ஞாயிறு, 17 மார்ச், 2019

மதிமுகவின் தனி சின்னம்... இறுதி வரை போராடும் ஈரோடு திமுக ...

ஸ்டாலின் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்vikatan : பிரதான கட்சிகளின் நிர்வாகிகளைத் தேடித்தான் வேட்பாளர்கள் வருவார்கள். அதற்கு மாறாக, சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ம.தி.மு.க வேட்பாளரின் வீட்டுக்குச் சென்றது இதுவே முதல்முறை` தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. `ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட இருக்கிறது ம.தி.மு.க. இதன்மூலம் அ.தி.மு.க வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது’ எனக் கொந்தளிக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் பட்டியலை இன்று அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதில், ஈரோடு தொகுதி ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்பாளராக ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிட இருக்கிறார். “வேட்பாளர் பெயரை அறிவித்ததில்கூட ஈரோடு தி.மு.க-வுக்கு உடன்பாடுதான். ஆனால், பம்பரம் சின்னம் கிடைக்காது என்பதால் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. இந்தத் தகவல் ஈரோடு தி.மு.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது’’ என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,
ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
“ ஈரோடு மக்களவைத் தொகுதி தி.மு.க-வுக்கே வந்து சேரும் என எதிர்பார்த்தோம். அதற்கு மாறாக, கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. கடந்த சில வாரங்களாக ஈரோடு தொகுதியை வைகோ கேட்டு வருவதை நாங்கள் அறிந்தோம். இதையடுத்து, ` உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள்’ என்பதை வலியுறுத்துவதற்காக ஈரோடு கணேசமூர்த்தியின் வீட்டுக்குச் சென்றோம். கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் ஈரோடு தெற்கு மா.செ முத்துச்சாமி, ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 100 நிர்வாகிகள் எங்களுடன் வந்தனர்.
ஸ்டாலினுடன் வைகோ
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், `தொகுதி நிலவரம் கடுமையாக இருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நிற்பதே பலன் தரும்’ என்பதை வலியுறுத்திக் கூறினார் சுப்புலட்சுமி. இதைக் கேட்ட கணேசமூர்த்தி, `கட்சிக்குள் விவாதித்துவிட்டுச் சொல்கிறோம்’ எனக் கூறிவிட்டார். கட்சி நிர்வாகிகளைத் தேடித்தான் வேட்பாளர்கள் வருவார்கள். அதற்கு எதிராக தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளே வேட்பாளர் வீட்டுக்குச் சென்றது இதுவே முதல்முறை. இன்று மதியம் தொகுதி அறிவிப்பு வெளியாகும் வரையில், `அவர் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவார்’ என உறுதியாக நம்பினோம். இன்று காலையில் ஸ்டாலினிடம் பேசிய வைகோ, சுயேச்சை சின்னத்தில் நிற்பதாகத் தெரிவித்துவிட்டார். இந்தத் தகவலால் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது’’ என விவரித்தவர்,


“கணேசமூர்த்திக்கு சீட் கொடுக்கப்படுவதில், ம.தி.மு.க-வுக்குள்ளேயே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும்போதெல்லாம் கணேசமூர்த்திக்கே வாய்ப்பு வந்து சேருகிறது. அதற்கு முன்பாக, கண்ணப்பனுக்கு சீட் கொடுக்கப்பட்டு வந்தது. கணேசமூர்த்திக்கு சீட் கொடுக்கப்படுவதில் அவைத் தலைவர் துரைசாமி, மல்லை சத்யா உள்ளிட்டவர்களுக்கு விருப்பம் இல்லை. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, `சுயேச்சை சின்னத்தில் நிற்போம்’ எனத் தலைமையை வலியுறுத்தியுள்ளனர். இந்தத் தகவல் எங்களுக்கு வந்ததால்தான், ` உதயசூரியனில் நின்றால் கணேசமூர்த்தி கரையேறுவார், இல்லாவிட்டால் தோற்பார்’ எனக் கூறிவிட்டோம். வேட்புமனு பரிசீலனை முடிந்து 29-ம் தேதி மதியம் ம.தி.மு.க-வுக்குத் தனிச் சின்னம் ஒதுக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு தேர்தலுக்கு 16 நாள்களே இருக்கின்றன. இந்த 16 நாள்களில் தொகுதி முழுக்க இவர்களது புதிய சின்னத்தைக் கொண்டு செல்வது சிரமம். இதனால் ம.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

தி.மு.க வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கக்கூடிய தொகுதி இது. சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க தோற்றது. தாராபுரம், காங்கேயம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய ஐந்து தொகுதிகளும் தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகள். அப்படியிருக்கும்போது, உதயசூரியனில் நிற்பதுதான் ம.தி.மு.க-வுக்கு லாபம். தற்போதைய நிலவரப்படி, தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடக் கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். பம்பரம் சின்னம் இருந்தால்கூட மக்கள் வாக்களிப்பார்கள். வி.சி.க-வுக்கு மோதிரம் சின்னம் கொடுக்காததுபோல, ம.தி.மு.க-வுக்கும் பம்பரம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அனைத்துத் தொகுதிகளிலும் நிற்பதாக இருந்தால் தனியாகச் சின்னம் ஒதுக்கிக் கொடுப்பார்கள். தேர்தல் ஆணையமும் ம.தி.மு.க-வுக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. காலம் தாழ்த்தாமல் உதயசூரியன் சின்னத்தை வைகோ தேர்வு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அ.தி.மு.க-வின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்’’ என்றார் ஆதங்கத்துடன்.

கருத்துகள் இல்லை: