புதன், 16 அக்டோபர், 2019

விக்கிரவாண்டி: தரவுகள் சொல்லும் உண்மை!

மின்னம்பலம் : தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உருவாகி எட்டு வருடங்களே ஆகின்றன.
இரண்டு சட்டமன்றத் தேர்தல்களையும், ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள விக்கிரவாண்டி தொகுதி, நான்காவது தேர்தலாக இந்த இடைத் தேர்தலைச் சந்திக்கிறது.
2008ஆம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பின்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 12 தொகுதிகளில் சில தொகுதிகளின் பெயர்கள் மாறின. ஒரு தொகுதி நீக்கப்பட்டது. கண்டமங்கலம் தொகுதி பெயர் மாற்றப்பட்டு கண்டமங்கலம் ஒன்றியமும், விக்கிரவாண்டி ஒன்றியமும் இணைக்கப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி ஆக்கப்பட்டது. இதில் முகையூர் தொகுதியிலிருந்த கானை ஒன்றியமும் சேர்க்கப்பட்டது. கானை போக முகையூர் தொகுதியில் மீதமிருந்த பகுதிகள் திருக்கோவிலூர் தொகுதியோடு சேர்க்கப்பட்டன. இதுவே புதிதாக உருவான விக்கிரவாண்டி தொகுதி.

விக்கிரவாண்டி தான் சந்தித்த முதல் தேர்தல் 2011 சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் திமுகவும், அதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் தேர்தலைச் சந்தித்தன. திமுக கூட்டணியில் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்திருந்தன. இந்தத் தொகுதியின் அதிகபட்ச வாக்காளர்கள் வன்னிய சமுதாயத்தையும், பட்டியலின சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள்.

திமுக 2011 சட்டமன்றத் தேர்தலில் 63,759 வாக்குகள் பெற்றது. அதிமுக அணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 78,656 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது.
பொதுவாகவே விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உண்டு. 2011 தேர்தலில் மாநில அளவில் திமுகவுக்கு எதிராக வீசிய அலையிலும், அக்கட்சி இந்தத் தொகுதியில் 41.93 சதவிகிதம் வாக்கு வாங்க காரணம் அதுதான். மேலும் வன்னியர், பட்டியலினம் ஆகிய இரு பெரும் வெகுஜனத்திலும் திமுகவுக்கான வாக்கு வங்கியே இங்கே அதிகம்.
இதே தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முந்தைய 2011 தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட குறைவாகப் பெற்றபோதிலும் திமுக வெற்றி பெற்றது. 2016ஆம் ஆண்டு பாமக தனித்து நின்று 41,428 வாக்குகள் பெற்றது. அதிமுக 56,485 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றது.
இந்த வகையில் அதிமுகவும், பாமகவும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால் இதே வாக்குகள் அதே அளவிலேயே திரும்பக் கிடைக்குமா என்பது ‘ப்ளைண்ட் கால்குலேஷன்’ ஆகத்தான் முடியும். மேலும் 2016 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகியவை அடங்கிய மக்கள்நலக் கூட்டணி இந்தத் தொகுதியில் 9,981 வாக்குகளைப் பெற்றது. அதிமுக + பாமக கணக்கைப் போலத்தான், திமுக + சிறுத்தைகள் + மார்க்சிஸ்ட் கணக்கையும் கொள்ள வேண்டும்.
இந்தக் கூட்டணிக் கணக்கு ஓட்டுக் கணக்காகியிருக்கிறதா என்பதை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கணக்கை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக + பாமக கூட்டணியில் நின்ற பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 74,819 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல அதே தேர்தலில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், மமக கூட்டணி சார்பில் நின்ற விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் 83,432 வாக்குகள் பெற்றிருக்கிறார். ஆக, 2019 ஏப்ரல் மாதம் திமுக கூட்டணி 46.84% வாக்குகளும், அதிமுக கூட்டணி 42% வாக்குகளும் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தலில் 594 வாக்குகள் பெற்றது. ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டிக்குள் நாம் தமிழரின் வாக்குகள் 3,167 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் சளைக்காமல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, இந்தத் தொகுதியில் இம்முறை 2 % வாக்குகளுக்கு மேல் பெற வாய்ப்பிருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் நகர்ப்புறம் குறைவுதான் என்பதால் கமலின் மக்கள் நீதி மய்யம் 1,662 வாக்குகளைக் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பெற்றது. இப்போது கமல் போட்டியில் இல்லை.
அதிமுகவின் அரசு இயந்திரம், திமுகவின் பண பலத்தை மிஞ்சிய பண பலம் ஆகியவற்றால் வித்தியாசம் நெருங்கலாமே தவிர, 2019 மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதிக்குள் பாமகவும் சிறுத்தைகளும் பெற்ற வாக்கு விகிதங்களையே அதிமுகவும், திமுகவும் பெறலாம் என்பதே புள்ளி விவரங்கள் மூலம் புலப்படும் நிலவரம்.
கடந்த அறுபது ஆண்டுகளாகவே திமுக இந்தப் பகுதியில் அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் வன்னியர்களிடையே ஆளுமை மிகுந்த கட்சியாக இருக்கிறது. இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது கட்சி எல்லை தாண்டி வன்னிய சமுதாயத்தினரை ஈர்த்திருக்கிறது. இதன் எதிரொலியாகத்தான் பொதுத் தேர்தலுக்கே முழுமையாக பிரச்சாரம் செய்யாத ராமதாஸ், இடைத் தேர்தலுக்காக அதுவும் பாமக போட்டியிடாத தொகுதியில் களமிறங்கியிருக்கிறார் என்று விக்கிரவாண்டிக் களத்தில் கேட்கும் குரல்களையும் இந்தக் கணக்கு விவரங்களுக்கு இடையே கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது

கருத்துகள் இல்லை: