மாணிக் தாக்கூர்- இளன்கோவன் |
தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கேட்ட சில தொகுதிகள் திமுகவால் வழங்கப்படவில்லை. குறிப்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காகக் கேட்கப்பட்ட ஈரோடு மற்றும் நெல்லை உட்பட சில தொகுதிகள் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.
ஈரோடு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக கணேசமூர்த்தியும் அறிவிக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பில் டெல்லியிடம் சீட் கேட்டு சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஈரோடு இல்லையென்றால் திண்டுக்கல் அல்லது கோவை ஆகிய தொகுதிகளுக்கு முயற்சி செய்தார் இளங்கோவன். ஆனால், திண்டுக்கல் திமுகவுக்கும், கோவை மார்க்சிஸ்டுக்கும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போது தமிழகத்தில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள ஒன்பது தொகுதிகளில் இளங்கோவன் கிருஷ்ணகிரி தொகுதிக்காகவும் முயற்சி செய்தார். ஆனால், அத்தொகுதியில் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் செல்லகுமார் போட்டியிடுவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 17) சத்தியமூர்த்திபவன் வட்டாரத்தில் கிடைத்த தகவல்களின்படி,
“சிவகங்கையில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியோ, அவரது மனைவி ஸ்ரீநிதியோ போட்டியிட வாய்ப்பில்லை. மாணிக் தாகூருக்குச் சொந்த ஊர் சிவகங்கை என்பதால் அவர் சிவகங்கையில் போட்டியிடலாம். சிவகங்கைக்கு சுதர்சன நாச்சியப்பனும் முயற்சி செய்கிறார். ஆனால், மாணிக் தாகூர் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பதால் அவருக்கு சிவகங்கை கிடைக்கலாம்.
விருதுநகர் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. காமராஜர் மண்ணான விருதுநகர் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சமூக வாக்குகள் அதிகம் இருப்பதும் இதற்குக் காரணம். எனவே, சிவகங்கையில் மாணிக் தாகூரும், விருதுநகரில் இளங்கோவனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால் அதில் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக