agharam.wordpress.com : முத்துசாமி இரா : சங்ககாலத் தமிழ் மக்களால் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட விலங்கு குதிரை
ஆகும். சங்க இலக்கியத்தில் வளர்க்கப்படும் குதிரையைப் (Domesticated
Horses) பற்றிப் பல செய்திகள் காணப்படுகின்றன. இவ்விலக்கியங்களில்
காடுகளில் சுற்றித் திரிந்த குதிரைகள் (Free Roaming Horses) பற்றிய
செய்திகள் காணப்படவில்லை. எனவே குதிரையின் தாயகம் தமிழகமாக இருந்திருக்க
வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர்களின் அரேபியக் கடல்
வணிகத்தோடு குதிரை மிக நெருங்கிய தொடர்புடையது.
மிகச் சிறந்த சிறப்பியல்புகள் கொண்ட குதிரைகள் அரேபிய நாடுகளில் இருந்து
நாவாய் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட செய்தியினைச் சங்க இலக்கியங்கள்
வாயிலாகவும் வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளைக் கொண்டும் அறிந்து
கொள்ள முடிகிறது. இந்தப்பதிவில் குதிரை பற்றிய வரலாற்றுச் செய்திகளைத்
தொகுத்து வழங்க ஒரு சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. படித்துவிட்டு
உங்கள் மேலான கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” என்ற பாடல் வரி சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரான காவேரிபூம்பட்டிணத்தில், அரேபிய நாடுகளிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான சான்றினை இந்த வரிகள் பட்டினப்பாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கும் அரேபிய நாடுகளுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பு 2500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. அரேபியர்கள் சிறந்த கடலோடிகள் ஆவர். புவியியல், வானியல் ஒளியியல், இரசாயனவியல், இருத்துவம், சேத்திர கணிதம், அட்சர கணிதம் போன்ற அறிவுத்துறைகளில் அரேபியர்கள் மிகவும் அறிவுடையவர்களாக விளங்கினர்.
இவர்களுடைய புவியியல் தரவுகள் மற்றும் பல்வேறு நாடுகள் பற்றிய கடல் வரைபடங்கள், திரைகடலோடும் திறமைக்குத் தக்க சான்றுகளாக அமைந்துள்ளன. நாவாய் வங்கம் ஆகிய மரக்கலங்களைச் செலுத்தி மேற்கொண்ட கடற்பயணங்களும் கடல்வணிகமும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இவர்களுடைய கடல் வணிகம் மற்றும் நாவாய், மரக்கலம் போன்ற மரபு சார்ந்த கப்பல் கட்டும் கலை மற்றும் கப்பல் செலுத்தும் கலை, கடல் மேலாண்மை, மீன் பிடித்தல், முத்துக்குளித்தல் போன்ற கடல் சார்ந்த தொழில்நுட்பங்களில் சிறந்திருந்தனர். இவர்கள் குதிரை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
கடல் வணிகம் மேற்கொண்டு தமிழகம் வந்த அரேபிய இஸ்லாமியர் காவிரிபூம்பட்டணம், கொற்கை, காயபட்டணம், முசிறி ஆகிய தமிழகத் துறைமுகப்பட்டணங்களில் வணிகம் மேற்கொண்டனர். நாளடைவில் இந்தத் துறைமுகப்பட்டணங்களிலேயே தங்கினர். சங்க இலக்கியங்கள் இவர்களைச் சோனகர் என்று குறிப்பிடுகின்றன.
தொடக்கத்தில் பண்டைத் தமிழர்கள் கடல் வணிகம் ஜாவா, சுமத்ரா, மலாக்கா, இலங்கை தொடங்கிப் பாரசீக வளைகுடா வரை நடைபெற்றது. அரேபியர்கள் தென்னிந்தியத் துறைமுகங்களை மையமாகக் கொண்டு சீனம், ஜாவா, சுமத்திரா, மலாக்கா ஆகிய நாட்டின் துறைமுகங்களுக்குச் சென்று இந்தியத் துணிகள், மிளகு, இஞ்சி போன்ற தமிழக மசாலாப் பொருட்கள் போன்ற சரக்குகளைக் கொள்முதல் செய்தனர். இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட சரக்குகளை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொண்டு சென்றனர். ஐரோப்பாவில் இருந்து வாசனைத் திரவியங்கள், பவளம் மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்கள் மற்றும் தகரம், ஈயம், உலோக வேலைகளில் பயன்படுத்தப்படும் தாமிரம் கனிமப் பொருட்களை இங்கே கொண்டு வந்து பண்டம் மாற்றி வணிகம் புரிந்தனர்.
யவனர் தந்த வினைமாணன் கலங்கள்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
(புறநானூறு பாடல் 56, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்)
யவணரின் மரக்கலங்கள் பொற்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்து மிளகினை ஏற்றிச் சென்றனர்.
குதிரை இனம்
விலங்கியல் வகைப்பாடு (Zoological Classification)
வெள்ளை, கறுப்பு, சாம்பல், செஸ்ட்நட் (Chestnut) என்னும் பழுப்பு கலந்த செந்நிறம், மற்றும் இரு நிறங்களின் கலப்பு ஆகிய நிறங்களில் குதிரைகள் காணப்படுகின்றன.
வெள்ளி, பால், முத்து, வெண்ணிலா, வெண்சங்(கு),
எள்ளல்இல் வெண்பனி எனும் நிறம் இவற்றுள்
ஒருநிறம் உடைய பரி, பாடலம் எனப்
படும் மாதுள மலர், ஒரு செம்பஞ்சின்
ஒரு நிறம் உடைய பரி, அது சிவலை;
கருமுகில், குயில், மை, கருவண்(டு) இவற்றுள்
ஓர்நிறம் அடையச் சேர், பரி காரி;
எரிநெருப்(பு) அன்ன பரி, அது பொன்னி;
இந்நிறம் நான்கும் துன்னுதல் மறை, ஆம்.
எந்நிறம் உடைய தெனினும், அந்நிறம்
தன்இடை வெண்மை துன்னிய பரியே
நன்னலம் உடைத்(து) எனப் பன்னிடும் பரிநூல்
(மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை)
படைக்கலப் பயிற்சி பற்றி எழுதும் போது குதிரையின் நிறங்கள், சுழிகள் மற்றும் குணங்கள் பற்றி இந்தப் பாடல் விவரிக்கிறது.
இஃது ஒரு தாவர உண்ணி ஆகும். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. நின்ற நிலையில் தூங்கும் பண்பு கொண்டது. குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரை கருவுற்ற பதினோராவது மாதத்தில் குதிரைக் குட்டியை (Foal) ஈனும். ஒரு குதிரை அதிகபட்சமாக ஐந்து குதிரைக் குட்டிகளை ஈனக்கூடும். ஈன்ற சில நாட்களிலேயே குதிரைக் குட்டிகள் 400 கி.கிராம் எடையை எட்டிவிடும். இனவிருத்தி மூலம் பிறந்த உயர்ரகக் குதிரைக் குட்டிகள் பிறந்தவுடனே, இவற்றின் தாய், தந்தை உள்ளிட்ட தகவலுடன் பிறப்பைப் பதிவு செய்வது வழக்கம். குறிப்பிட்ட குதிரையின் வயதை அதன் பற்களைக் கொண்டே கணக்கிட்டு மதிப்பீடு செய்கிறார்கள். காண்க அஸ்வசாஸ்திரம்
Foal: குதிரை குட்டி. ஒரு வயதிற்குக் குறைந்த ஆண் மற்றும் பெண் குதிரைக்குட்டிகளை ஃபோல் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
Yearling: ஓராண்டு நிரம்பிய ஆனால் இரண்டு ஆண்டுகள் தண்டாத ஆண் பெண் குதிரைக் குட்டிகளை யார்லிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
Colt: நான்கு வயதினை அடையாத இளம் குதிரைகளைக் கோல்ட் என்று அழைக்கலாம். எனினும் இளம் ஆண் குதிரைகளை மட்டுமே கோல்ட் என்று அழைக்கவேண்டுமாம்
Filly: நான்கு வயது நிரம்பாத இளம் பெண் குதிரைக்குட்டிக்கு ஃபில்லி என்று பெயர்.
Mare: நான்கு வயது நிரம்பிய அல்லது நான்கு வயதிற்கு மேற்பட்ட பெண் குதிரைகளை மேர் என்று அழைக்கிறார்கள்.
Stallion: நான்கு வயதினைத் தாண்டிய, பருவம் அடைந்த, ஆண்குதிரைக்கு ஸ்டாலியன் என்று பெயர். பொலிக் குதிரை; மாப்பிள்ளைக் குதிரை என்றும் அழைப்பதுண்டு
Gelding: ஆண்மை நீக்கிய குதிரை அல்லது விரை நீக்கப்பட்ட குதிரைக்குக் கேல்டிங் என்று பெயர்.
குதிரையின் எலும்புச் சட்டம் (Skeleton) வலுவானது. இந்த விலங்கின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் காணப்படுகின்றன. இவற்றில் காரையெலும்பு (Clavicle) கிடையாது. குதிரையின் கால் முட்டிக்குக் கீழே தசைகள் கிடையாது. இந்த விலங்கின் கால்களும் குளம்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குளம்புகளின் தேய்மானதைத் தடுப்பதற்காகக் குதிரைக்கு இரும்பில் செய்யப்பட்ட லாடங்களைப் பொருத்துகிறார்கள். இந்த லாடங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்ற வேண்டும். குதிரையின் உயரம் சராசரியாக 60 முதல் 62 அங்குலம் வரை இருக்கும். குதிரையின் கழுத்தும் உடலும் சேரும் பகுதியின் அதிகபட்ச உயரத்தையே குதிரையின் உயரம் என்று கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். நன்கு பராமரிக்கப்படும் நவீன இனக் குதிரைகளின் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.
குதிரைகளின் தாயகம்
குதிரைகள் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவையெல்லாம் வளர்ப்புக் குதிரைகள் (Domesticated Horses) பற்றிய பாடல்களே ஆகும். இந்த இலக்கியங்களில் காடுகளில் சுற்றித் திரிந்த குதிரைகள் (Free Roaming Horses) பற்றிய பாடல்கள் இடம்பெறவில்லை. மாறாகக் குதிரைப்படையில் பயன்படுத்தப்பட்ட விலங்காகவும், தலைவன் தேரை இழுத்துச் செல்லும் விலங்காகவும், கொடை அளிக்கத்தக்க விலங்காகவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்ட செய்திகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறுகின்றன. களவைக் கற்பாக மாற்றும் ‘மடல் ஊர்தல்’ நிகழ்வில் பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரையின் மேல் சங்ககாலத் தலைவன் ஊர்வதல் பற்றிய செய்திகளும் சங்க இலக்கியத்தில் உண்டு.
ஆனால் புலி, யானை, மான், ஆமான், கேழல், முளவுமா, செந்நாய், நீர் நாய், கரடி, வெருகு, அணில், முயல், முளவுமா, வருடை, குரங்கு போன்ற காட்டு விலங்குகள் (Wild Animals) பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. காட்டு யானைகளைப் பிடித்துப் பழக்கிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. வடமொழியால் யானையைப் பயிற்றுவிக்கும் செய்தி முல்லைப்பாட்டில் இடம்பெறுகிறது.
கலைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா இளைஞர் கவளம் கைப்பக்
(முல்லைப்பாட்டு 35 – 36)
விரவு மொழி பயிற்றும் பாகர்
(மலைபடுகடாம் 327)
வடமொழி பேசும் ஆரியர்களான யானைப் பாகர்கள் புலன் வழியாகவும், மொழி வழியாகவும் யானையைப் பயிற்றுவித்தனர். போர்தொழிலுக்காகப் பழக்கப்பட்ட யானையை “வினை நவின்ற யானை” எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்தச் செய்திகளின் அடிப்படையில் குதிரைகளின் தாயகம் தமிழகம் அல்ல என்று கருதலாம்.
பண்டைத் தமிழர் கடல் வணிகம்
தொடக்கக் காலங்களில் தமிழர்களின் கடல் வணிகம் இந்தோனேசிய தீவுகள் முதல் பாரசீக வளைகுடா வரை கடற்கரை ஓரங்களில் மட்டும் நடைபெற்றது. தொடர்ந்து வந்த காலங்களில் தமிழர் வணிகம் மேற்கே ரோம் தொடங்கிக் கிழக்கே சீனம் வரை நடுக்கடல் வணிகமாகப் பரிணமித்தது. தமிழ் வணிகர்கள் நீண்ட காலம் வரை இந்தோனேசிய தீவுகளுக்கும் ஏமன், சிரியா போன்ற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே உள்ள நாடுகளுக்கு மட்டும் சென்று வந்தனர். அரேபியர்கள் தமிழகம், இலங்கை, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வாசனைப் பொருட்களைப் பெற்று ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகித்தனர். ரோம் நாடுகளில் தமிழக வாசனைப் பொருட்களின் தேவை மிகுதியாக இருந்தது.
காவிரிபூம்பட்டினத்துத் துறைமுகத்திற்கு அரேபிய நாடுகளிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்ட செய்தியை “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” எனப் பட்டினப்பாலை பதிவு செய்துள்ளது. குதிரையின் அறிமுகத்திற்கு முன்பு தமிழகத்தில் கழுதைகளும் (Donkey: Equus Africanus Asinus) எருதுகளும் (Ox: Bos Taurus) பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. ‘வெள் வாய்க் கழுதை’, ‘பொறை மலி கழுதை’ என்று இலக்கியங்களில் சுட்டப்படும் கழுதைகள் வணிகர்கள் சாத்தோடு அரிய சுரங்களைக் கடக்கப் பயன்பட்டன. கரடுமுரடான நிலம் வழியே உப்பு மூட்டைகளைச் சுமந்து சென்ற கழுதைக் கூட்டம் பற்றி அகநானூறு பதிவு செய்துள்ளது.
நிரை பர பொறைய நரைப்புறக் கழுதை
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
(அகநானூறு 207)
நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றை
புறகிறைப் பண்டத்துப் பொறை
(அகநானூறு . 343:12.15, மருதனிள நாகனார்)
பயணங்களுக்கு எருதுகள் பூட்டிய வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். எருதுகள் இழுத்துச் செல்லும் உப்பு வண்டிகளைப் பற்றி “நோன்பகட் டுமணர் ஒருகையொடு வந்த” என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், திருப்புடைமருதூரில் அமைந்துள்ள நாறும்பூநாதர் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும், குதிரைகளோடு நிற்கும் அரேபிய வணிகர்கள் நிற்பதும் காட்சியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
வெனிஸ் நகரத்து வணிகப் பயணியான மார்கோ போலோ (Marcopolo) முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி 1268 – கி.பி 1311) ஆட்சிக் காலத்தில் காயல்பட்டணம் துறைமுகம் வழியே தமிழகத்திற்கு வந்தார். இவர் எழுதிய பயணக் குறிப்புகளில் பாண்டிய நாட்டில் நடைபெற்ற குதிரை இறக்குமதியைப் பற்றி விவரித்துள்ளார். இப்பகுதியை ஆட்சி செய்தவர் ‘அஸ்தியய்’ என்று மார்கோ போலோவும் ‘கலஸ்தியர்’ என்று வாசஃப் அலியும் (Wasaff Ali) குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடுவது மாறவர்மன் குலசேகரப் பாண்டியனையே ஆகும்.
கிஸ் (Kis), ஹோர்மஸ் (Hormus), டோபர், சோபர், ஏடன் ஆகிய வளைகுடா ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் போர்க்குதிரைகளையும் ஏராளமாகத் திரட்டி, அவற்றைப் பாண்டிய நாட்டுத் துறைமுகங்களில் இறக்குமதி செய்தனர். ஒரு குதிரை 500 சக்கி பொன்னுக்கு (100 வெள்ளி மார்க்குகளைவிடச் சற்று அதிகம்) விற்பனை ஆனதாகத் தெரிகிறது.
காயல்பட்டணம் துறைமுகம் வழியாக இரண்டாயிரம் குதிரைகள் வந்து இறங்கின என்று மார்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். பாண்டிய அரசர்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் குதிரை வளர்க்கவும் பேணவும் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய்யையும் சேர்த்துச் சமைத்த தானியத்தைத் தீனியாகவும் காய்ச்சிய பசும்பாலைக் குடிப்பதற்கும் கொடுத்த காரணத்தால் குதிரைகள் கொழுத்துப் பருத்து ஓட முடியாமல் போயின. இவற்றிற்குப் பயிற்சி தராமலும் அங்கவடி (stirrup) போன்ற குதிரைக் கருவிகளைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறி அமர்ந்து வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டியதாகவும் பதிவு செய்துள்ளார். மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிபோனதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாண்டியர்கள் மிகுந்த பொருட்செலவு செய்து மீண்டும் மீண்டும் குதிரைகளை இறக்குமதி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்கள் இங்கு இல்லை. குதிரைகளைப் பழக்குவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் பாண்டியநாட்டில் இல்லை. இதன் காரணமாகவே அரேபிய (இஸ்லாமிய) குதிரை வணிகர்களையே பயிற்சியாளர்களாக அரசர்கள் பணியமர்த்தினர். குதிரைகளுக்குச் சோனகன்விளை என்னுமிடத்தில் அரேபியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டன. இவர்கள் தமிழகப் பெண்களை மணந்துகொண்டு சோனகன்விளையில் வசிக்கத் தொடங்கினர். இந்த இடத்தில் வாழ்ந்த அரேபியர்கள் சோனகர் என்று அழைக்கப்பட்டனர். சோனகன்விளை என்ற ஊர் திருச்செந்தூருக்கு அருகே உள்ளது.
நாளடைவில் இந்த அரேபியர்கள் தமிழகக் குதிரைப் படைகளில் படைத்தலைவர்களாகப் பதவி பெற்று உயர்ந்தனர் இஸ்லாமிய வீரர்கள் குடியிருப்புகள் பாளையங்கள் என்று பெயரிடப்பட்டன. இஸ்லாமிய அரபு வணிகர்களின் குடியிருப்புகள் சோழ நாட்டிலும் மற்றும் பாண்டிய நாட்டிலும் தோன்றிப் பெருகின. இவர்கள் அஞ்சுவண்ணத்தார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.
அஞ்சுவண்ணத்தார் பண்டைய தமிழகத்திலும் இலங்கையிலும் செயல்பட்ட வணிகக் குழுவினர் ஆவர். இக்குழுவினர் பற்றிய முதல் பதிவு கி.பி. 849 ஆம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாகக் கருதப்படுகின்றது. ஹஞ்ஜமான என்னும் பாரசீகச் சொல்லின் தமிழாக்கமே அஞ்சுவண்ணம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஹம்யமான என்னும் வணிகக் குழுவினர் பற்றிச் சில கன்னட சாசனங்கள் சில குறிப்பிடுகின்றன.
குதிரைச் செட்டிகள் என்ற குறிப்பிட்ட வணிகர்கள் (ARE 25 1913) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். குதிரைச்செட்டி கோவிந்தன், குதிரைச்செட்டி நாவாயன் போன்ற பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. மலைமண்டலத்துக் குதிரைச் செட்டிகள் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோவிலில் காணப்படுகிறது.
ஐநூற்றுவர், அறுநூற்றுவர், எழுநூற்றுவர், நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமம் ஆகிய வணிகக்குழுவினர்களும் குதிரை வணிகத்தில் ஈடுபட்ட செய்தி கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரேபியக் குதிரை இனம்
அரேபியக் குதிரை இனம், உலகில் பழமையானதும் மிகவும் பிரபலமானதுமான குதிரை இனங்களில் ஒன்றாகும். அரேபிய இனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அனைத்து நவீன குதிரை இனங்களின் இனப்பெருக்கங்களிலும் பங்களித்துள்ளன.
இவற்றின் தனித்துவமான தோற்றக் குறிப்புகளாகப் பெரிய, பளபளப்பான மேனி, பரந்த நெற்றியில் அமைந்த அகன்ற கண்கள், சிறிய அளவிலான வளைந்த காதுகள், பெரும் ஆற்றலுடைய மூக்குகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எளிதாக இனம் கண்டுகொள்ளலாம்.
அரேபியக் குதிரைகளை வேறுபடுத்திக் காட்டும் ஐந்து முக்கியக் கூறுகள்:-
ஒப்பீட்டளவில் சிறிய தலை, நேரான தலை அல்லது கண்களுக்குக் கீழே சிறிது குழிவாக இருக்கும்; சிறிய முகவாய், ஓடும் போது நீளும் பெரிய மூக்கு, பெரிய, கரிய, வட்டவடிவக் கண்கள்; கண்ணுக்கும் முகவாய்க்கும் இடையே குறைந்த இடைவெளி, ஆழ்ந்த தாடை எலும்பு (Deep Jowls), நன்கு வடிவமைக்கப்பட்ட, உட்புறம் வளைந்த, மெலிவான சிறிய காதுகள்.
நீண்டு வளைந்த கழுத்து, உயர்ந்த நிலையிலிருந்து சீரான உயரதிற்குத் தாழும் முதுகின் உயர்ந்த பகுதி
குறுகிய இடுப்பு
ஒப்பீட்டளவில் கிடைமட்ட முதுகுப் பகுதி (Horizontal Croup)
உயர்ந்த இயற்கையான வால் பகுதி (natural high tail carriage)
அரேபிய இனக் குதிரைகள் பற்றிய மேலதிக விவரங்களை இங்கே காணலாம்
அரேபியக் குதிரை வரலாறு
உலகில் அரேபியக் குதிரைக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்த வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது. இதன் அதிகாரப்பூர்வ இனப் பதிவு (Official Breed Registry) உலகிலேயே பழமையானது. இக்குதிரையின் கருத்தைக் கவர்கின்ற அழகும் மனப்போக்கும் (Temperament) இதனைப் புகழ்பெற்ற இனப்பெருக்கக் குதிரையாக (Popular Breeding Horse) ஆக்கியுள்ளது.
அரேபிய தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த பெதூன் (Bedouin) என்ற அரேபிய நாடோடி இனத்தார் இனப்பெருக்கம் செய்து உருவாக்கிய குதிரை இனம் அரேபியப் போர்க்குதிரை இனம் ஆகும். பெரும் நுரையீரல் திறனும், நம்பமுடியாத அளவு தாங்கும் ஆற்றலும் (Endurance) கொண்ட அரேபிய போர்க்குதிரைகள் மலையேற்றத்திற்கும் எதிரிகளின் முகாமை விரைவாகத் தாக்கவும் பயன்படுத்தப்பட்டன.
செங்கிஸ்கான், நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் போன்ற வரலாற்று நாயகர்கள் அரேபியக் குதிரைகளையே பயன்படுத்தினர். இன்றும் பண்டைய அரேபியக் குதிரைகளின் மரபு வழித்தோன்றல்களையே காணமுடிகிறது. ஒரு வீரனின் சொத்தாக அவனிடமுள்ள குதிரைகளைக் கொண்டே கணக்கிடுவது வழக்கம். அரேபியக் குதிரைகள் தரம் மற்றும் வேகத்திற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன. களத்தில் வலிவும் சகிப்புத் தன்மையும் கொண்ட இக்குதிரைகள் எப்போதும் முன்னணியில் இருந்துள்ளன.
பலநூற்றாண்டுகளாகவே Bedouin இனத்தவர்கள் தங்கள் குதிரை இனத்தின் தூய்மையை மற்றவர் பொறாமைப் படுமளவிற்குப் பேணிக் காத்தனர். இவர்களுடைய குதிரை இனத்திற்கான தேர்ந்தெடுத்த இனப்பெருக்க நடைமுறைகளைக் கையாண்டனர். இதனால் உலகெங்கும் அரேபியக் குதிரைகள் பாராட்டுக்குரிய உடமைகளாகக் கருதப்பட்டன. இன்று நாம் அறியும் பந்தயக் குதிரைகளாகவும் இவை பரிணாமித்தன.
வடக்கு சிரியா, தெற்கு துருக்கி, கிழக்கில் அமைந்திருந்த பியண்ட்மாண்ட் பகுதிகள் (Piedmont Regions) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காட்டுக் குதிரைகளே அரேபியக் குதிரை இனத்தின் மூதாதையர் (Ancestors) ஆவர். வளமான இளம்பிறையின் (Fertile Crescent) வடக்கு விளிம்பில் யூஃப்ரடீஸ் நதியை ஒட்டி அமைந்திருந்த ஈராக் (Iraq) பகுதிகள், சினாயின் (Sinai) மேற்குப்பகுதி முழுவதும், எகிப்தியக் கரையோரப் பகுதிகளில் போதுமான மழைப் பொழிவும், இதமான வானிலையும் நேர்த்தியான குதிரை வளர்க்கப் போதுமான சூழலை ஏற்படுத்தின.
முதன்முறையாக எப்போது குதிரை பழக்கப்படுத்தப்பட்டது? அவை வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டதா? அல்லது சவாரி செய்யப்பயன்படுத்தப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான பதில் வரலாற்றில் இல்லை. உலகின் பல பகுதிகளில் குதிரைகள் வேலை மற்றும் சவாரி ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கீழ்த்திசை நாடுகளின் மக்கள், கி.மு. 1500 ஆம் ஆண்டளவில், வலிவான குதிரைகளைப் பழக்குவதற்குக் கற்றிருந்தனர். அரேபியக் குதிரைகளாக அறியப்படும் குதிரைகளின் முன்னோடிகளாக இந்தக் கீழ்த்திசை நாடுகளின் குதிரைகள் விளங்கின.
பண்டைத் தமிழகத்தில் குதிரையின் பயன்பாடு
பண்டைக்காலத்தில் குதிரையேற்றம் என்பது மனிதனுக்குத் தேவையான திறனாகத் திகழ்ந்தது. குதிரையேற்றம் பற்றி இயற்றப்பட்டதே பரிநூல் என்னும் நூலாகும். பல அரசாங்கங்கள் குதிரைப்படையினை ஓர் இன்றியமையாத படைப்பிரிவாகத் தோற்றுவித்துப் பராமரித்தனர். போர்க்களங்களில் குதிரைப்படை வேகமாக முன்னேறும் திறன் பெற்றிருந்தது. அரசர்களும் அரசப் பிரதிநிதிகளும், தூதுவர்களும் விரைவாகச் செல்லத்தக்க நீண்ட தூரப் பயணங்களுக்கும் குதிரையையே பயன்படுத்தினர். குதிரைகளுக்குக் கவச உடையும் அணிவிப்பது உண்டு. குதிரையில் அமர்ந்தவாறே வில், வேல், வாள் போன்ற ஆயுதங்களைதாங்கி எதிரிகளுடன் போரிட்டனர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குதிரைகளைத் தேர்களிலோ (Chariots) அல்லது வண்டியிலோ (Coach Wagons) பூட்டினர்.
புராண இதிகாசங்களில் குதிரை
புராணக் கதைகளில் இடம்பெற்றுப் புகழ் பெற்ற குதிரைகள் உண்டு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது உச்சைஸ்ரவஸ் என்னும் ஏழு தலைக் குதிரை பாற்கடலில் இருந்து தோன்றியது. ஹயகிரீவர் சிற்பம் குதிரை முகத்துடன் காட்டப்படுவது மரபு. கல்கி அவதாரத்தில் விஷ்ணு வெள்ளைக் குதிரையில் அமர்ந்து வருவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய இரத்தத்தில் அமர்ந்து வருவது போலக் காட்டுவதும் ஒரு சிற்பமரபாகும். சூரியனின் மகன்களாகக் கூறப்படும் அஸ்வினி குமாரர்கள் என்னும் ரிக் வேதகாலக் கடவுள்கள் மருத்துவத்தின் கடவுள்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
குதிரை குறித்த சான்றுகள்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
மத்திய பிரதேச மாநிலம், ரெய்சன் மாவட்டம் போபால் நகருக்கு அருகே அமைந்துள்ள பிம்பெட்கா குகைத்தளத்தில் (Bhimbetka rock shelters) காணப்படும் இரண்டு ஓவியங்களில் வீரர்கள் குதிரை மேல் அமர்ந்து காணப்படுகிறார்கள். இவை வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்காலம் மற்றும் இடைக் கற்காலத்தைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. இந்தக் குதிரை ஓவியங்கள் 10000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் 4000 ஆண்டுகள் பழமையான ஒரு குகையில் காணப்படும் ஓவியத்தில் வீரர்கள் குதிரையில் அமர்ந்து செல்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கரூர் மாவட்ட எல்லையருகே உள்ள கரடிப்பட்டி என்னும் ஊரில் கண்டறியப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான நடுகல் அயல் தேசத்துப் படையைச் சேர்ந்த குதிரையுடன் போரிட்டு மாண்ட வீரனின் நினைவாக எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் அருகே கண்டறியப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்து நடுகல் ஒன்றில் நன்கு உடையணிந்து, ஓர் ஈட்டி ஏந்திய வீரன் ஒருவன் பாய்ந்து செல்லும் குதிரையில் சவாரி செய்வதுபோலக் காட்டப்பட்டுள்ளது.
அஸ்வமேத யாகம்
வேத காலத்தில் அரசர்கள் அஸ்வமேதம் என்ற யாகத்தை இயற்றினார்கள். இந்த அஸ்வமேத யாகத்தை இயற்றும் அரசர் தன்னைச் சக்ரவர்த்தியாக அறிவித்துக்கொள்வதற்காக இந்த யாகத்தை இயற்றினார். தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சிற்றரசர்களுக்கும் தானே பேரரசன் என்று பறைசாற்றும் விதமாக ஒரு குதிரையை நாடுகளின் பகுதி முழுக்க வலம் வரச்செய்வர். இந்தக் குதிரையை ஒரு சிற்றரசன் பிடித்துக் கட்டிவிட்டால் அவன் யாகம் நடத்துவோனை பேரரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள். யாகம் செய்வோன் சிற்றரசனைப் போரில் வென்று தன் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றிகரமாக நாட்டைச் சுற்றிவரும் குதிரை அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும்.
சோதிடம் மற்றும் மருத்துவ நம்பிக்கைகள்
இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.பெற்றுள்ளது. குதிரை லாடம் கண்திருஷ்டியை நீக்கும் என்பது நம்பிக்கை. அஸ்வகந்தா (Withania somnifera) மிகவும் அரிய ஆயுர்வேத மூலிகையாகும். இம்மூலிகை உலக அளவில் பெரும் புகழ்பெற்று வருகிறது. குதிரையின் ஆற்றலை இந்த மூலிகை தருவதால் இதற்கு அஸ்வகந்தா என்று பெயர். இஃது உடல் முழுக்க சக்தியை அளிக்க வல்லது. ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் வல்லமை பெற்றது.
வரலாற்றுப் புகழ்பெற்ற குதிரைகள்
கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி என்பவன் பயன்படுத்திய குதிரைக்குக் காரி என்று பெயர். மாவீரன் அலெக்சாண்டர் பயன்படுத்திய குதிரைக்குப் பூசிஃபலாஸ் (Bucephalus) என்று பெயர். மகாராணா பிரதாப்சிங்கின் போர்க்குதிரைக்குச் சேத்தக் (Chetak) என்று பெயர். ஜான்சி ராணி லட்சுமி பாய் சாரங்கி (Sarangi), பவன் (Pavan) மற்றும் பாதல் (Badal) ஆகிய பெயர்களுடன் கூடிய குதிரைகளைப் பயன்படுத்தினார். தேசிங்கு ராஜனின் குதிரைக்கு நீலவேணி என்று பெயர். பீட்டர் அரசன் (Peter the Great), ஜான்சி ராணி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, நெல்சன். ஜார்ஜ் வாஷிங்டன், மன்றோ பிரபு, போன்ற பலர் குதிரைகளில் அமர்ந்தவாறு காட்சி தரும் குதிரைச் சிலைகள் (Equestrian Statues) புகழ்பெற்றவை.
குதிரைச் சந்தை
மைசூர் மன்னர் ஹைதர் அலி தனது படைக்குத் தேவையான குதிரைகளைத் தேர்வு செய்வதற்காகவே குதிரைச் சந்தையை உருவாக்கினார். இன்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் இந்தக் குதிரைச் சந்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெண்மை நிறம் கொண்ட குதிரைக்கு நொக்ரா (Nokra) என்றும் செவலையில் ஆங்காங்கே வெள்ளை நிறம் கொண்ட குதிரைக்குப் பஞ்சகல்யாணி என்றும் பெயர். குஜராத் மாநிலத்தின் மார்வார் மற்றும் கத்தியவார் பகுதிகளைச் சேர்ந்த குதிரைகளுக்கு இந்தக் குதிரைச் சந்தைகளில் அதிகத் தேவை இருப்பதுண்டு.
குதிரைகளை வாங்குவோர் சுழி பார்த்தே வாங்குகிறார்கள். குதிரையின் முகத்தில் மூன்றும், கழுத்து மற்றும் பிடரியில் இரண்டும்,நாலு கால்களில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஒன்பது சுழிகள் உள்ள குதிரையினைச் சுத்தமான சுழிக் குதிரை என்று கருதுகிறார்கள். கழுத்துப் பகுதிகளில் இருக்கும் சுழிகளை இராஜா சுழி, மந்திரி சுழி என்று அழைக்கிறார்கள். இந்தச் சுழிகள் கொண்ட குதிரைகள் யோகத்தைத் தரவல்லது என்பது நம்பிக்கை. முழங்காலுக்குக் கீழேயும் வயிற்றின் ஓரப்பகுதிகளிலும் இடம்பெறும் சுழிகள் சுத்த சுழிகள் அல்ல என்பதும் குதிரை வணிகத்தில் நிலவும் நம்பிக்கையாகும்.
குதிரை: சொல்வளம்
சங்க இலக்கியம்
குதிரைக்கு உரிய பெயர்களை உரிச்சொல் நிகண்டு ஒரு பாடலில் பட்டியலிட்டுள்ளது.
குரகதம் வாசி குதிரை இவுளி
துரகம் புரவி துரங்கம் – பரிஅரி
கோடகம் பாய்மா சயிந்தவம் கந்தருவம்
ஆடல் வயமா வயம்
(உரிச்சொல் நிகண்டு)
இவுளி, கலிமா, கலிமான், குதிரை, கொய்யுளை, பரி, புரவி, மா என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இது தவிர அச்சுவம், அத்திரி, அயம், உன்னி, கண்ணுகம், கந்துகம், குந்தம், கோடகம், கோடரம், சடிலம், துரகதம், தூசி, தேசி, தேனு, நாணுகம், பத்திரி, மண்டிலம் போன்ற பெயர்களும் குதிரைக்கு உண்டு.
குதிரையின் குட்டிக்கு மறி என்று பெயர். குதிரையின் முடி குசை, கூந்தல், கேசம், சுவல் போன்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது. சங்கப் பாடல்களில் குதிரையின் குளம்பிற்குக் குருச்சை, குரம் என்றும், வாய் நுரைக்கு ‘விலாழி’ என்றும், கடிவாளத்திற்குக் கலினம், கவியம், கறுள், மூட்டு என்றும், குதிரைக் கயிற்றிற்குக் குசை, வடிகயிறு, வற்கம், வாய்வட்டம் என்றும் பொருள். குதிரைப்பாகன் பண்ணுவர், பரிமாவடிப் போர், மாவலர், வதுவர், வாதுவர் போன்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறான்.
குதிரைகளைப் பயிற்சி கொடுத்துப் பழக்கி, வசப்படுத்திச் சவாரி செய்யவும், தேரில் பூட்டிப் பயணம் செய்தவர்கள் இந்தியர்கள் ஆவர். குறிப்பாகத் பண்டைக்காலத் தமிழர்கள். இக்கலையில் சிறந்து விளங்கினர். ஐந்து வகையான குதிரையின் நடைகள்: 1. கவுரிதகம் (தோரிதகம்) என்பது மெல்லிய நடை ஆகும். இதற்கு நேராக ஆங்கிலத்தில் Walk என்ற சொல்லை ஒப்பிடலாம், 2. ஆக்கிரந்திதம் (ஆஸ்கந்திகம்) என்றால் விரைவு நடை அல்லது பெருநடை என்று பொருள், இதற்கு நேராக ஆங்கிலத்தில் Trot என்ற சொல்லை ஒப்பிடலாம், 3. வல்கிதம் என்பது இரு காலையும் தூக்கியவாறு ஆடி வரும் நடையாகும், 4. இரேசிதம் என்பது சுற்றியோடும் நடையாகும், 5. புலிதம் என்றால் நாலுகால் பாய்ச்சல் எனும் முழுவோட்டம் ஆகும். இதற்கு நேராக ஆங்கிலத்தில் Gallopஎன்ற சொல்லை ஒப்பிடலாம், கதி, கவனம், தாவுதல் குதிரையின் நடையாகும். (Source: A manual dictionary of the Tamil language. American Mission Press, 1842 – 911 pages). குதிரையின் நடைகள் ஐந்து: 1. மல்லகதி = மல்யுத்த வீரர்களின் குதிகால் வேகம்; 2. மயூரகதி = மயிலின் சீரான வேகம்; 3. வானரகதி = குரங்கின் வேகம்; 4A. விடபகதி = காளையைப் போன்ற துள்ளுநடை (trotting); வேறு சிலர் குறிப்பிடுவது 4B. சசகதி = முயலின் வேகம்; 5. வியாக்கிர கதி = புலியின் வரம்புக்குட்பட்ட துரித வேகம் (Source: Miron Winslow – A Comprehensive Tamil and English Dictionary துரகம்)
வடமொழி இலக்கியம்
சமஸ்கிருத மொழியில் குதிரை அஸ்வம் (Sanskrit: अस्वम्) என்று பெயர். மகாபாரதம் உத்யோக பர்வத்தில் குதிரை வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சைப்ய, சுக்ரீவ, மேகபுஷ்ப, பலாஹக
வாஜிபிஹி சைப்ய சுக்ரீவ மேக புஷ்ப பலாஹகைஹி
ஸ்நாதஹை சம்பாதயாமாசுஹு சம்பன்னைஹை சர்வசம்பதா
(மகாபாரதம் உத்யோக பர்வம் 83-19)
வசிஷ்ட தனுர்வேத சம்ஹிதா என்ற நூலில் குதிரையின் ஓட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குதிரையை வட்டமாக ஓடச் செய்வதை ‘மண்டல’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. சதுர வடிவில் ஓடச் செய்வதற்குச் ‘சதுரஸ்ர’ என்று குறிப்பிடுகிறது. பசுவானது விட்டு விட்டு மூத்திரம் போவதைப்போல நடக்க வைப்பதை ‘கோமூத்ர’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. பிறை வடிவில் ஓடச் செய்வதை ‘அர்த்த சந்திர’ என்று பெயரால் குறிப்பிடுகிறது. பாம்பு வடிவில் ஓடச் செய்வதை ‘நாகபாஸ’ என்ற பெயரால் குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மரபியல் பகுதியில் விலங்குகளைப் பற்றிக் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் இரண்டு வகைப்படும்: முதுகெலும்பற்றவை, முதுகெலும்புள்ளவை. விலங்குகளின் இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள் போன்றவை மிக அழகாக விளக்கப்பட்டுள்ளன.
‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை
பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’
(தொல்காப்பியம் சூத்திரம் 1552 – 1553)
ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது குதிரைப் பெட்டை என்றால் அது பெண் குதிரை
ஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே
(தொல்காப்பியம் சூத்திரம் 1511)
ஆடு, குதிரை, புள்ளிமான் ஆகியவற்றின் இளமைப் பெயர் மறி என்றும் அறியப்படும்.
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானோ டைந்தும் கன்றெனற் குரிய
(தொல்காப்பியம் சூத்திரம் 1514)
யானை, குதிரை, கழுதை, மான் ஆகியவற்றின் இளமைப் பெயர் கன்று என்று அறியப்படும். எருமையின் இளமைப் பெயரையும் கன்று என்று குறிப்பர்.
தானை யானை குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்
(தொல்காப்பியம் சூத்திரம் 1018; 1-2)
இவ்வாறு தொல்காப்பியர் சுட்டும் குதிரையின் ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயர்கள் பற்றிய செய்தியோ குறிப்போ சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை.
சங்க இலக்கியப் பாடல்கள்
இவுளி
இவுளி என்ற சொல் குதிரையைக் குறிக்கும் சொல்லாகும்.
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
(புறநாநூறு. 4 பரணர், பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி)
உன்னுடைய தங்கத் தேரில் நுரை பொங்க குதிரைகளால் வேகமாக இழுத்துச் செல்வது செங்கதிரோன் பெருங்கடலிலிருந்து உதித்து வானத்தின் உச்சிக்குச் செல்வது போல அற்புதமாக உள்ளது.
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
(புறநானூறு 197, பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்)
நகரும் காற்றைப் போன்று பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் உச்சியில் மன்னனின் கொடிபறக்கிறது.
கலிமா
கலிமா என்றால் குதிரை என்று பொருள். கலிமான் என்ற சொல்லும் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை
(புறநானூறு 15, பாடியவர்: நெட்டிமையார், அரசன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி)
உன் தேரை அவர்கள் நிலத்தின் வழியே செலுத்தினீர்கள். வளைந்த குளம்புகளுடைய உங்கள் குதிரைகள் மென்மையான வெண் குஞ்சத்துடன் பாய்ந்து ஓடின.
கடுஞ்சினத்த கொல் களிறும் கதழ் பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர் தேரும் நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடன்
(புறநானூறு 55, 7 – 8, பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், அரசன்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்)
கடும் சினமும் கொலைவெறியுமுடைய யானைகள், துரிதமாகச் செல்லும் பெருமைக்குரிய யானைகள், கொடியுடைய உயர்ந்த தேர்கள், போரை விரும்பிய, நெஞ்சில் வலிவுடைய காலாட்படை வீரர்கள், கடும் நீதியுடைமை எல்லாம் பெரும் வெற்றிக்குக் காரணம்.
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப
(நெடுநல்வாடை 179 – 180, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்)
சேனத்துடன் பாய்ந்தோடும் குதிரைகள் முதுகில் சகதியுடன் தெருவில் நின்றது. தன் மீது விழும் நீர்த்துளிகளைத் தன் அசைவினால் தெரிக்கவிட்டது.
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை.
(இனியவை நாற்பது பாடல் 8)
வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலை அணிந்த அரசர்களுக்குப் போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச்சொற்கள் கேட்பது இனிது.
கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லாதார் வாய் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல்
(இன்னா நாற்பது பாடல் 28)
குதிரையேற்றம் தெரியாதவன் குதிரையில் செல்லுதல் துன்பமாம். கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவன் பேசும் நயமான பேச்சுத் துன்பமாம். அவ்வாறே கல்வியறிவு இல்லாதவன் கற்ற அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.
கால்தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக்
கறுவி வெகுண்டு உரைப்பன் பள்ளி, – இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.
(திரிகடுகம் பாடல் 46)
நடக்க இயலாத குதிரையும், கட்டுத்தறி முறித்து வீரனிருப்பதற்கேற்ற மேலிடம் தூய்மை இல்லாத பயன்படாத யானையும், மாணவர்கள் மேல் சீற்றம் கொண்டு உரைக்கும் கல்விச்சாலையும் அறிவுடையோர் சேரமாட்டார்
குதிரை
திரை என்றால் கடலலை ஆகும். கடலலை போலக் குதித்துச் செல்லுவதால் குதிரை என்று பெயர் பெற்றது.
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும்
முனை நல் ஊரன் புனை நெடுந்தேரே.
(அகநானூறு 14, 18 – 21 ஒக்கூர் மாசாத்தனார்)
சிறந்த நகரத்தைச் சேர்ந்த மனிதர் அலங்கரிக்கப்பட்ட உயரமான தேரில் பயணம் செய்தார். தார்குச்சியிட்டு முடுக்கியதால் தடைகளைத் தவிர்த்து வேகமாக ஓடும் குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரின் பல ஆரங்கள் கொண்ட சக்கரங்கள் கூழாங்ககல்லில் மோதும்போது ஏற்படுத்தும் ஒலி பருவ மழை பொழியும் போது கேட்கும் கர்ஜனையைப் போல உள்ளது.
பந்து புடைப்பு அன்ன பாணிப் பல்லடிச்
சில் பரிக் குதிரை பல் வேல் எழினி 10
(அகநானூறு 105, 9-10, தாயங்கண்ணனார்)
அழிக்கவொன்னா வலிவுடைய வேல்படைதாங்கிய எழினியின் குதிரைகள் சீரான தளத்திற்கேற்ப துள்ளி ஓடியது பந்துகள் துள்ளவதைப் போல உள்ளது.
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம் பட்டெனக்
(அகநானூறு 148, 7 – 8, பரணர்)
நாலுகால் பாய்ச்சலாகப் பாயும் குதிரைகளை உடைய ஆய் எயினன் உயரமான தேரை உடைய மிஞிலியொடு போரிட்டபோது வீழ்ந்து மடிந்தது போல
கொய்யுளை
கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும்
(பரிபாடல் 17 முருகன் வரி 45 புலவர் நல்லாசிரியர் இசையமைப்பு நல்லச்சுதனார் இசை திரம்)
கத்தரித்த பிடறி மயிருடைய குதிரைகள் பூட்டிய கொடிபறக்கும் உயர்ந்த தேரை உடைய கூடலின் பாண்டியன்
ஐயீராயிரங் கொய்யுளைப் புரவியும்
(சிலப்பதிகாரம் கால்கோள் காதை 134)
பத்தாயிரம் கொய்யுளைப் புரவிகள்
பரி
பரி என்றால் குதிரை என்று அகராதிகள் சுட்டுகின்றன. விரைவு நடை, வேகம் என்று மதுரைத் தமிழ் பேரகராதி சுட்டுகிறது. சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பரிபாடல் என்னும் நூலின் பொருள் (Theme): பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல்
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி
புனல் பாய்ந்தன்ன வாமான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரிப்
பால் கண்டன்ன ஊதை வெண்மணல்
கால் கண்டன்ன வழிபடப் போகி
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
(அகநானூறு 400, 14 – 21, உலோச்சனார்)
பதிவுப் புத்தகப்படி நல்ல இனத்தைச் சேர்ந்த அவரது குதிரைகள் கத்தரிக்கப்பட்ட மயிரை உடைய பிடரியையும், நெற்றியில் நீலக்கல் அணிகலன்களையும், நெய் கலந்த பெரும் அரிசிக் கவளத்தைக் காலடியில் அழுத்தி ஒதுக்கிய குதிரைகள் நான்கும் நீண்ட கதிரையுடைய சிவப்புத் திணையைப்போல உயர்த்திய கழுத்தில் நுகத்தடி பூட்டப்பட்டுள்ளது. இக்குதிரையின் கழுத்தைப் பல வித வடிவில் சலங்கைகள் அலங்கரிக்கின்றன. சாதுர்யம் பெற்ற தேர்ப்பாகனின் சவுக்கால் அடிக்கக் குதிரைகள் பாய்ந்தோடின. தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் பாய்ந்தோடியது, நீர் தாழ்ந்த கரையை நோக்கிப் பாய்வது போல இருந்தது. இவற்றின் வலுவான கால்கள் வெண்மணலை நோக்கி எய்யப்பட்ட அம்பைப்போல பாய்ந்த போது வீசிய குளிர்ந்த காற்று பால் போன்ற மணலைக் குலைத்தது. இது கால்வாயில் நீர் பாய்ந்ததைப் போல இருந்தது. களிமண் கலந்த மணற்பரப்பில் தடயங்களை தோற்றுவித்தது.
மா
மா என்ற சொல் விலங்கு என்ற பொருளில் விலங்கினப் பொதுப் பெயராகக் கையாளப்படுகிறது. மா என்ற சொல் குதிரை, சிங்கம், மான் ஆகிய விலங்குகளைச் சுட்டும் பெயராகவும் உள்ளது. மா என்ற சொல் ‘ன்’ விகுதி பெற்று மான் என்ற சொல் தோன்றியது. மான் என்றால் விலங்கின் பொதுப்பெயர், குதிரை, சிங்கம், மகரமீன் என்று தமிழ் பேரகராதி பொருள் சுட்டுகிறது.
நெடு நல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையும் யாம் என்று
(புறநானூறு 72, புலவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்)
இவன் மிகவும் இளையவன். அகன்ற பாதங்களையும், கால்களையுமுடைய நன்கு உயர்ந்த யானைகள் ஓசை தரும் மணிகளை அணிந்துள்ளன, தேர்கள், குதிரைகள் மற்றும் திறன்மிக்க வீரர்கள்.
தத்தி
புக அரும் பொங்கு உளைப் புள் இயல் மாவும்
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும் 15
(பரிபாடல் 9 முருகன் புலவர் குன்றம்பூதனார் இசை மருத்துவன் நல்லச்சுதனார். பண் பாலை யாழ்)
பொங்கி வழியும் முடியுடன் பாய்ந்தோடும் குதிரைகள், விரைந்து பறந்து செல்லும் பறவைகள், இனிய பெண் யானைகள்
மாவும் களிறும் மணி அணி வேசரி
(பரிபாடல் 22 வையை புலவர்: தெரியவில்லை, இசை: தெரியவில்லை; பண்: தெரியவில்லை )
குதிரையும் யானையும், கோவேறு கழுதையும் அணிந்த மணிகள்
துய்ய செம்பொற்கோயில்
சுடர்எறிப்பக் கண்முகிழ்த்து
வெய்ய வன்தேர் மாஇடரும்
வேங்கடமே
(திருவேங்கடமாலை 9)
புரவி
பொருள்: 1. குதிரை, 2. புரவி எடுப்பு என்ற பெயரில் விழா எடுக்கிறார்கள்.
குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி
(அகநானுறு 4, 9 குறுங்குடி மருதனார்)
குதிரைகளின் கத்தரித்த வளைந்த பிடரி மயிர் கழுத்தின் பின்புறம் அழகுற அசைகிறது.
கான் அமர் செல்வி அருளலின் வெண்கால்
பல் படைப் புரவி எய்திய தொல்லிசை
(அகநானூறு 345, 4 – 5, குடவாயில் கீரத்தனார்)
காட்டில் அமர்ந்துள்ள தெய்வமாகிய கொற்றவை அருளால் கொடையாகப் பெற்ற வெண்கால் குதிரை
கடும் பரி நெடுந்தேர்க் கால் வல் புரவி
(ஐங்குறுநூறு 422,1, பேயனார்)
உயர்ந்த தேரினில் பூட்டிய வலிய கால்களையுடைய குதிரைகள் காட்டின் வழியே பாய்ந்து சென்றன.
கடு மா பூண்ட நெடுந்தேர் கடைஇ,
நற்றிணை 149;7 உலோச்சனார்)
பளபளப்பான பிடரி மயிர் உடைய குதிரைகள் பூட்டிய தேரில் தலைவன் நள்ளிரவில் வந்தபோது
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்
(மதுரைக்காஞ்சி 385 – 387, மாங்குடி மருதனார் அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்)
நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட வண்ணப் பிடரி மயிர் கொண்ட குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வது செங்கால் ஆண் வாத்துப் பறவை அழகான பரந்த வானில் பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனை நோக்கிப் பறப்பதைப் போல உள்ளது. சவுக்குடைய தேர்ப்பகன் தன் குதிரைகளுக்குச் சுற்றி ஓடுதல் மற்றும் நெடுக ஓடுதல் போன்ற பலவித ஓட்டங்களைக் கற்பித்துள்ளான்.
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
(பரிபாடல் 9 முருகன் ஆசிரிய நல்லாந்துவார், இசையமைப்பு: மருத்துவன் நல்லச்சுதனார், பண்: பாலை யாழ்)
அவர்கள் வெற்றி பெற்ற விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய தேரில் வருகிறார்கள்
கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்
புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை
(பரிபாடல் 11, 51-52 வையை ஆசிரியன் நல்லந்துவனார் இசை நாகனார் பண் பாலை யாழ்)
கொடியால் அலங்கரிக்கப்பட்ட வலிய தேரில் பூட்டிய குதிரைகளைச் செலுத்தும் கோலேந்திய தேர்ப்பாகன்
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;
(பரிபாடல் 19, முருகன், 32 நப்பண்ணனார் இசை மருத்துவன் நல்லச்சுதனார் பண் பாலை காந்தாரம் )
கனத்த மாலை அணிந்த குதிரைகள் பாதையை நீங்கி ஒரு பக்கம் நகர்கின்றன.
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
(பரிபாடல் 20 வையை, 16, ஆசிரியன் நல்லந்துவனார் இசை மருத்துவன் நல்லச்சுதனார் பண் பாலை காந்தாரம் )
படகு போன்ற வண்டியில் குதிரைகளைப் பூட்டினார்கள்
… …. … …. ,,, கதழ் பரிப் புரவிக்
கடும் பரி நெடுந்தேர் மீ மிசை நுடங்கு கொடி
(பதிற்றுப்பத்து. 80, 13 அரிசில்கிழார், சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியது).
காற்றைப்போல விரைந்து ஓடும் குதிரை பூட்டிய உயர்ந்த தேரில் பறக்கும் கொடி
…….. ……… ………… பாற்கேழ்
வால் உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
(பெரும்பாணாற்றுப்படை 320, கடியலூர் உருத்திரங் கண்ணனார் அரசன் தொண்டைமான் இளந்திரையன்)
மரக்கலங்கள் வடக்கிலிருந்து பால் போன்ற வெண்மை நிற பிடறி மயிர் கற்றையுடைய குதிரைகளை கடற்கரை பட்டணத்திற்குக் கொண்டு வந்தன.
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி
(பொருநாற்றுப்படை.165, முடத்தாமக் கண்ணியார், சோழன் கரிகால் பெருவளத்தான்)
பால் போன்ற வெண்மையுடைய நான்கு குதிரைகளை உடன் பூட்டி
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி
(மதுரைக்காஞ்சி 689, மாங்குடி மருதனார் அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்)
பகைவர் நாடுகளில் கைப்பற்றிய குதித்து ஓடும் குதிரைகள்
குறிப்புநூற்பட்டி
Australia

- தொகுதி (Phyllum): முதுகுநாணிகள் (Chordata)
- வகுப்பு (Class): பாலூட்டிகள் (Mammalia)
- துணைவகுப்பு: தெரியா (Theria)
- அகப்பிரிவு (Infraclass): யூதெரியா (Eutheria)
- வரிசை (Order): ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட வரிசை (Perissodactyla)
- குடும்பம் (Family): குதிரைக் குடும்பம் (Equidae)
- பேரினம் (Genus): குதிரையினம் (Equus)
- இனம் (Species): ஈக்வஸ். ஃபெரஸ் (E. ferus)
- சிற்றினம் (Subspecies): ஈக்வஸ். ஃபெரஸ் கேபல்லஸ் (E. f. caballus)

- அரேபியக் குதிரை விக்கிபீடியா
- அரேபிய தமிழக வணிக கலாச்சார தொடர்புகள் – ஒரு வரலாற்றுப் பார்வை https://bharathiassociation.blogspot.com/2008_11_01_archive.html
- குதிரை வளர்ப்பு
- குதிரை விக்கிபீடியா
- குதிரை நடை: துரக வல்கன– சஞ்சல – குண்டல……..(Post No.3567)
- சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை – இலக்கிய இன்பம்
- சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!
- aசங்க இலக்கியத்தில் விலங்கியல் – 4 – குதிரை. https://thiruththam.blogspot.com/2018/01/4.html
- சங்ககாலம் மற்றும் தற்கால நெய்தல் படைப்புகள் ஒரு ஒப்பியல் பார்வை http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/199070/11/11_chapter5.pdf
- தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான் பா. ஜெயக்குமார் நேர்காணல்
- தமிழ் முஸ்லிம்கள் விக்கிபீடியா
- பொருநைக் கரையில் அரேபியக் குதிரை https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2018/10/06124847/Thamirabarani-Shore-Arab-horse.vpf
- A manual dictionary of the Tamil language. American Mission Press, 1842 – 911 pages
- AHYA Skeleton and Parts Flyer (Arabian Horse Association https://www.arabianhorses.org/.content/youth-docs/AHYA_Skeleton_Parts.pdf
- Discover the magic of the Arabian horse…
- Horse Wikipedia
- How ancient Tamil ports helped trade in gems, Arab horses Times of India June 20, 2017
- Indo-Arab Relations Throughout the ages
- ‘Rare’ hero stone discovered R. Vimal Kumar The Hindu June 13, 2016
- What is the taxonomy of a Arabian horse? http://www.answers.com/Q/What_is_the_taxonomy_of_a_Arabian_horse
Australia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக