வியாழன், 21 மார்ச், 2019

ஜனநாயகம் VS சனாதனம்?... ஷாலின் மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : மோடி எனக்கு எதிரி அல்ல...
1951 ஆம் ஆண்டு.... காந்தியை கொன்ற "RSS"க்கு ஒரு ஆசை வந்தது. வெறும் இயக்கமாகவே இருக்கும் அது, தேர்தல் அரசியலை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஆசை. அந்த ஆண்டு RSS இன் தேர்தல் அரசியல் வடிவமாக உருவெடுத்ததுதான் பாரதிய ஜன சங்கம்.
பாரதிய ஜன சங்கத்தின் குறிக்கோள் மிகவும் எளிமையானது. "ஹிந்துதுவா".
மதசார்பற்ற நாடு என்று இருக்கும் இந்தியாவை "ஹிந்து ராஷ்டிரமாக மாற்றுவது, ஒரு நாடு, ஒற்றை பண்பாடு, ஒற்றை மொழி, தேசியவாதம், சமஸ்க்ருதமயமாக்கல்", இவைகளை கொள்கையாக கொண்டதுதான் பாரதிய ஜன சங்கம்.
ஜனசங்கத்தின் லட்சியம் எல்லாம் ஒன்று தான். "ஆரிய இனவாத அரசியல்" மூலம் இந்த நாட்டில் வெறுப்பரசியலை பரவ செய்து ஆட்சியை பிடிப்பது.
மனிதனுக்கு எது எளிதாக பிடிக்கும்? மதம்.
ஆக மதவாதத்தையே முக்கிய கொள்கையாக்கி கொண்டார்கள்.
அப்படி மதவாதத்தை நேரிடையாக அணுகும்போது கிடைக்காத வெற்றி, மற்ற அணிகளை அதாவது "இடதுசாரிகள் வலதுசாரிகள்" என்று எல்லோரையும் இணைத்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே பிழைத்து கொள்ள முடியும் என்கிற உண்மை தெரிய வரும்போது, 1977ம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் "ஜனதா பார்ட்டி" என்று தன்னை பெயரளவில் புதுப்பித்து கொண்டது. அங்கேயும் கொள்கை முரனுக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரு வழியாக "பாரதீய ஜனதா பார்ட்டி" என்ற ஒன்றை நிறுவியது.

இங்கே தான் நேரிடையான மதவாதத்தை பேசாமல், "தேசியமும் ஆன்மீகமும் இரண்டு கண்கள்" என்கிற சிந்தனையை பரப்ப ஆரம்பித்தது. கொள்கை எவ்வளவு பூசி மொழுகி இருந்தாலும் "பாபர் மசூதி உடைப்பு, பாடத்திட்டங்களை காவிமயப்படுத்துவது, ஹிந்தி திணிப்பு, ஆரிய கடவுள் திணிப்பு, இந்தியாவின் பன்முக தன்மையை சீர்குலைப்பது, ஆரிய இனவாதம், சிறுபான்மையினர் வெறுப்பு, தலித் ஒடுக்குமுறை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை" என்று முழுக்க முழுக்க பாசிச போக்கு உடையதுதான் பாஜக.
இன்னும் சொல்லப்போனால் மதவாதத்தை உபயோகித்து மக்களை ஏமாற்றி இந்துத்வ முதலாளித்துவத்திற்கு நாட்டை துண்டு போட்டு விற்பதுதான் பாஜகவின் நிகழ்கால திட்டம். அதுவும் 90% நிறைவடைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் digital india என்கிற விஷயத்தை வைத்து உங்களின் எங்களின் அந்தரங்கத்தை கூட முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது பாஜக. நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.
பாஜகவை பொறுத்தவரை மதவாதம் என்பது ஒரு கருவி மட்டுமே... அதை உபயோகித்து நாட்டை இந்துத்வ முதலாளித்த்துவத்திற்கு தாரை வார்ப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.
சரி... இதுதான் பாஜக...
இந்த பாஜக தன் முகத்தை மாற்றி கொண்டே இருக்கும். ஒரு நாள் அத்வானி, ஒரு நாள் வாஜ்பாய், இன்று மோடி, நாளை யோகி, நாளை மறுநாள் நிர்மலா சீதாராமன்.
பாஜக ஒரு இலுமிநாட்டி இயக்கம் போல் வாழ்ந்து கொண்டே இருக்கும்... தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள், மறக்கப்படுவார்கள். ஆனால் பாஜக வெற்றிகரமாக இயங்கி கொண்டே இருக்கும் .
இப்பொழுது சொல்கிறேன்.
மோடி என் எதிரி அல்ல.
பாஜக தான் எனது எதிரி.
ஆக எவன் ஒருவன் மோடி கெட்டவர் அதனால் ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறானோ அவனை நம்பாதீர்கள்.
பாஜக என்றால் சனதானம், பாஜகவை எதிர்ப்போம் என்று சொல்வது தான் நேர்மையான அரசியல்.
இந்த முறை மட்டுமல்ல வேறு எந்த முறையும் பாஜக இந்த நாட்டில் தலையெடுக்க கூடாது என்று உறுதியாக இருப்போம்.

கருத்துகள் இல்லை: