செவ்வாய், 15 அக்டோபர், 2019

விடுதலை புலிகளின் அழிவு பற்றி ஓர் அலசல்:

Stanley Rajan   : கலைஞரின் அரசியலை விமர்சியுங்கள், அவர் மதுகொள்கை இன்னபிற
கொள்கைகளை விமர்சியுங்கள், ஆனால் இலங்கை போரை ஏன்
நிறுத்தவில்லை என விமர்சிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள்
1983 கலவரத்தையொட்டி இந்தியா களமிறங்கியதும், போராளிகளை ஆதரித்ததும் இன்னும் பிற உதவிகளும் உலகறிந்தவை விட்டுவிடலாம்.
1986ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டதும் ராஜிவ் தலையிட்டு, இனி உங்களால் மக்கள்தான் சாவர்கள், போதும் விளையாட்டு, இனி அமைதியாக வாழுங்கள் என ஒப்பந்தம் செய்ததும்,
அந்த அமைதிகாக்கும் படையினை புலிகள் சீண்டியதும், மக்கள் அழிவினை தாண்டி போராடமுடியாத இந்தியபடை கைகட்டி அடிவாங்கியதும் அதனை சிங்களனோடு சேர்ந்து புலிகள் “இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை?” என சொன்னதையும் விட்டுவிடலாம்.
கலைஞர் அக்கால தமிழீழ‌தேசிய தலைவர் அமிர்தலிங்கத்தை ஆதரித்ததும் அவருக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் பெற்றுகொடுத்ததிலும் கலைஞருக்கு பங்கு உண்டு.
அகில இந்திய அளவில் டெசோ எனும் வலுவான அமைப்பினை தொடங்கி, மதுரையில் மநாடும் நடத்தி இனி ஈழதமிழர் மீது கை வைத்தால் இந்தியா பொங்கும் என ஒரு நிலையினை உண்டாக்கியது அவர்தான்.
டெலோ சபாரத்தினத்தினை கலைஞர் ஆதரித்ததும், பத்மநாபா மீது அன்பு கொண்டிருந்ததும் மறக்க கூடியவை அல்ல.
மற்ற இயக்கங்களை புலிகள் அழிக்க தொடங்கியவேளை, “முதலில் பழம் விழட்டும், சுளைகளை பின் பங்கு வைக்கலாம்” என புலிகளிடம் மன்றாடியவரும் அவர்தான்.

(மனிதர் அன்றே கனி,பழம் என்றுதான் சிந்தித்திருக்கின்றார் 🙂 )
அதன் பின் சுமார் 1000 தமிழ்போராளிகள், கவனிக்கவும் தமிழ் சக போராளிகளையும், சபாரத்தினத்தினத்தையும் கலைஞரின் எதிர்ப்பினை மீறி புலிகள் கொல்லும் போது கலைஞர் கண்ணீர் விட்டார். நிச்சயம் செய்திருக்க கூடா கொலை அது.
நாங்களும் உயிரை கொடுத்து போராட வந்த போராளிகள் என அவர்கள் கையெடுத்து கும்பிட்டபோதும் கோரமாக கொன்று, நடுதெருவில் டயர்போட்டு எரித்தது யார்? சிங்களனா?
புலிகளின் கோஷ்டி பூசலில் கிட்டு கால் இழக்க, 80 மாற்று இயக்க போராளிகளை “கந்தன் கருணை” இல்லத்தில் சுட்டது யார்? சிங்களனின் வெலிக்கடை சிறை கொடூரத்திற்கு இது குறைந்ததா?
அதன்பின் தமிழீழ தேசிய தலைவர் என அழைக்கபட்ட‌ அமிர்தலிங்கத்தை புலிகள் கொல்லும்போதும் கண்டித்தார்
இப்படியாக அவரை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அவர்கள் பாட்டுக்கு கொலைகள் புரிந்தனர் புலிகள், எம்ஜிஆர் மறைந்து கலைஞர் நெடுநாளைக்கு பின் முதல்வரானாலும் தமிழகத்தில் புலிகளை அவர் தடுக்கவில்லை, சாவகாசமாக புலிகள் அலைந்தனர்.
அன்றைய பிரதமர் விபி சிங் அரசிடம் சொல்லி அமைதிபடையினை மீட்டதே கலைஞர்தான், அக்காலத்தில் அமைதிபடை பிரபாகரனின் முகாமினை மணலாற்றுபக்கம் வளைத்திருந்தது, இரு வாரம் தாமதித்திருந்தால் அன்றே அவர் காலி.
அதன்பின் பத்மநாபாவினை புலிகள் கொன்று கலைஞர் ஆட்சி கலைக்க காரணமாயினர், எப்படி இருந்திருக்கும் கலைஞருக்கு???, அவரிடம் என்ன பிரச்சினை என்றாலும் பத்மநாபா பற்றி முறையிட்டிருக்கலாம் அல்லவா? ஒரு மாநில முதல்வராக அவர் எப்படி அவமானபட்டிருப்பார்.
அதன்பின் உச்சமாக ராஜிவ் கொலை, அதோடு திமுக 5 ஆண்டு தலையெடுக்கவிலை, அதன்பின் அவரை அரியணை ஏற்றியது ஜெயலலிதாவின் ஊழல்.
இப்படியாக இவர்கள் யாருக்கும் அடங்கா அமைப்பு, இது அதிதீவிர அமைப்பு என கண்டுகொண்ட கலைஞர் அதன்பின் ஒதுங்கிகொண்டார், அதன்பின் எந்த சிக்கலுமில்லை, 1995ல் புலிகளை யாழ்பாணத்தில் இருந்து விரட்டியபோது கூட சிக்கல் இல்லை.
புலிகளுக்கு சர்வதேச ஆபத்து 2001ல் வந்தது, கண்ணி வைத்து பிடிக்க எண்ணிய மேற்குலகம் நார்வே மூலம் களமிறங்கியது, 2002 பத்திரிகையாளர் மாநாடு முதல் கண்ணி, பகிரங்கமாக சிக்கினார் பிரபாகரன், காரணம் பதிலளித்தவர் எல்லாம் பாலசிங்கம், பிரபாகரன் அம்மா மேடையில் பன்னீர் செல்வமாக அமர்ந்திருந்தார்.
இந்த புள்ளியில் வலை பின்னபட்டது, பாலசிங்கம் புலிகளின் முகமாக அமைதிபேச்சு வார்த்தையில் பங்கெடுத்தார், பிரபாகரனை மீறி அவரால் பதிலளிக்கமுடியவில்லை, அவர் ஒதுங்கிகொள்ள கருணா பிரிந்தார்.
ஆனால் மேற்குலகம் கடுமையாக காய் நகர்த்தியது, அமெரிக்காவில் வசித்த கோத்தபாயாவும், சரத்பொன்சேகாவும் களத்திற்கு வந்தனர், கடுமையான பயிற்சி, ஒரு முடிவோடு மேற்குலகம் எச்சரித்தது “இது புலிகளுக்கு இறுதிவாய்ப்பு, இல்லை என்றால் அவமானமான தோல்வியினை புலிகள் சந்திப்பர்” சொன்னது அமெரிக்க தூதுவர்.
அதோடு தனது முதல் அஸ்திரத்தை தொடுத்தது, அது 2006ல் ஐரோப்பாவில் புலிகளுக்கு தடை, இந்த தடையினை கலைஞரா கொண்டுவந்தார்?
2006ல் மாவிலாறில் யுத்தம் தொடங்கிற்று, செயற்கைகோள் தகவல் இலங்கைக்கு பறந்தது, புலிகள் தோல்விமுகம் தொடங்கிற்று, தமிழ்செல்வன் கொல்லபட்டது ஆப்கனில் பின்லேடன் மீது நடந்த நவீன தாக்குதலுக்கு நிகரானது, நிச்சயம் இந்திய பங்களிப்பு அல்ல, அதாவது லண்டனுக்கு பேசிய 5ம் நிமிடத்தில் ஆள் காலி. இந்த தொழில்நுட்பம் எல்லாம் இந்தியாவிடம் ஏது?
யுத்தம் தொடர்ந்து புலிகள் மொத்தமாக முடக்கபட்ட நிலையில் கலைஞர் மீது கண்டனம் பாய்ந்தது, அவரை பத்திரிகை மாநாடு நடத்த சொன்னார்? அவரா நார்வே குழு அனுப்பினார், அவரா பொன்சேகாவையும், கோத்தபாயாவையும் கொழும்பு அனுப்பினார்.
இந்திய நிலை சிக்கலாக இருந்தது, யுத்தத்தில் திரிகோணமலை இந்திய‌ ஆயில் டேங்கர்களை காக்கும் பதற்றம் இருந்தது, பெயருக்கு டம்மி ஆயுதங்களை கொடுக்கும் முன்னால் பாகிஸ்தானும்,சீனாவும் மறைமுகமாக அமெரிக்காவும் அள்ளி கொடுத்தன, சில ஜப்பானிய பங்களிப்பும் உண்டு,
காரணம் புலிகள் சில ஆயுதம் வாங்கிய இடம் வடகொரியா போதாதா?
இப்படி தன்னால் தடுக்கமுடியாத யுத்தம் என இந்தியா உணர்ந்தது, ஆனாலும் உயிரிழப்புக்களை தடுக்க சில யோசனைகளை முன்வைத்தது 1987ல் இருந்த இந்திய நிலைப்பாடு அது, ஆனால் புலிகள் இறுதிவரை அதற்கு ஒப்புகொள்ளவில்லை. விளைவு சகல் அழிவு,
ஒருவேளை இந்திய அரசு மகா தைரியமாக செயல்பட்டு இந்திய ராணுவத்தை அனுப்பினாலும் அது செல்லுமா? நிச்சயம் மறுக்கும். 1500 படைவீரர்களை இழந்து இரு எதிரிகளோடு போராடி அதுபட்ட அவமானம் கொஞ்சமல்ல,
எப்படி செல்லும்?
அப்படியும் புலிகள் இல்லா யாழ்பாணமோ,மட்டகிளப்போ ஒரு அழிவினையும் காணவில்லை. உண்மையில் இனி யாழ்பாணத்திற்கு புலி ஆபத்து இல்லை என அம்மக்களே நிம்மதி அடைந்திருக்கின்றார்கள்.
இறுதி யுத்தத்தில் எத்தனை தமிழர் தமிழகத்தில் தீ குளித்தார், யாழ்பாணத்தில் அரை ஸ்பூன் மண்ணெண்ணெயினை எந்த தமிழனவது தலையில் இட்டானா? மட்டகிளப்பில் ஒரு சிமிழி பெட்ரோலை எவனாவது தொட்டானா?
அவர்களே அமைதியான போது கலைஞர் மட்டும் தீகுளிக்க வேண்டுமா? அவர் நிலையில் என்ன செய்யமுடியும்? அதே தான் 2 மணி நேர சம்பிரதாய உண்ணாவிரதம் தான்.
புலிகள் இவருக்கு எத்தனை முறை தண்ணி காட்டினார்கள், அவர் யோசிக்கமாட்டாரா? அமிர்தலிங்கமும், பத்மநாபாவும் அவர் கண்முன் வந்திருக்கமாட்டார்களா?
இப்படியாக பலநாடுகள் இணைந்த விளையாட்டில் இந்தியாவே திணற, அதாவது புலிகளை அழிக்க இந்தியா ஒருபோதும் நினைக்காது, சர்வதேச அரசியல் அது. அப்படி நினைத்தால் 1995 சந்திரிகாவுடனோ, 2000 ஆனையிறவு யுத்தத்திலோ இந்தியா புலிகளை அழித்திருக்கும், இது புலிகளுக்கும் தெரியும்.
ஒரு அனுதாபத்தில் இந்தியா பிரபாகரனை காப்பாற்றினாலும், நாளை காஷ்மீர தீவிரவாதிகள் யாரையாவது விடுவார்களா?
அசாம் பிரிவினைவாதிகள் எப்படி சிந்திப்பார்கள்? நக்சலைட்டுகள் எப்படி யோசிப்பார்கள்?
ஓகோ, இவ்வளவுதான் இந்தியவா? யாரையும் கொன்றுவிட்டு கொஞ்சநாளில் நாம் நினைத்ததை சாதிக்கலமா? பரவாயில்லையே, ம்ம் கிளம்பட்டும் தற்கொலைபடை என அணி அணியாய் கிளம்பமாட்டார்களா?
உண்மையில் தவறு யாரிடம்? லட்சகணக்கான ஈழமக்களை அகதிகளாக துரத்தியவர்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்?
அகதியான மக்களுக்கு புலிகள் செய்ததென்ன? எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அனாதை ஆகின. அவர்களை பற்றி என்றாவது புலிகள் கவலைபட்டதுண்டா?
பல நாடுகளும் சிங்களனுக்கு உதவியாக நிற்க, புலிகளுக்கு யாருமில்லை, இதனைத்தான் சாகும் தருவாயில் புலி தமிழினி சொல்லியிருக்கின்றார்,
“எல்லா இனங்களையும் பகைத்துவிட்டு ஒரு இனம் விடுதலை நாடு அடைவது சாத்தியமா?”
இன்று தமிழுணர்வாளர்கள் தெலுங்கு மக்களை வம்புக்கு பகைக்கும்போதும் நாம் அதனைத்தான் சொல்கின்றோம், எல்லா இனங்களையும் பகைத்துவிட்டு எப்படி அமைதியாக வாழ முடியும்? சாத்தியமா?
இப்படியாக எல்லா தவறையும் புலிகள் செய்வார்களாம், சுருக்கமாக சொன்னால் 4 மாடும் ஒரு சிங்கமும் கதை தெரியுமல்லவா? அப்படி கடைசியாக சிங்கத்திடம் சிக்கிய மாடுதான் புலிகள்.
மற்றபடி மற்ற இயக்கங்களை போல ஒரு இயக்கமாக தொடங்கி, மற்ற எல்லா இயக்கங்களையும் அழித்து, தான் மட்டும் தமிழர்களின் ஒரே அடையாளமாகி, உதவ வந்தவனை எல்லாம் கொன்று விரட்டி, ஒரு அரசியலும் இல்லாமல் ஒரு முடிவுக்கும் வராமல் உலகை பகைத்து தானும் அழிந்து, மொத்த போராட்டத்தையும் முடிவிற்கு கொண்டு வந்ததின் மொத்த பொறுப்பும் புலிகளுக்கானது.
தமிழரின் உரிமை கொடுக்காமல் அங்கு அமைதி சாத்தியமில்லை எனும் கோஷத்தை, பிரபாகரன் கையில் ஆயுதம் இருக்கும் வரை அங்கு அமைதி சாத்தியமில்லை என மாற வைத்தது புலிகள்.
இன்று நிலை என்ன ஆனது?, இதோ பிரபாகரன் இல்லை நாடு எவ்வளவு அமைதி பார்த்தீர்களா? என சொல்லவைத்தாகிவிட்டது. மக்கள் நிலை முன்னிலையினை விட இன்று பலஆண்டு பின்னோக்கித்தான் சென்றுவிட்டது,
இனி அவர்கள் காயங்கள் ஆறி மறுபடி உரிமை கேட்கவே பல ஆண்டுகள் ஆகலாம்.
இதற்கெல்லாம் காரணம் கலைஞர்,சோனியா. இதனை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றால் நம்ப நாம் என்ன அப்பாவி வன்னி மக்களா?
இதில் சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால் அரசியல் தொடக்க காலத்தில் கலைஞரின் சித்துவிளையாட்டுக்கள் ஏராளம், அப்படி செய்த தப்புகளில் எல்லாம் தப்பியவர், இன்று செய்யாத தப்பிற்காக பெரும் பழி சுமக்கின்றார்,
இப்பொழுது கலைஞர் இருந்தாலும் ஏன் இலங்கை குண்டுவெடிப்பை நிறுத்தவில்லை? அவர் எதிர்கட்சி தலைவர் பதவியினை ராஜினாமா செய்யட்டும் என்றுதான் சொல்லிகொண்டிருப்பார்கள்.
நன்றி Stanley Rajan

கருத்துகள் இல்லை: