வெள்ளி, 25 ஜனவரி, 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்து

தினத்தந்தி : 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி
முதலீடு கையெழுத்தானதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சென்னை, இரண்டாவது நாளாக  இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் முதல் நாளில் பங்கேற்ற பல்வேறு நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும்
துறைகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாய்ப்புகள், உணவுத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.


மின்சாதனங்கள் உற்பத்தியில் தமிழகத்தை ஒரு முனையமாக்குவது, ஜவுளித்துறை முதலீட்டுக்கான வாய்ப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இந்த கருத்தரங்குகளில் பிரபல தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பிரிகேட், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 2-வது நாளில்  6 நாட்டு தூதர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தமிழக அரசுடன் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கையெழுத்தானது.  

*  ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்தானது

* சிபிசிஎல் நிறுவனத்துடன் ரூ.27,400 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தானது

* பிரபல நிறுவனத்துடன்  ரூ. 7 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது 

* ரூ.23 ஆயிரம் கோடிக்கு என்.எல்.சி.நிறுவனத்துடன்  ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* ஐசெர் நிறுவனத்துடன் ரூ.1500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

*  ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

 * ரூ.1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது 

* சாய் பல்கலைக்கழகத்துடன் ரூ.580 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

*அலைன்ஸ் நிறுவனத்துடன் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* எம்.எஸ்.எம்.இ என்ற 12 ஆயிரம்  சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது

மாநாட்டின் நிறைவில்  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:- 

2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. 

300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்தானது . தொழில் நிறுவனங்கள் முதலீடு மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.  முதலீட்டாளர்கள் மாநாட்டில்  பங்கு பெற்று முதலீடு செய்த நிறுவனங்களுக்கு நன்றி என கூறினார்.

கருத்துகள் இல்லை: