திங்கள், 21 ஜனவரி, 2019

5 நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்ட்: உலகம் முழுவதும் கட்டுப்பாடு விதித்த வாட்ஸ் அப்

THE HINDU TAMIL : ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம் வதந்திகள் ஓரளவு குறைந்தது. இந்தக் கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத் தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் நடந்ததுபோல் சித்தரித்து பரப்பிவிடப்படுகின்றன.

மக்கள் இதை நம்பி பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் இதைத் தடுக்கும் வகையில்  ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் கட்டுப்பாடு விதித்தது.
மேலும் வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும் உள்ள வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களிடம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: