வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதிகள் முடிவை மாற்றிய வைகோ:வாதம்; வழக்கறிஞர்கள் வாழ்த்து

THE HINDU TAMIL :ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த
நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர்.
இது தொடர்பாக மதிமுக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோரிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் விசாரணைக்கு வந்தது. முற்பகல் 12 மணி அளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கை ஏற்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இன்றே ஆணை பிறப்பிக்கப் போகிறோம் என்றும், ஒருமுறைக்கு நான்கு முறை நீதிபதி நாரிமன் அழுத்தமாகச் சொன்னார்.
வைகோ, தன் தரப்பு வாதத்தை முன்வைக்க எழுந்தபோது, ‘உணவு இடைவேளைக்குப் பிறகு உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன்’ என்று நீதிபதி நாரிமன் கூறினார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை.  அதன்பின், வைகோ வாதத்தை முன்வைத்தார்.
‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கப் போகிறோம்’ என இன்று காலையில் நீங்கள் அறிவித்த அறிவிப்பு, பேரிடியாகத் தலையில் விழுந்தது. தாங்க முடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன். இந்த ஸ்டெர்லைட் ஆலை, மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் திறக்கப்பட்டபோது, விவசாயிகள் உடைத்து நொறுக்கினார்கள். மராட்டிய அரசு, லைசென்ஸை கேன்சல் செய்தது.
நீதிபதி: அதை ஏன் இப்போது குறிப்பிடுகின்றீர்கள்?
வைகோ: அப்போது ஸ்டெர்லைட் நிறுவனம் ஏன் மும்பை உயர் நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ ஏன் மேல் முறையீடு செய்யவில்லை? மற்ற மாநிலங்கள் உள்ளே நுழைய விடாததால், துத்துக்குடிக்கு வந்து எங்கள் தலையில் எமனாக அமர்ந்தது. 22 ஆண்டுகளாக அதனை எதிர்த்துப் போராடி வருகின்றேன். என்னுடைய ரிட் மனு மீதுதான், சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை மூட உத்தரவு பிறப்பித்தது. அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியது. அதனால், ஆலை இயங்கியது.
நீதிபதி: பழைய சம்பவங்களை இப்போது ஏன் சொல்கின்றீர்கள்?
வைகோ: அரசியலுக்காக நான் பேசவில்லை. பத்து லட்சம் மக்களின் குரலாகப் பேசுகின்றேன். மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் சார்பாகப் பேசுகின்றேன்.
2013 மார்ச் 23 காலையில், ஸ்டெர்லைட் நச்சுப் புகையால் மக்கள் மயங்கி விழுந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து, பசுமைத் தீர்ப்பாயத்தை ஸ்டெர்லைட் ஆலை நாடியது.
நீதிபதி: 2013க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
வைகோ: பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்ஆலைக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் எண் 9542, எண் 9543 உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த  மேல் முறையீட்டையும், தற்போது இந்த நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குடன் சேர்த்து நடத்த வேண்டும்.
நீதிபதி: அதைக் கவனத்தில் கொள்வோம்.
வைகோ: 2018 மே 22 ஆம் தேதி, ஒரு லட்சம் மக்கள் தாங்களாகவே அணி திரண்டு, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப் போனார்கள். அந்த நாள் தமிழ்நாட்டின் கருப்பு நாள் ஆனது. தமிழ்நாடு அரசின் காவல்துறை, ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையாக மாறி, 13 பேரைச் சுட்டுக்கொன்றது. பள்ளி செல்லும் மாணவி உட்பட, வயது முதிர்ந்த தாய்மார்கள் வரை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மக்கள் உள்ளம் எரிமலையாக வெடித்ததால், தமிழ்நாடு அரசு, கொள்கை முடிவு எடுக்காமல், கண்துடைப்பு நாடகமாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியத்தின் மூலம் ஆலையை மூடியது.
முயலோடும் சேர்ந்து ஓடிக்கொண்டே, வேட்டை நாயுடன் சேர்ந்து விரட்டும் வேலைதான் இது.
‘நீங்கள் எந்த நீதிமன்றத்திற்கும் செல்லுங்கள். ஆலையைக் கண்டிப்பாகத் திறந்தே தீருவோம்’ என்று வேதாந்தா  குழுமத் தலைவர் சொல்கின்றார். எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார்?
நீதிபதி: நீங்கள் பலத்த குரலில் பேசுகின்றீர்கள். சத்தத்தைத் குறையுங்கள்.
வைகோ: நீதிபதி அவர்களே, வருந்துகிறேன். தாங்க முடியாத வேதனையில் பேசினேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
நீதிபதி: உங்கள் கோரிக்கைதான் என்ன?
வைகோ: ஆலையைத் திறக்குமாறு இன்று தீர்ப்பு அளிக்க வேண்டாம் எனக் கோருகின்றேன். செவ்வாய்க்கிழமை அமர்வில், எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாகக் கேளுங்கள். நீங்கள் ஜனவரி 8 ஆம் தேதியன்று இந்த உச்ச நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் வழக்கில் மனு தாக்கல் செய்ய, எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று, ஸ்டெர்லைட் தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. நானாகக் கேள்விப்பட்டுத்தான் வந்தேன்.
நீதிபதி: உங்களுக்கு முறையாகத் தகவல் அனுப்பப்படும். செவ்வாய்க்கிழமை அமர்வில் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.
வைகோ: எனக்கு 40 நிமிடங்கள் தர வேண்டுகிறேன்.
நீதிபதி: ஆகட்டும்.
இதன்பிறகு, ஆலையைத் திறக்க இன்றே உத்தரவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை, நீதிபதி ஏற்கவில்லை.
செவ்வாய்க்கிழமை அமர்வில் வாதங்களைக் கேட்கிறோம் என்றார்.
நீதிமன்றத்தில் இருந்த ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள், வைகோவின் கரங்களைப் பற்றி, ‘இன்று நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். இன்று நீங்கள் இப்படி வாதாடி இருக்காவிடில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் ஆணை இன்றே வந்திருக்கும்’ என்றனர்.
இன்றைய விசாரணையில், வைகோவுடன் வழக்கறிஞர் சிவபால முருகன், வழக்கறிஞர் ஆனந்தசெல்வம், வழக்கறிஞர் ஆசைத்தம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
‘இந்த நாள், என் பொது வாழ்வில் நான் ஒன்றைச் சாதித்தேன் என மகிழ்வூட்டுகின்ற நாள்’ என்று வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்

கருத்துகள் இல்லை: