மோடி யசோதா திருமண படம் |
வெளியானதற்குப் பின் வந்த முதல் வாரத்தில் மற்ற வழக்கமானப்
பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டன. தேசப் பாதுகாப்பு குறித்த கவலை மட்டுமே நம் முன் நிறுத்தப்பட்டன. ஆனால் நாம் முதல் கேள்வியாக கேட்கவேண்டியது இதைத் தான். ‘இந்தத் தேர்தலில் வேலையின்மை பிரச்சினை என்பது சத்தமில்லாமல் கொல்லுமா?” என்பதுதான் கேள்வி. நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு
ஆதாரமும் இது சாத்தியமே என்கின்றன. ஆனால், இதை ஒரு சாத்தியம் என்கிற அளவில் மட்டும்தான் தற்போதைய சூழலில் பார்க்க முடிகிறது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘நீடித்த வேலைவாய்ப்புக்கான மையம்’ (Centre for Sustainable Employment) உரிய தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கைக்கு ‘உழைக்கும் இந்தியாவின் நிலை – 2018’ என்று
பெயரிட்டிருக்கின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த இந்த ஆய்வறிக்கையில் (https://bit.ly/2TccoN3), தற்போதைய வேலையின்மை நிலை குறித்து மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலையின்மை என்பது நாள்பட்ட பிரச்சினையாக, ஆனால், கண்ணுக்குத் தெரியாததாக இருந்தது. அரசியல் ரீதியாகச் சமாளிக்கத்தக்கதாகவும் இருந்தது. இன்று அது கடுமையானதாகவும் வெளிப்படையாக உணரத்தக்கதாகவும் மாறிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய பிரச்சினையாக அது இப்போது உள்ளது. கிராமங்களிலும், அங்கிருந்து நகரத்தில் குடிபெயர்ந்தும் வாழ்கிற கிராமவாசிகளின் வேலையின்மைப் பிரச்சனை (Open unemployment) 5 சதவீதம் அதிகரித்திருப்பதாக அசிம் பிரேம்ஜி ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் உள்ள வேலையின்மைப் பிரச்சனை 15 சதவீதத்துக்கும் மேலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் எப்போதும் போன்றதான வழக்கமான வேலையின்மை பிரச்சினை நீடிக்கிறது. மறுபுறம், நிலையற்ற, குறை ஊதிய வேலையைக் கொண்ட வேலையின்மை நிலவுகிறது. அத்துடன் குடிபெயர்வு மற்றும் கிராமவாசிகளின் வேலையின்மை பிரச்சினையும் இப்போது சேர்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் பார்வைக்கு மேலும் இரண்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்எஸ்எஸ்ஓ) மேற்கொண்ட தொழிலாளர் திறன் ஆய்வின் அறிக்கையை வெளியிட விடாமல் புதைத்துவிட மோடியின் அரசு முயற்சி செய்தது. ஆனால், கசிந்துவிட்ட அந்த ஆய்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் நம் நாட்டின் வேலையின்மை விகிதம் 6.1 சதவீதம். இது, கடந்த 1972ஆம் ஆண்டிலிருந்து என்எஸ்எஸ்ஓ மேற்கொண்டுவரும் ஆய்வு வரலாற்றிலேயே அதிகப்படியான வேலையின்மை விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோடி ஆட்சியின்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதை அந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வேலையின்மை பிரச்சினை கடுமையாக அதிகரித்ததையும், அதில் பெண் தொழிலாளர்கள்தான் அதிக அளவில் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளானதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
அதேபோல், சமீபத்தில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 2017 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலகட்டத்தில் 1 கோடியே 10 லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நம்பகமான தரவுகள் காட்டும் புள்ளிவிவரங்களுடன், கள நிலவர ஆய்வுகளையும், துறை வாரியான மதிப்பீடுகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (ஏஐஎம்ஓ) வேலையிழப்புகளை உறுதி செய்துள்ளது. உதாரணமாக, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால், ஸ்மார்ட் சிட்டி ஆக்கப்படும் என்று மோடியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட கோயம்புத்தூர் பகுதிகளில் பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலையிழப்புகளால் அவதிப்பட்டது தொடர்பாக வெளியான செய்திகளைக் குறிப்பிடலாம். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரசு வேலைகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பதும் வேலையின்மையின் உக்கிரத்தையே காட்டுகிறது (உதாரணமாக, மகாராஷ்டிரத்தில் அரசு வெயிட்டர்களுக்கான 12 பணியிடங்களுக்கு 7,000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 12 பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆதாரம்: https://bit.ly/2W33Iu6)
அரசு, தரவுகளைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் மறுக்கவோ, ஏமாற்றவோ, கவனத்தைச் சிதைக்கவோ அல்லது நாடகமாடவோ செய்யலாம். ஆனால், மூன்று உண்மைகளை அரசால் மறுக்கவே முடியாது. முதலாவது, நாம் கடுமையான வேலையின்மை பிரச்சினையில் இருக்கிறோம் என்பது. இரண்டாவது, தற்போதைய ஆட்சியில் பிரச்சினை மேலும் மோசமான நிலையை நோக்கியே செல்கிறது. மூன்றாவது, பணமதிப்பிழப்பு, அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முதலான அரசின் முட்டாள்தனமான கொள்கை முடிவுகளால் நிலைமை இன்னும் மோசமாகிறது.
ஆனால், உண்மையில் வேலையின்மை பிரச்சினைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதே கேள்வி. கடந்த ஓராண்டுகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் சொல்லும் பதில்: ‘ஆம், வேலையின்மைப் பிரச்சினைகளை மக்கள் மிகவும் தெளிவுபட உணர்ந்திருக்கிறார்கள்’ என்பதுதான். பாஜகவும் மோடியும் தேர்தல் களத்தில் முந்துவதாகச் சொல்லும் கருத்துக் கணிப்புகள் இவை.
வேலையின்மைதான் மக்களின் மிக முக்கியப் பிரச்சினை என்பது கடந்த இரு ஆண்டுகளாக மக்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒவ்வொரு கருத்துக் கணிப்பு மூலமும் தெரியவருகிறது. நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையே வேலையின்மைதான் என்று எவ்வித தயக்கமுமின்றி 26 சதவீதத்தினர் கூறியதாக மே 2018இல் வெளியான நம்பகத்தன்மை மிக்க ‘சிஎஸ்டிஎஸ் மூட் ஆஃப் தி நேஷன் சர்வே’ கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதே அமைப்பு, கடந்த காலங்களில் எடுத்த கருத்துக் கணிப்புகளுடன் ஒப்பிடும்போது, வேலையின்மை பிரச்சினை இப்போது இரு மடங்காக கவனம் ஈர்த்துள்ளது. 2014இல் 8 சதவீதத்தினரும், 2009இல் 13 சதவீதத்தினரும், 1996இல் 12 சதவீதத்தினரும் வேலையின்மையை நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாகக் கருதினர் என்பது நினைவுகூரத்தக்கது.
பாலகோட் சம்பவத்திற்குப் பிறகும்கூட இதே நிலை நீடிக்கிறது என்பதை இந்தியா டுடே மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் அறியலாம். வேலையின்மை பிரச்சினைகளை மனதில் கொண்டே தாங்கள் வாக்களிக்கப்போவதாக 36 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். பயரங்கரவாதப் பிரச்சினைகளை 23 சதவீதத்தினரும், விவசாயிகள் பிரச்சினைகளை 22 சதவீதத்தினரும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, வேலையின்மை என்பது வெறும் பொருளாதார நிபுணர்களுக்கான பிரச்சினை இல்லை என்பதும், அதுவும் மக்களின் முக்கியப் பிரச்சினை என்பதும் தெளிவாகிறது.
இறுதியாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் கேள்வியைப் பார்ப்போம். “வேலையின்மை என்பது அவ்வளவு கடுமையானதாக இருக்கிறது என்றால், மக்கள் ஏன் வீதியில் இறங்கிப் போராடவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார். இதற்கு மிக எளிதான பதில்: “ஆம், மக்கள் போராடிவருகின்றனர்” என்பதே. தினமும் செய்தித்தாள்களைக் கூர்ந்து கவனியுங்கள். வேலையின்மை மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு இடத்தில் நடப்பதை அறியலாம்.
பட்னாவில் கடந்த மாதம் மகத் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகள் வெளியிடத் தாமதமாவதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் காவல் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பணியில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த மாதம் போராட்டம் நடத்தினர்.
குஜராத்தில் படேல்கள், மகாராஷ்டிராவில் மராத்திகள், ஆந்திராவில் காபு சமூகத்தினர், ஹரியாணாவில் ஜாட் சமூகத்தினர் திரண்டு போராட்டங்களை நடத்தினார்களே, அவை அனைத்துமே வேலையின்மைப் பிரச்சினைகளின் தாக்கம்தானே?
பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும் ‘யங் இந்தியா அதிகார் மார்ச்’ மற்றும் ‘யுவா ஹல்லா போல்’ போன்ற பெயர்களில் தேசிய அளவில் நடத்தப்பட்ட போராட்டங்களும் இங்கே குறிப்பிடத்தக்கவை.
எனினும், விவசாயிகள் பிரச்சினைகள் போலவோ, வார்த்தை யுத்தம் நடக்கும் ரஃபேல் ஊழல் விவகாரம் போலவோ அல்லது இதர ஊழல் விவகாரங்கள் போலவே வேலையின்மை பிரச்சினை என்பது வெளிப்படையாக கவனத்தை ஈர்க்கவில்லை. வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் அதைத் தங்களது தனிப்பட்ட தோல்வியாகப் பார்க்கிறார்களே தவிர, நம் அமைப்பு முறையின் அநீதி என்கிற கோணத்தில் அணுகுவதில்லை. அவர்கள் பொதுவான பிரச்சினைகளுக்கும் தனிப்பட்ட தீர்வுகளையே நாடுகின்றனர். வேலையின்மையால் போராட்டங்களும் நடக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்டோர் தேசிய அளவில் திரண்டு போராடுவதில்லை. வேலைவாய்ப்பற்ற மாணவர்கள், வேலைவாய்ப்புக்குக் காத்திருப்போர், மிகக் குறைந்த ஊதியத்துக்குத் தள்ளப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முதலானோர் ஒன்றுகூட வசதியாகத் தயார் நிலையிலான போராட்டக் களம் ஏதும் இல்லை. அதேபோல், பல்வேறு அமைப்புகளும் குழுக்களும் வேலையின்மை பிரச்சினைகளுக்கு அதிமுக்கியத்துவம் தரும் நிலையில் இல்லை. எனவே, வேலையின்மை என்பது மிகவும் முக்கியமானதும், மிகவும் கமுக்கமானதுமான அரசியல் பிரச்சினையாகவும் உள்ளது.
இந்த விவகாரத்தில் பேரமைதி நிலவுவதை பாஜக தனக்குச் சாதமாகக் கருதலாம். இது, இந்தத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினையாக இருக்காது என்ற மிதப்பில், மோடியின் பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பேரமைதிக்குள் பேராபத்து நிறைந்துள்ளது. இந்தப் பிரச்சினை சத்தமின்றி மிகப் பெரிய அளவில் எழக்கூடும். ஏதோ ஒரு நிகழ்வோ, தலைவர்களின் பேச்சோ அல்லது கவனம் ஈர்க்கும் வாக்குறுதியோ ஏதேனும் ஒன்றின் மூலம் இப்பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கலாம். இவற்றின் தாக்கத்தால் ஆளும் கட்சிக்குப் பெரும் பின்னடைவும், அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கும் வாக்குகளில் மிகப் பெரிய மாற்றமும் ஏற்படலாம். எனவேதான் வேலையின்மை பிரச்சினை ‘சைலன்ட் கில்லர்’ ஆகப் பார்க்கப்படுகிறது.
யோகேந்திர யாதவ்
(கட்டுரையாளர் ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்)
நன்றி: தி ப்ரின்ட் (https://bit.ly/2Hu9dyP)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக