மின்னம்பலம் :
சென்னை
ஆவடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை
முயற்சி செய்ததில் 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆவடி அடுத்துள்ள அன்னனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(68). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி சுப்பம்மாள்(60). கோவிந்தசாமி - சுப்பம்மாள் தம்பதியிருக்கு நாகராஜ்(35), ரவி என்ற இரண்டு மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கோவிந்தசாமியின் மருமகன் ஆறுமுகம் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்க்க நேற்று(அக்.12) மாலை மாமனார் கோவிந்தசாமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரை ஆறுமுகம் அருகில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கோவிந்தசாமியின் குடும்பத்தினர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இறந்த 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக