திங்கள், 14 அக்டோபர், 2019

மோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை

tamil.oneindia.com - shyamsundar : டெல்லி: 2019ம் வருடத்திற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
 இந்தியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. கடும் பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் ஜிடிபி இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக 5% ஜிடிபியை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது..  அதேபோல் தற்போது 2019ம் வருடத்திற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2019-2020ம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 6% ஆக இருக்கும்.
தொடர்ந்து இந்தியா இரண்டாவது முறையாக இந்த சரிவை சந்திக்கிறது.
 2017-18 வரை இந்தியாவில் வளர்ச்சி 7.2% ஆக இருந்தது. அதன்பின் 2018-19ல் இந்தியாவில் வளர்ச்சி 6.9% ஆக மாறியது. இந்த நிலையில் தற்போது மேலும் 0.9% குறைந்து, 6 சதவிகிதமாக மாறும் நிலையை அடைந்துள்ளது.

 மேலும் தொழில் நிறுவன வளர்ச்சி 6.9% ஆகி இருக்கும். மாறாக விவசாயம், சேவை துறைகளின் வளர்ச்சி 2.9% மற்றும் 7.5% ஆகி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளை ஏற்பட்ட தொடர் சரிவுதான் இந்தியாவின் வளர்ச்சி சதவிகிதம் சரியவும் காரணம் என்கிறார்கள்.

ஏன் இப்படி? இந்தியா தொடர்ந்து ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நீக்கம், தவறான பொருளாதார கொள்கை, அதிகபட்ச தனியார்மயமாக்கம் என்று நிறைய முடிவுகளை எடுத்து வருகிறது. இதனால் வரிசையாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

மாறுமா? அதேசமயம் இந்தியா தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து, அதிரடி மாற்றங்களை செய்தால் இதை மாற்றலாம். அதிரடியாக பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2020-21ல் 6.9% மற்றும் 2021-22ல் 7.2 % ஆக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: