வெள்ளி, 18 அக்டோபர், 2019

பஞ்சமி நிலம்: ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்!

பஞ்சமி நிலம்: ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்!மின்னம்பலம் : ரசொலி அலுவலகம் தொடர்பான ராமதாஸின் விமர்சனத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நாங்குநேரி   தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தை கண்டுகளித்தார். மேலும், “அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்” என்று குறிப்பிட்டு தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார். சமீப காலமாக திமுக-பாமக இடையே அறிக்கைப் போர் நடந்துவரும் நிலையில், ஸ்டாலின் அசுரன் திரைப்படம் பார்த்து தெரிவித்திருந்த கருத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார். “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்” என்று ராமதாஸ் தெரிவிக்க, இந்த விவகாரம் சர்ச்சையானது.


இந்த நிலையில் இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 18) காட்டமாக பதிலளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் பட்டாவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டாலின், “மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல. வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “நான் சொல்வது பொய். அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று ராமதாஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: