புதன், 20 மார்ச், 2019

BBC : திமுக தேர்தல் அறிக்கை - 15 முக்கிய அம்சங்கள்

2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். அதில் உள்ள சில அம்சங்களை வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.
  • தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும் வகையில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
  • வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும்.
  • மத்திய நிதிக்குழுவின் அமைப்பும் அந்த பணிகளும் மாநிலங்கள் மன்றங்களால் வரையறுக்கப்பட வேண்டும்.
  • மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.
  • தொழிலாளர் ஊதிய திட்டத்தின் குறைந்தபட்ச தொகையாக 8,000 ரூபாய் நிர்ணயிக்கப்படும்.
  • மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்டவற்றிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • வேலையில்லா திண்டாட்டத்தை போக்கிட மத்திய மாநில அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
  • முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபன அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்துவோம்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாணவர்களின் கல்விக்கடன்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிராமத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லாமல் 50,000 ரூபாய் கடனாக வழங்கப்படும்.
  • அகதி முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10வது வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவர்
  • தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரிசு வேட்பாளர்கள்
கடந்த ஞாயிற்று கிழமை திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
தூத்துக்குடியில் கனிமொழி, மத்திய சென்னை வேட்பாளராக தயாநிதி மாறன், நீலகிரி தொகுதியில் ஆ.ராசா உட்பட இருபது தொகுதிகளின் வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.
தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் பல வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் அக்கட்சியிலுள்ள மிகவும் அறியப்பட்ட வாரிசுகளாக உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணி, முன்னாள் அமைச்சரும் தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.கவிருந்து பிரிந்துவந்து தி.மு.கவில் இணைந்த மேட்டூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் மேட்டூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 6200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்.
வேட்பாளர்கள் அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 20ஆம் தேதியன்று திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பணக்காரர்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய நிலை தி.மு.கவில் ஏற்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி அல்ல, எல்லாத் தரப்பினருமே போட்டியிடும்வகையில்தான் வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை: