, `நாயகன்’ படங்கள் அவர் மேல பெரிய மரியாதையை உண்டாக்குச்சு. நான் பெருமைப்படும் பொறாமைப்படும் ஒரே இயக்குநர் மணிரத்னம் மட்டும்தான்.

இந்திய அளவில் சிறந்த 10 இயக்குநர்கள்னு பட்டியல் போட்டால், அதில் மணிரத்னத்துக்கு முக்கியமான இடம் உண்டு.

இந்தியாவில் இருக்கும் உலகத் தரப் படைப்பாளி மை லவ்வபிள் டைரக்டர் மணிரத்னம். அவருடைய `கடல்’ படத்தை எல்லாரும் பலவிதமாக விமர்சனம் செஞ்சாங்க. ஆனா, `கடல்’ படம் நான் முழுமையாக அங்கீகரிக்கும் படம்!”

எல்.தாமரை, காஞ்சிபுரம்.

“கண்ணதாசன் – வைரமுத்து… ஒப்பிடுங்க?”

“நான் சின்ன வயசுல இருந்தே வியந்து பார்த்த மகா கவிஞன் கண்ணதாசன். என் முதல் படமான `16 வயதினிலே’ படத்தில் `ஆட்டுக் குட்டி முட்டையிட்டு’னு இறவாப் புகழ்கொண்ட பாடல் கொடுத்தவர்.

தமிழ் சினிமாவின் மிகச் சுமாரான பல படங்களைக்கூடத் தன் பாடல் வரிகளால் வரலாற்றில் இடம் பிடிக்கவைத்த பிறவிக் கவிஞன்… கவியரசர்!

அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என் மண்ணின் மகாகவி வைரமுத்து. என்னுடைய மண் சார்ந்த படங்களுக்குத் தனது வைர வரிகளால் உயிரூட்டியவர் வைரமுத்து. நான் விதை போட்டேன்… இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறார் வைரமுத்து.

இரண்டு பேருமே தமிழ்த் தாயின் அற்புதமான தவப்புதல்வர்கள்!”

ராசி.அன்பழகன், சோளிங்கநல்லூர்.

``உங்கள் அம்மா கருத்தம்மா உங்களுக்கு எந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள்?”

“கருத்தம்மா இல்லைன்னா, இந்த பாரதிராஜா இல்லை. அரசாங்க வேலையை உதறிட்டு சென்னைக்குப் புறப்பட்டப்போ, என் எல்லா உறவுகளும் கறுப்புக் கொடி காட்டினாங்க.

ஆனா, என் அம்மா மட்டும்தான் எனக்கு ஆதரவு தெரிவிச்சு பாசத்தோட அனுப்பிவெச்சா. என் சூட்கேஸ்ல மூணு பேன்ட், மூணு சட்டை போக எனக்குப் பிடிச்ச மூணு சிகரெட் பாக்கெட்களையும் வாங்கிவெச்சு என்னை வழி அனுப்பினா.

சென்னை வந்து சினிமாவில் வேர் பிடிச்சு நான் வளர்ந்த பிறகு, என் கூடவே வந்து தங்கிட்டா. சில வருடங்களுக்கு முன்னாடி அவ உடல்நிலை சரியில்லாம போனப்போ என்னைப் பக்கத்துல உக்கார வெச்சு, `ராசா… ராசா…’னு என் முகத்தை வருடிக் கொடுத்துட்டே இருந்தா அந்தப் பாசக்காரி.

அப்போ திடீர்னு ஒருநாள் அவ சுயநினைவு இழந்துட்டா. அதுல இருந்து அவளை ஒரு குழந்தை கணக்கா நான் பார்த்துக்கிட்டேன்.

சாப்பாடு ஊட்டுறது, குளிப்பாட்டுறதுனு எல்லாமே நானே செஞ்சேன். மருந்து மாத்திரைகளோட நான் ஊட்டிய பாசம் வீண்போகலை.

திடீர்னு ஒருநாள் சுயநினைவு வந்து பழைய பாசத்தோடு `ராசா…’னு கண் கலங்கக் கூப்பிட்டு என்னைக் கலங்க வெச்சா என் ஆத்தா.

அப்புறம் ரெண்டு வருஷம் வரை உயிரோடு இருந்தா. இப்போ கருத்தம்மா இல்லாத உலகத்துல, இந்த பாரதிராஜா பாதி உயிரோடதான் நடமாடிட்டு இருக்கான்!”

பழ.குணசேகரன், தஞ்சாவூர்.

“ `தேவர் மகன்’ படம் பார்த்தப்போ, உங்களுக்கு என்ன தோணுச்சு?

“ `தேவர் மகன்’… இட்ஸ் எ குட் மூவி. என் நண்பர் இயக்குநர் பரதன், ரொம்ப கலை அம்சத்தோட அந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

சிவாஜி கணேசன், கமல், ரேவதி எல்லோருமே ரொம்பச் சிறப்பா நடிச்சிருந்தாங்க. அந்தப் படத்தில் அருவா இருந்தது… மீசை இருந்தது.

ஆனா, அந்த மக்களின் வாழ்க்கையோ, மொழியோ, கலாசாரமோ அந்தப் படத்தில் முறையா பதிவுசெய்யப்படலை. இதுதான் அந்தப் படத்தைப் பத்தின என் கருத்து!”

வி.பாரதி, காசர்காடு.

“ `16 வயதினிலே’, `முதல் மரியாதை’… இது இரண்டும்தான் நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்குப் பெருமை சேர்ப்பவைனு சொல்றேன் நான். ஒரு தேர்ந்த படைப்பாளி என்ற முறையில் இதை மறுத்துப் பாருங்களேன்?”

“ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பொறுத்தவரை அவரோட எல்லாப் படைப்புகளுமே சிறந்த படைப்புகள்தான்.

உங்கள் பார்வையில் அந்த இரண்டு படங்களும் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… அவ்வளவுதான். ஆனா, என்னைப் பொறுத்தவரை நீங்க சொன்ன அந்த இரண்டு படங்களுமே என்னோட முழுமையான படைப்பு இல்லை.

இன்னொரு நிறைவான படைப்பில் எனது முழுத் திறமையையும் பயன்படுத்தி, நானே நடிச்சு, இயக்கி உங்கள் பார்வைக்கு வைப்பேன். அதுதான் எனக்கு முழு நிறைவு தரும் படமாக இருக்கும்!”

மு.இஸ்மாயில், ராஜபாளையம்.

``எம்.ஜி.ஆர் – கருணாநிதி – ஜெயலலிதா… மூவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?”

“அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மூன்றாம் நாளே தன்னுடைய உடல் நலத்தையும் பார்க்காமல், என் புதுவீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு அதிகாலையிலேயே வந்து அசத்திய எம்.ஜி.ஆர்… நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய செய்தியை அறிந்து, `காக்கப்பட வேண்டிய கலைஞன்’ என்று என் மீது பாசம் வைத்து, என் வீட்டுக்கு அமைச்சர் ஒருவரை அனுப்பி மருத்துவ உதவி செய்த கலைஞர்… நான் எப்போது பேச விரும்பினாலும், தன்னுடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இன்முகத்தோடு, கரிசனமாக அழைத்து விசாரிக்கும் ஜெ. மேடம்… இவங்க மூணு பேரைப் பத்தியும் பேசணும்னா, அதுக்கு விகடன் புத்தகம் மொத்தமுமே பத்தாதே!”

உ.ரமேஷ், சிவகங்கை.

“நீங்க நல்லவரா… கெட்டவரா?”

“ரியலி ஐ டோன்ட் நோ!

சில ஆசைகளை வெட்ட முடியலை. அதனால, கெட்டவனா இருக்கேன். சில ஆசைகளை வேண்டாம்னு உதறித் தள்ளியிருக்கேன்.

அப்போலாம் ஞானியாகி இருக்கேன். நல்லவனும் கெட்டவனுமாக் கலந்து நிக்கிறேன். முழு மனுஷனா மாற முயற்சி பண்ணிட்டே இருக்கேன். ஆனா, அப்படி முழு மனுஷனாகணும்னா, சினிமாவை விட்டு விலகணும். அது சத்தியமா சாத்தியம் இல்லை. ஐம் ஸாரி… என்னை மன்னிச்சுக்கங்க!”

எஸ்.ஜெனித் நிர்மல், முசிறி.

``ஒளிப்பதிவாளர் பி.கண்ணனுக்கும் உங்களுக்கும் எந்த அளவுக்கு அலைவரிசை பொருந்திப் போனது?”

“மை பார்ட்னர்!

என் லைஃப்ல மனைவி, குழந்தைகளோட நான் கழிச்ச நேரத்தைவிட, கண்ணனுடன் படப்பிடிப்பில் டிராவல் பண்ண நேரம்தான் அதிகம்.

என் சிந்தனையை அழகா ஸ்க்ரீனில் காட்டிருவான் கண்ணன். `அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்கு ஹீரோயின் தேடி கேரளாவுக்குப் போனேன்.

கிராமத்து வீட்டில் இருந்த ராதாவைப் பார்க்க நாங்க போய் நின்ன சமயம், கரன்ட் கட். ஒல்லியா, கறுப்பா கையில் சிமிழ் விளக்கோட இருட்டுல இருந்து வந்து நின்னாங்க ராதா.

பார்த்துட்டு வெளியில் வந்து கண்ணன் முகம் பார்த்தேன். அது வீட்டுக்குள்ள இருந்த இருட்டைவிட இருளோனு இருந்தது.

`சார்… அந்தப் பொண்ணு ஒல்லியா, கறுப்பா இருக்கு. நம்ம படத்துக்குச் சரிப்பட்டு வராது’னு சொன்னார். `இல்லை கண்ணன்… அந்தப் பொண்ணுதான் நம்ம பட ஹீரோயின். நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சொன்னேன்.

அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசலை கண்ணன். ஆனா, நான் எதிர்பார்த்ததைவிட ராதாவை ஸ்க்ரீன்ல அழகாக் காமிச்சார். என் வேவ்லெங்த்தை கேட்ச் பண்றதுல கண்ணன் அந்த அளவுக்கு மாஸ்டர்!”

சு.சிதம்பரம், தம்பிக்கோட்டை.

``நீங்கள் அறிமுகப்படுத்தும் நாயகன், நாயகிகளுக்கு `ஆர்’ வரிசையில் பேர் வைப்பீங்க. ஆனா, யாருக்காச்சும் பட்டம் கொடுத்திருக்கீங்களா?”

“சென்னை நகரத்தில் உலாவி அதன் ஆன்மாவை ஆழமாகப் புரிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். சவுத் தமிழ்நாடு பக்கம் எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டார் அவர். ஆனா, அவரை `கிழக்குச் சீமையிலே’ படத்துக்கு மியூஸிக் பண்ணவெச்சேன்.

`சிட்டி சப்ஜெக்ட்டுக்கு ரஹ்மான் ஓ.கே. கிராமத்துக் கதைக்கு அவர் செட் ஆக மாட்டாரே? இந்த பாரதிராஜா வுக்கு என்னாச்சு?’னு அப்போ கோடம்பாக்கத்தில் முணுமுணுத்தாங்க.

ஆனா, `கிழக்குச் சீமையிலே’ படப் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பின. பிறகு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு `இசைப் புயல்’னு பட்டம் கொடுத்தேன்.

அதே மாதிரி வடிவேலுவுக்கும் `வைகைப் புயல்’ பட்டம் நான் கொடுத்ததுதான். இதை எல்லாம் எந்த சபையிலும் நான் சொல்லிக்கிட்டது இல்லை. ஆனா, நீங்க கேள்வியாக் கேட்டதால சொன்னேன்!”

ச.இளமாறன், சிதம்பரம்.

“சினிமாக்காரர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஆறு கோடித் தமிழர்களும் அலற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆனால், ஆறு கோடி மக்களும் பாதிக்கப்படும் பிரச்னைகளை சினிமாக்காரர்கள் கண்டுகொள்வதே இல்லையே?’

“நான் பிறந்த மண்ணுக்கு அடிக்கடி விசேஷத்துல கலந்துக்கப் போயிட்டு வருவேன். அப்போலாம் விசேஷ வீட்டு வாசல்கள்ல பெரிய பெரிய கட்அவுட், ஃப்ளெக்ஸ் போர்டுகள்ல, யாராச்சும் சினிமா நடிகன் சிரிச்சுட்டு நிப்பான்.

எனக்கு ஆச்சர்யமா இருக்கும். `அட! கல்யாணப் பொண்ணுக்குத் தாய்மாமன் சினிமால நடிச்சுட்டு இருக்கான்போல… நமக்குத் தெரியாமப்போச்சே’னு நொந்துக்கு வேன்.

ஐ ஆஸ்க் யூ திஸ் இளமாறன்… உங்க அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி போட்டோஸ் போட்டு பேனர் வை. நான் கை தட்டுறேன்.

ஏன், நீ சினிமா நடிகனைக் கொண்டாடுற? அப்புறம் நீ திண்டாடுறப்ப, `அவன் எனக்கு எதுவும் பண்ணலை’னு குத்தம் சொல்லுற? என் இனிய தமிழ் மக்களே… சினிமாக்காரங்க தன் தொழில்ல தெளிவா இருப்பாங்க. வேலையில் சின்சியரா இருப்பாங்க. அதைத் தாண்டி அவங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கக் கூடாதுங்கிற உண்மையை, பாவப்பட்ட தமிழன் என்னைக்குப் புரிஞ்சுக்கிறானோ… அன்னைக்குத்தான் அவனுக்கு விடிவுக் காலம் பிறக்கும்!”

ம.பாரதி, செங்கல்பட்டு.

“பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியின் ரசவாதம் என்ன? அந்த மாய மந்திரத்தில் நாங்கள் மீண்டும் லயிக்க முடியுமா?”

“இந்த ஒரு கேள்வியை இன்னும் வெச்சுக்கிட்டு ஊர் ஊருக்கு, ஆளாளுக்குக் கொடி பிடிச்சுக் கோஷம் போட்டுக் கிளம்பிடுறீங்களேப்பா..!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு காம்பினேஷன் ஹிட் ஆகும். அதுதான் தமிழ் சினிமா மரபு.

ஆரம்பத்துல ஸ்ரீதர் – கண்ணதாசன் – விஸ்வநாதன் காம்பினேஷன் ஹிட்! ஆனா, அதே ஸ்ரீதர் அப்புறம் இளையராஜா – வைரமுத்துவை வெச்சு `நினைவெல்லாம் நித்யா’ படப் பாடல்களை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கலையா? அந்த காம்பினேஷன் ஜெயிக்கலையா? `வேதம் புதிது’ படத்தில் தேவேந்திரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் உங்களை ஈர்க்கவே இல்லையா?

நான் `கிழக்குச் சீமையிலே’னு ஏ.ஆர்.ரஹ்மானை வில்லேஜ் சப்ஜெக்ட்டுக்கு முதல்முறையா மியூஸிக் பண்ண வெச்சேன்.

அப்போ என்னைத் திட்டாதவங்களே இல்லை. ஆனா, அதுக்குப் பிறகு டவுன் சவுத்ல ஒவ்வொரு வீட்டு விசேஷத்துலயும் `மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே’ பாட்டுதானே அலறுது. `கருத்தம்மா’ படத்துல வந்த `போறாளே பொன்னுத்தாயி… பொலபொலவெனக் கண்ணீர்விட்டு’ உங்களுக்குள்ள எமோஷனைத் தூண்டலையா? ஆன்ஸர் ஆல் திஸ் கொஸ்டீன்ஸ்!

அண்ட் அஸ் எ ஃப்லிம் மேக்கர், நான் இளையராஜா இசையில் மகிழ்ந்திருக்கிறேன். தேவேந்திரன் இசையில் வியந்திருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நெகிழ்ந்திருக்கிறேன். இதோ இப்போ ஜி.வி.பிரகாஷ் இசையில் சிலிர்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் மாய மந்திரம் நடந்துக்கிட்டேதான் இருக்கு!”

சு.அருளாளன், ஆரணி.

“உங்கள் முதல் பட ஹீரோயினாக ஸ்ரீதேவியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“என் முதல் பட ஹீரோயின் ஸ்ரீதேவின்னு யார் சொன்னா? தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா மேடம்தான், என் முதல் பட ஹீரோயின். என்ன… நம்ப முடியாத அதிர்ச்சியா இருக்கா? யெஸ்… இட்ஸ் எ மிராக்கிள்… பட் இட்ஸ் ட்ரூ!

`16 வயதினிலே’ படத்துக்கு முன்னாடியே கதாசிரியர் ஆர்.செல்வராஜோட சேர்ந்து `சொந்த வீடு’னு ஒரு ஃபென்டாஸ்டிக் கதை பண்ணோம்.

என் முதலாளி கே.ஆர்.ஜி. தானே தயாரிப்பாளராகப் படம் எடுக்க வந்தார். அந்தப் படம் பெண்ணுரிமை பத்திப் பேசுற சப்ஜெக்ட்.

`சொந்த வீடு’ படத்துக்கு ஹீரோவா முத்துராமனை ஒப்பந்தம் செய்தேன். ஹீரோயினா ஜெயலலிதாவை நடிக்கவைக்கலாம்னு ஐடியா.

அதுக்காக நானும் செல்வராஜும் ஜெயலலிதா மேடத்தின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனோம். ஒரு மணி நேரம் பொறுமையா உக்கார்ந்து நாங்க சொன்ன கதையை ரசிச்சுக் கேட்டாங்க ஜெயலலிதா. ஷி லைக்ட் அவர் ஸ்டோரி டெல்லிங்.

நாங்க கதை சொல்லி முடிச்சதும், `கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்கதான் டைரக்டரா?’னு என்னைப் பார்த்துக் கேட்டாங்க.

நான் `ஆமாம்’னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே `ஓ.கே’ சொல்லிட்டு 28 நாள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தாங்க.

நான், செல்வராஜ், முத்துராமன், இசையமைப்பாளர் குமார் எல்லோரும் படப்பிடிப்புக்குப் போறதுக்குத் தயாராகிட்டோம்.

பட், அப்போ ஃபீல்டுல இருந்த ஒரு பெரிய டைரக்டர் சில்லியா பிஹேவ் பண்ணார். என்னைப் பத்தி ஜெயலலிதா மேடம்கிட்ட, `அவன் ஒரு சின்னப் பையன். ஷூட்டிங் ஸ்பாட்ல க்ளாப் போர்டு அடிக்கக்கூட லாயக்கில்லாத பையன்.

அவனை நம்பி ஷூட்டிங்குக்குப் போய் மாட்டிக்காதீங்க’னு தடுத்து நிறுத்திட்டார். அதனால `சொந்த வீடு’ படம் டிராப் ஆகிருச்சு.

அதே கதையைத்தான் ரொம்ப வருஷம் கழிச்சு `புதுமைப் பெண்’ங்கிற பேர்ல ஏ.வி.எம். தயாரிச்சாங்க. ஜெயலலிதா மேடம் நடிக்க இருந்த `புதுமைப் பெண்’ கேரக்டர்ல ரேவதி நடிச்சிருந்தாங்க. ஸோ, நான் ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ண முதல் ஆர்ட்டிஸ்ட் ஜெயலலிதா.

அப்புறம் இந்த மாதிரி எந்தப் பஞ்சாயத்தும் வரக் கூடாதுன்னுதான் `16 வயதினிலே’ படத்துல புதுப் பொண்ணா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினேன்!”

எம்.பிரியா, வேலூர்.

“சென்னையில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்த சின்னச்சாமியை இன்றைய இயக்குநர் இமயம் பாரதிராஜா எப்படிப் பார்க்கிறார்?”

“ஸ்வீட் மெமரீஸ்! சொந்த மண்ணில் 120 ரூபாய் சம்பளத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராகக் கம்பீரமாக வேலை பார்த்த சின்னச்சாமி, `பாரதிராஜா’வின் சினிமாக் கனவை நனவாக்குவதற்காக சென்னைக்கு வந்தான்.

வந்த இடத்தில் மாசம் 70 ரூபாய் சம்பளத்தில் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேர்ந்தான். அந்த சொற்ப சம்பளத்திலும் குருவிபோலச் சேர்த்து வைத்து சென்னையில் நாடகம் போட்டான்.

அத்தனை வறுமையிலும் துயரத்திலும் `பாரதிராஜா’வின் கலைத்தாகத்தை அணையவிடாமல் காப்பாற்றியதில் சின்னச்சாமிக்குப் பெரிய பங்கு உண்டு.

பாரதிராஜாவின் கனவுகளுக்காக பெட்ரோல் பங்க் வேலை அலுப்பையும் பசி வேதனையையும் சின்னச்சாமி தாங்கிக்கொண்டான். இந்த இயக்குநர் பாரதிராஜாவை அந்த சின்னச்சாமிதான் வார்த்து எடுத்தான்… வளர்த்து எடுத்தான். இப்போதும் என் ஒரே உற்ற நண்பன் நான்தான்!”

ஆர்.ஜெயந்தி, திருக்குவளை.

``உங்கள் ஆங்கில மோகம் எப்போது தொடங்கியது? ஆங்கிலம் கற்றுக்கொள்ள நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?”

“முயற்சி இல்லை… வலி!

பள்ளிக்கூடத்துல Book, Cow – இந்த ரெண்டு இங்கிலீஷ் வார்த்தையை மனப்பாடம் பண்ண எனக்கு மூணு நாள் ஆகும்.

அப்படியும் சரியா சொல்லாம வாத்தியார்கிட்ட பிரம்படி வாங்கியிருக்கேன். ஹி வில் பீட் மீ அப்ஹார்ஷ்லி.

என்ன செய்றது… நாங்க பிறந்த கிராமம் அப்படி. எங்களுக்கு வாய்ச்ச வாத்தியாருங்க அப்படி. அப்போ ரெண்டு இங்கிலீஷ் வார்த்தை பேசத் தெரியாம அடி வாங்கிய பாரதிராஜாவை விதி எங்கே போய் நிறுத்துச்சு தெரியுமா? அமெரிக்காவில்!

இட்ஸ் டெஸ்டினி. உலக மொழியாம் திரை மொழியில் ஒரு படைப்பாளியாக பாரதிராஜா பணிபுரிய வேண்டிய சூழ்நிலை.

தொழில் சார்ந்த நிர்பந்தத்தில் நண்பர்கள்கிட்ட பேசுறப்போ, கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கத்துக்கிட்டேன்.

ஐ லேர்ண்டு இட். தமிழ் மொழியும் தமிழ் மக்களும் எனக்குக் கொடுத்த அங்கீகாரம் அமெரிக்காவுக்கு என்னை அழைச்சுட்டுப் போனது.

அமெரிக்க அரசாங்கம் சிறந்த ஓவியன், சிறந்த அரசியல்வாதி, சிறந்த திரைக்கலைஞர்னு இந்திய அளவில் ஏழு பேரைத் தேர்வுசெய்து, சிறப்பு விருந்தாளியாக அழைத்தது. என்னையும் இந்தியாவின் சிறந்த திரைக்கலைஞனாக அழைத்துச் சென்று நியூயார்க், நியூஜெர்சி போன்ற இடங்களில் பேசவைத்தார்கள்.

அப்போ எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என் சினிமா பற்றிப் பேசினேன். பட் தே அண்டர்ஸ்டுட் திஸ் க்ரியேட்டர்ஸ் வாய்ஸ். கைதட்டினாங்க. `முதல் மரியாதை’ படத்துக்குப் பிறகு நடந்த முக்கியமான சம்பவம் இது!”

சி.ஆர்,ரகு, தஞ்சாவூர்.

“ `16 வயதினிலே’ படத்தை ரீமேக் செய்தால், இன்றைய ஹீரோ, ஹீரோயின்களில் யார் உங்கள் சாய்ஸ்?”

“ஐ ஹேட் ரீமேக் ஃப்லிம்ஸ்! ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை ரீமேக் பண்றதுல எனக்கு எப்பவுமே உடன்பாடு இல்லை. என் மகன் மனோஜ், என் மனைவி வயித்துல கருவா இருந்தான், பிறந்தான், வளர்ந்தான். இப்போ அவனைத் திரும்பவும் என் மனைவி வயித்துக்குள்ள திணிக்க முடியுமா?

அப்படித்தான் நான் ஏற்கெனவே எடுத்த ஒரு படத்தை ரீமேக் பண்றதோ, படத்தின் ஹிட் பாடல்களை ரீமேக் பண்றதோ… ஐ நெவர் லைக். பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலை இடிச்சுட்டு, கலையழகு மிளிரும் தாஜ்மஹாலை இடிச்சுட்டு, மறுபடி அதே இடத்தில், அதே மாதிரி கட்டுறோம்னு சொன்னா, நீங்க அனுமதி கொடுப்பீங்களா? கேன் யூ ஃபீல் எ க்ரியேட்டர்ஸ் பெய்ன்?”

தா.சூரியா, வேதாரண்யம்.

`` `முதல் மரியாதை’யில் நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?

“ஐ’ம் நாட் ஹீரோஸ் டைரக்டர். பொதுவா, எந்த ஹீரோவையும் மனசுலவெச்சு நான் கதை, திரைக்கதை எழுத மாட்டேன்.

ஆனா, நானும் செல்வராஜும் `முதல் மரியாதை’ கதை எழுதி முடிச்சப்போ, என் மனசுல கம்பீரமா வந்தது சிவாஜிதான்.

`முதல் மரியாதை’ படம் சம்பந்தமாப் பேச சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். `அண்ணே… உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது, மேக்கப் கிடையாது.

நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்கக்கூட வேணாம்… நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க, உட்காருங்க, எந்திரிங்க, நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க… அது போதும்’னு சொன்ன என்னைக் குறுகுறுனு பார்த்தார். ஆனா, எதுவும் சொல்லலை.

படப்பிடிப்புக்கு வந்தார். நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு வெவ்வேறு ஆங்கிளில் அவரை நிக்கவெச்சு, நடக்கவெச்சு… ஷூட் பண்ணிட்டு இருந்தேன்.

ஒரு கட்டத்துக்கு அப்புறம், `ஏண்டா பாரதி… என்னடா படம் பிடிக்கிறே? உன்கிட்ட கேட்கவும் வெட்கமா இருக்குடா’னு கேட்டார். `

அண்ணே… கடைசியாக் காமிக்கிறேண்ணே’னு மட்டும் சொல்லிட்டேன். ஒருநாள், `டேய்… நீ ஒரு தடவை நடிச்சுக் காட்டு’னு என்னைக் கேட்டார்.

நான் நடிச்சதைப் பார்த்துட்டு ராதாகிட்ட, `இவன் நடிக்கிறதுல பத்து பெர்சன்ட் நடிச்சாக்கூடப் போதும்…ஜெயிச்சுரலாம்டி பொண்ணே’னு அவர் சொன்னப்போ, நான் சிலிர்த்துட்டேன்.

`அண்ணே, நான் மதுரைல இருந்து சென்னைக்குக் கிளம்பும்போதே, சினிமாவுல நடிச்சு சிவாஜியைக் கவிழ்க்கணும்னுதான் வந்தேன்’னு நைஸா சொன்னேன்.

அதைக் கேட்டு `ஹேய்…ஹேய்’னு வாய்விட்டுச் சிரிச்சவர், `ஏண்டா… உங்க ஊர்ல முகம் பாக்குற கண்ணாடியே இல்லையாடா?’னு கேட்டு என்னைக் கலாட்டா பண்ணிட்டார்.

ப்ரிவியூ-ஷோல படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்த பிறகும் சிவாஜி மட்டும் அப்படியே சீட்ல உக்காந்தே இருந்தார்.

நான் மெள்ள அவர் பக்கத்துல போய் நின்னேன். என் பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் முகம் அப்படியே நெக்குருகி இருந்தது. ஹி வாஸ் வெரி எமோஷனல்… `ஏண்டா காட்டுப் பயலே… எப்படிடா இப்படிப் படம் எடுத்த?

இப்பத்தாண்டா தெரியுது… ஷூட்டிங்ல நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம் புரியுது. இது சாதாரணப் படம் இல்லடா… இன்டர்நேஷனல் கிளாஸிக்டா’னு அப்படியே என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.

சிவாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தப்போ, நான்தான் திரையுலகைக் கூட்டி, அண்ணா சாலை டிராஃபிக்கையே திருப்பிவிடுற அளவுக்குப் பிரமாண்டமா விழா நடத்தினேன்.

விழாவுக்கு அந்த சமயம் முதல்வரா இருந்த எம்.ஜி.ஆரை அழைச்சுட்டு வந்தேன். அவர் கையால் சிவாஜிக்குத் தங்கக் காப்பு அணியவெச்சோம். அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை!”

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

“தங்களது முதல் படைப்பான `16 வயதினிலே’ படத்துக்கு ஆனந்த விகடன் விமர்சனக் குழு 62.5 மதிப்பெண்கள் வழங்கியது. அந்த மதிப்பெண்ணை அதன் பிறகு எந்த இயக்குநரும் தொடவோ, தாண்டவோ இல்லை. ஏன், நீங்களே கூடத் தாண்டவில்லை. அதை நினைத்துப் பெருமிதம் அடைகிறீர்களா அல்லது வருத்தப்படுகிறீர்களா?”

“தமிழ் சினிமாவில் என்னைவிட ஆழமான, அம்சமான, கருத்தான சினிமாக்களைத் தந்த பல இயக்குநர்கள் இருக்காங்க. ஆனா, பாமரனுக்கு எட்டாத கனவுபோல, உலகத்தின் பரம ரகசியம்போல ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை, முதன்முதல்ல என் கிராமத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அந்த தைரியத்துக்காகவும் படைப்பாற்றலுக்காகவும்தான் அவ்வளவு மதிப்பெண் கொடுத்துக் கௌரவிச்சது விகடன்.

இப்போ சில பசங்க பம்பரமா சுத்திப் படம் எடுக்கிறாங்க. 62.5 ரெக்கார்டை அவங்க பிரேக் பண்ணுவாங்கனு எதிர்பாக்கிறேன். ஆனா, அப்படி யாராச்சும் தாண்டிட்டா, நிச்சயம் நான் அதைத் தாண்டிக்காட்டுவேன். யெஸ்… ஐ வில் ரிப்பீட்… நிச்சயம் நான் அதைத் தாண்டுவேன்!”

சித்திரவேலு, நெய்விளக்கு.

“உங்களைக் குருநாதர்னு கொண்டாட சினிமாவில் ஒரு பட்டாளமே இருக்கு. ஆனா, உங்க குருநாதர் பத்திப் பெருசா தகவல் எதுவும் கேள்விப்பட்டதில்லையே..?”

“குருநாதர்னு யாரைச் சொல்வீங்க? எனக்குப் பேசக் கத்துக்கொடுத்தது என் ஆத்தா. நடக்கக் கத்துக்கொடுத்தது என் அப்பன்.

`அ’னா… `ஆ’வன்னா கத்துக்கொடுத்த நாடார் சரஸ்வதி பள்ளிக்கூட டீச்சர் பேர்கூட எனக்கு மறந்துபோச்சு.

பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுத்த வெங்கட சுப்புராவ், தமிழையும் நாடகத்தையும் கத்துக்கொடுத்த ராமலிங்கம் வாத்தியார்… இப்படிப் பலபேர்கிட்ட பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

தொழில் நிமித்தமா மிகப் பெரும் இயக்குநர்களான புட்டண்ணா கனகல், மலையாளத்தில் கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, சங்கர அய்யர்… இவங்க ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றவன் நான்.

மதுரை மண்ணின் மக்களிடமிருந்து கதையைக் கத்துட்டு இருக்கேன். இதுல யார்னு ஒருத்தரை மட்டும் என் குருநாதரா குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? எனக்குத் தனியா `குரு’னு யாரும் கிடையாது. அடமா யாரையாவது சொல்லுங்கனு கேட்டா, இந்த இயக்குநர் பாரதி ராஜாவின் குருவா, அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமியைச் சொல்லலாம்!”

திருநாவுக்கரசு, தேனி.

``உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்பி எம்.ஜி.ஆர்., கதை கேட்டாராமே?”

“இட்ஸ் ஷாக்கிங்ல… யெஸ் ட்ரூ! எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்போ ஒருமுறை ராமாவரம் தோட்டத்துக்கு என்னை அழைச்சார்.

ரொம்ப நேரம் சினிமாவைப் பத்தியே பேசிட்டு இருந்தவர், திடீர்னு என்னை அதிர்ச்சி அடைய வைக்கும் அந்தச் செய்தியைச் சொன்னார்… `பாரதி… நாம கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவலை சினிமாவா எடுக்கணும்.

அதில் நான் பொன்னியின் செல்வனா நடிக்கணும்கிறது என் நீண்ட நாள் கனவு. ஆனா, இப்போ எனக்கு இருக்கிற வேலையில தூங்கக்கூட நேரம் ஒதுக்க முடியலை.

`எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ படம் தயாரிச்சு ரொம்ப வருஷமாச்சு. என் பேனருக்காக `பொன்னியின் செல்வன்’ படத்தை நீ டைரக்ஷன் பண்றியா? என்னால் நடிக்க முடியாது.

கமல்ஹாசன் பொன்னியின் செல்வனாவும், ஸ்ரீதேவி குந்தவை நாச்சியாராவும் நடிச்சா நல்லா இருக்கும்.

என்ன… டைரக்ஷன் பண்றியா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். அப்படி ஒரு வாய்ப்பை மறுக்க முடியுமா? நானும் சரி சொல்லிட்டேன். ஆனா, அதன் பிறகு அந்த புராஜெக்ட் பத்தி ஒரு வார்த்தைகூட ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை. எப்படியோ… எங்கேயோ மிஸ் ஆகிருச்சு!”

பஞ்சநாதன், சென்னை-75.

“உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?”

“விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டா, நான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!”

கருத்துகள் இல்லை: