ஞாயிறு, 20 ஜனவரி, 2019

மின்சார பேருந்தும் மறைக்கப்பட்ட பெருநிறுவன கொள்ளைகளும்!

Parthiban Pakirisamy : வளர்ந்துவிட்ட அன்றாட அறிவியலில் எதுவுமே
புதிதில்லை மற்றும் அவைகள் என்றுமே சாமானிய மனிதனுக்கு உதவியதுமில்லை, இனி உதவப்போவதுமில்லை; இதை சற்று கூர்ந்து ஆய்வு செய்தால் இன்றைய திட்டமிட்டு வளர்க்கப்பட்ட அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு தொடர் சங்கிலிபோல் வளர்ந்து இன்று நம்மையே ஆக்டொபஸி போல் விழுங்கிக்கொண்டிருக்கிறது என்பது புலப்படும். உதாரணமாக ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட்ராயிடு மொபைல் ஒன்று இல்லை, ஆனால் அன்று நம்முடைய மூளை இயங்கு திறன் சிறப்பாக இருந்தது; சுமார் 25 தொலைபேசி எண்களை மனதில் தொடர்ச்சியாக பதியவைத்துக்கொள்ளும் அளவிற்கு நமது நினைவுத்திறன் செழுமையாக இருந்தது. இன்றையநிலை அதுவல்ல கையிலிருக்கும் ஆண்ட்ராயிடு தொலைந்துவிட்டால் பெற்ற தாய் தந்தைக்கோ மனைவிக்கோ மகளுக்கோ செய்தி சொல்லக்கூட இயலாத நிலைதான் என்றால், இந்த ஒற்றை புள்ளியை நோக்கி உங்கள் ஆராய்ச்சி அறிவை சற்றே நகர்த்துங்கள் உண்மை புரிந்துவிடும்.
உதாரணமாக முதலாம் ஆண்டு சுமார் முப்பதாயிரம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கும் ஆண்ட்ராயிடு போனை அதை தயாரிக்கும் ஆசிய அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் வணிக வளையத்திற்குள் கொண்டுவருவதாக கொண்டால், அதன் தற்காலிக சீரற்ற அணுகல் நினைவகம் (RAM) இரண்டு ஜிகா பைட்ஸ் தகவல்களை பராமரிக்கும் படி செய்யப்படுகிறது. ஆனால் ஒரே ஆண்டில் 4 GB RAM உருவாக்கப்பட்டு சந்தையில் விடப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய ஆண்ட்ராயிடு புதிதாக இருந்தும் அதை பயன்படுத்த இயலவில்லை காரணம், அதன் தற்காலிக சீரற்ற அணுகல் நினைவகம் (RAM) நமக்கே தெரியாமல் பலப்பல தேவையற்ற நிரல்களால் அதை உருவாக்கிய பெருநிறுவனங்களின் உதவியுடன் தாமாகவே மேம்படுத்துதல் எனும் பெயரில் இடத்தை அடைத்துக்கொள்கின்றன;

மற்றும் நுகர்வு கலாச்சாரம் எனும் பெயரில் தேவையற்ற மென்பொருள் நிரல்களை நாமே இறக்குமதி செய்து போனை திணறடித்து விடுமளவிற்கு பெருநிறுவனங்கள் அதிவேகமாக மிக குறுகிய காலத்திலேயே செயல்படுகின்றன. இதன் விளைவு ஒரே ஆண்டு ஆயுளை பெற்ற புத்தம் புதிய ஆண்ட்ராயிடு தற்போது பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது பணமும் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து உபரியாக மாறிவிட்டது! ஐம்பது ஆயிரம் ருபாய் தொலைக்காட்சி பெட்டி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஊழைக்கும்பொழுது, அதற்கு இணையாக வாங்கப்படும் ஆண்ட்ராயிடு ஏன் ஓராண்டிற்கு மேல் பயன்படுத்த முடிவதில்லை? சிந்தியுங்கள்!!
மெல்ல மெல்ல தரைவழி தொலைபேசி(Landline) திருடப்பட்டு முழுவதுமாக அண்ட்ராய்டு பயன்பாட்டிற்கு இந்த உலகை அடிமையாக்கி இன்று ஆண்ட்ராயிடு போன் இருந்தால்தான் உயிருடன் இருக்கும் அளவிற்கு நமது மூளையை மாற்றியதோடு, வேறு வழியில்லாமல் என்ன விலை என்றாலும் அதை வாங்குமளவிற்கு மனித சமூகம் தள்ளப்பட்டுவிட்டது என்றால்; இவ்வளவு பணமும் பெருநிறுவனங்களால் சிந்தாமல் சிதறாமல் முறைப்படி நம் கண் முன்னே நம்முடைய மகிழ்வான ஒப்புதலுடன் திருடப்படுகிறது என்றுதானே பொருளாகிறது!!
மிக கசப்பான அனுபவ உண்மை யாதெனில் இன்றைய அதிநவீன ஆண்ராய்டிற்கும் நம்முடைய அன்றாட அதிகபட்ச தொலைத்தொடர்பு தேவைகளுக்கும் உள்ள உண்மையான பயன்பாட்டு இடைவெளி சுமார் 80% விழுக்காடு; அதாவது நாம் நம்முடைய அதி நவீன ஆண்ட்ராயிடு போனை வெறும் இருபது விழுக்காடு மட்டுமே பயனுள்ள வகையில் இயக்குகிறோம் என்று என்றேனும் ஆய்ந்தறிந்ததுண்டா? அப்படியென்றால் ஏன் இவ்வளவு மாற்றங்கள்? முதல் பத்தியில் சொன்ன அந்த தொடர் இணைப்பு சங்கிலியை மீண்டும் ஆய்வு செய்தால் எல்லாமே பெருநிறுவன அடாவடி உபரி கொள்ளைக்கான பேராசை திட்டங்களும் அதனால் விளைந்த புதிய தொழில் நுட்பம் எனும் பெயரில் இந்த பூமி பந்தின் மீது அறிவியல் எனும் கேடயத்தால் நிகழ்த்தப்பட்ட முற்றிலும் சாமானிய மக்களுக்கு எதிரான தொழிநுட்ப படுகொலை என்று புரியவரும்.
மேற்சொன்னவற்றிற்கும் இந்த தலைப்பிற்கும் என்ன இணைப்பு என்றுதானே குழப்பம்? அதே அந்த பழைய பார்முலா தான் ஆனாலும் புதிய தொழிநுட்பத்தில் நிகழ்த்தப்படும் மூன்றாம் உலக பொருளாதார போர் என்றுதான் சொல்லவேண்டும்; இனி தலைப்பிற்குள் பயணிப்போமா....!
வால்வோ மற்றும் மின்சார பேருந்துகள்:-
---------------------------------------------------------------
சுமார் பத்து மீட்டர் நீளமுள்ள காதன்பர்க் சுவீடன் தொழில்நுட்பத்தில் உருவாகும் தற்போதைய குளிர்சாதன சொகுசு பேருந்துகள் முதல் இனி சரளமாக வரப்போகும் பேட்டரியில் இயங்கும் மின்சார குளிர்சாதன சொகுசு பேருந்துகள் வரை, சுமார் அறுபது இலட்சம் முதல் ஒரு கோடி ருபாய் என வடிவங்கள் தொழிநுட்ப வசதிகளுக்கேற்ப வெவ்வேறு விலையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இங்கேயுள்ள டாட்டா அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள் சாதாரண மற்றும் சிறப்பு பேருந்துகளை தயாரித்தாலும், வால்வோ தொழில்நுட்பம் முதன்முதலில் விமான நிலையங்களில் பயணிகளை விமானம் அருகில் கொண்டுசெல்வதற்கு ஏதுவாக இந்திய உபகண்டத்தில் கொணரப்பட்டது. பின்னாளில் இது நகர பேருந்துகளாக வலம் வரத்தொடங்கியது மட்டுமன்றி, தற்போது வால்வோ தொழிநுட்பம் புறநகர் சேவையிலும் பெரும் பங்காற்றுகிறது. பேட்டரி பேருந்துகளை பொறுத்தவரையில் மூலதன முதன்மை விலையில் எந்தவிதமான பெரிய மாற்றமும் வேறுபாடும் இல்லை எனினும் இந்தவகை பேருந்துகளில் SOX (கந்தக ஆக்ஸைடுகள்), NOX (நைட்ரஜன் ஆக்ஸைடுகள்), CO (கார்பன் மோனாக்ஸைடுகள்) மற்றும் CO2 (கார்பன்டைஆக்சைடுகள்) போன்ற நச்சு உமிழ்வு இருக்காது. புகை இருக்காது, சத்தம் இருக்காது, சாலை மற்றும் காற்று மாசு இருக்காது எனினும் இவைகளை இயக்குவதற்கு தகுந்த சாலைகள் இல்லையெனில் இயங்குதிறன் மிக மோசமாக பாதிக்கப்படுவது உறுதி என்க.
12.8V, 138Ah Lithium Iron Magnesium Phosphate intelligent battery களை 332 வோல்ட்டுகள் பெறப்படும் வகையில் தொடர் இணைப்பில் பொருத்தப்பட்டு, டி சி பி/ ஐ பி நெறிமுறை (TCP/IP Protocol) மூலம் பேட்டரி தகவல்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதை வேகமாக ரீசார்ஜ் செய்ய ஏதுவாக 400VDC முதல் 500VDC வோல்ட் நேர்முனை மின்சாரம் மூலம் இணைக்க சாலையெங்கிலும், மின்சார இணைப்புகள் கட்டமைக்கப்படும்; ஆக இதுவும் ஒரு பெரிய நேர்முனை மின்சார பகிர்தல் மற்றும் பராமரித்தல் போன்று இயக்கப்படும். இவ்வாறு தொடர் இணைப்பு மூலம் 332 வோல்ட் வரை இணைக்க சுமார் 24 முதல் 26 பேட்டரி களை இணைக்கவேண்டும் என்க. எனவே பேட்டரி களை பேருந்தின் மேல் தளத்திலும் (Terrace), பின்சுவற்றிலும் அடிப்பகுதி மையத்திலும் என்று பிரித்து பொருத்தப்படும். இவ்வளவு கனரக குளிர்சாதன பேருந்தை இயக்க இரண்டு ஒத்திசைவு (2 X 90 KW synchronous Motors) மோட்டார்கள் அல்லது இரண்டு 150 KW அளவிலான ஒத்திசைவு மோட்டார்கள் பொருத்தப்பட்டு மின்னாற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது. பேருந்தின் எடை சாலை உராய்வு மற்றும் சாலையின் சாய்வுத்தன்மை அதனால் விளையும் ரீஜெனரேட்டிவ் பிரேகிங் சேமிப்பு சக்தி, மோட்டார் திறன், ஆற்றல் மாற்றம் திறன் சக்கர இயக்க திறன் என எல்லாம் சேர்த்து ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 2.2 யூனிட்டுகள் முதல் 2.85 யூனிட்டுகள் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. சாதாரணமாக டீசலில் இயங்கும் கனரக குளிர்சாதன பேருந்துகள் ஒரு லிட்டருக்கு 3.2 கிலோமீட்டர் முதல் 4.2 கிலோமீட்டர் வரை மேற்சொன்ன காரணிகளைப்பொறுத்து (ஒருசில தவிர) இயங்குகின்றன
மின்சார பேருந்துகளின் அதிகபட்ச பயண நீளம் 150 கிலோமீட்டர்கள் மட்டுமே என்கிற நிலையில்.......
Distance considered = 150 Kms
1. Diesel operated Buses
Diesel consumption = 3.2 – 4.2Kmph
Total diesel consumed = 47 – 36 Lit
Fuel cost = 68 INR/Lit
Total diesel cost = 3200 – 2450 INR
2. Electric Busses
Energy consumption = 2.2 – 2.8Kmph
Total Kwh consumed = 68 – 54 Units
Fuel cost = 6 INR/Kwh (+ 18%GST)
Fuel cost = 7.08 INR/Kwh (Added 18%GST)
Total Energy cost = 481 – 385 INR
டீசல் பேருந்தைவிடவும் சுமார் 85 முதல் 86 விழுக்காடு குறைவாக உள்ளது அதாவது மின்சார பேருந்து ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய சுமார் 15 முதல் 16 விழுக்காடு மட்டுமே டீசல் பேருந்தின் அளவில் எடுத்துக்கொள்கிறது; இது அய்ரோப்பிய சாலைகளில் மட்டுமே சாத்தியம் எனினும் நம்மூர் நகர்ப்புற சாலைகளில் குறைந்தபட்சமாக 40 விழுக்காடு எரி சக்தியை மீதம்படுத்தமுடியும்.
பெரு நட்டம் யாதெனில்......
-------------------------------------------
இதில் உள்ள பேட்டரி மற்றும் சார்ஜிங் கண்ட்ரோல் சுற்றுகளின் மதிப்பு, பேருந்தின் மொத்த மதிப்பில் ஏறத்தாழ சரிபாதி ஆகும்! பேட்டரிகளின் வாழ்நாள் 12 முதல் 48 மாதங்கள் மட்டுமே என்கிற நிலையில் அதுவும் நம்மூர் சாலைகளில் சராசரியாக ஒவ்வொரு இரண்டாண்டு அல்லது மூன்றாண்டு இறுதியிலும் ஒவ்வொரு பேருந்திற்கும் சுமார் 30 முதல் 40 இலட்சம் வரை பேட்டரி மாற்றும் பராமரிப்பு சிலவு உறுதி மக்காள்! இதுதான் மின்சார பேருந்து உற்பத்தியாளர்களின் நீண்டகால கொள்ளை திட்டம் ஆகும் அப்பொழுது அவர்கள் வைப்பதுதான் பேட்டரி விலை எனில், நாட்டின் பொருளாதாரம் வெகுவாக கொள்ளையடிக்கப்டும் என்பது திண்ணம்!
தமிழ்நாட்டில் அரசு மூலம் இயக்குவது மட்டுமே சுமார் 22000 பேருந்துகள்; இதற்கு சரி சமாக தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன! அப்படியானால் தோராயமாக சுமார் 40000 பேருந்துகள் தமிழ்நாட்டில் மட்டுமே அரசாலும் தனியாராலும் இயக்கப்படுகின்றன; இதில் Vision 2030 எனும் இவர்கள் திட்டத்தின் கீழ் தோராயமாக ஒரு உதாரணத்திற்கு 12 000 பேருந்துகள் மின்சாரமயமாக மாற்றப்படுமேயானால்
முதலில் வாங்கும் விகிதாசார அடிப்படையில் (Pro rate of basis) மாதம் 1000 பேருந்துகள் வணிகமயமாக்கப்படுகிறது என்று கணக்கிட்டால், ஆண்டிற்கு 12000 பேருந்துகள் வருகிறது; இதில் முதல் மாதத்தில் வணிகமயமாக்கப்பட்ட 1000 பேருந்துகள் மூன்றாம் மாதம் முதல் பராமரித்தல் பணிக்கு ஆயத்தமாகிவிடும் ஆகையால் ஒவ்வொரு பேருந்திற்கும் குறைந்தபட்சமாக சுமார் பதினைந்து முதல் இருபது இலட்சம் கொள்ளை போவது உறுதி. அதாவது மூன்றாம் மாதம் முதல் 150 முதல் 200 கோடி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு செலவு அரசு செய்யவேண்டும்; இது ஆண்டுக்கு 1800 முதல் 2400 கோடி வரை வெறும் ஆயிரம் பேருந்துகளை பராமரிக்க மட்டுமே ஆகும் ஒரு மாநிலத்திற்கான ஒவ்வொரு ஆண்டிற்கும் தொடரும் துயரம் என்றால், நம்மைப்போன்ற பொருளாதாரத்தில் வளரும் நிலையில் உள்ள நாடுகளுக்கு இது தேவைதானா சிந்தியுங்கள் மக்காள்! இனி நமது அய்யங்களை கேள்விகளாக தொகுத்துள்ளேன்....
1. இந்திய உப கண்டத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் அதுவும் வெறும் ஆயிரம் பேருந்துகளை பராமரிக்கவே சுமார் 2400 கோடி கொள்ளை போகிறது என்றால் மொத்த இந்திய உபகண்டத்திற்கும் சுமார் ஐந்து இலட்சம் பேருந்துகள் என்று தோராயமாக வைத்துக்கொண்டாலும் நினைத்துக்கூட பார்க்கவில்லையே பெருநிறுவன கொள்ளையை! அப்படியெனில் இந்த திட்டம் எந்தெந்த பன்னாட்டு போலி பெருநிறுவனங்களை வாழவைக்க சொல்லுங்கள்!
2. எந்த பேட்டரி யானாலும் 400VDC முதல் 500VDC ஹைவோல்டேஜ் சார்ஜிங் எனினும் சுமார் 4 முதல் 6 மணிநேரம் சார்ஜிங் தேவை எனும் பட்சத்தில் அவ்வளவு ரீசார்ஜிங் மையங்கள் அமைப்பது சிரமம் மேலும் அதற்கான கேபிளிங் துணைமின் நிலையங்கள் என இன்னும் நீள்கிறது பட்டியல் என்றால் இதைப்பற்றிய முன்யோசனை ஏதேனும் உள்ளதா அல்லது பொதுமக்கள் பார்வைக்கு Draft copy வைக்கப்பட்டுள்ளதா?
3. நமது நாட்டில் இலட்சக்கணக்கில் இரு சக்கர வாகனங்களும் கார்களும் பெருகிவிட்ட நிலையில் அதற்கான சாலை வசதி இல்லையே மேலும் வாகன விகிதாசாரத்தில் வெறும் பத்து விழுக்காட்டிற்கும் கீழாக சாலை வசதி பற்றாக்குறை உள்ளதே அதை சரிசெய்யவேண்டுமா அல்லது இதுபோன்ற மின்சார பேருந்தை கொணரவேண்டுமா?
4. பெருகிவிட்ட இரு சக்கர மற்றும் கார்களாலும் மேடு பள்ள சரியற்ற சாலைகளாலும் இந்திய உபகண்டத்தில் சாலைவிபத்துகளின் விழுக்காடு அதிகரித்துள்ளதே இதை சரி செய்ய வேண்டுமா அல்லது மின்சார பேருந்தை கொணர வேண்டுமா?
5. நகர பேருந்துகளாக மட்டுமே இயக்கப்போகும் இந்த மின்சார குளிர்சாதன பேருந்துகள் வெள்ளைக்காரர்கள் பயணிக்க ஏதுவாக சாகர்மாலா திட்டங்களின் ஒரு பகுதி என்று புரிந்துகொள்ளலாமா? ஒரு தொழில் நுட்பத்தை கொணர்வதற்கு முன்பாக நமக்கு அதன் பற்றிய 200 விழுக்காடு புரிதல் இருக்கவேண்டுமா வேண்டாமா சொல்லுங்கள்!
6. நம்மால் ஒரு இத்துப்போன மின்னணு வாக்கு அல்லது ஏடிஎம் மெஷினையே பராமரிக்க இயலாத நிலையில் இம்மாதிரியான மின்னணு கட்டுப்பாட்டில் இயங்கும் மின்சார பேருந்து தொழில் நுட்பம் சாத்தியமா இல்லையா என்கிற செயலாக்க ஆய்வு (Feasibility Study) முறைகளை செய்யவேண்டுமா வேண்டாமா?
7. இவ்வளவு பெரிய அளவிலான திட்டங்களை எந்த பெருநிறுவனத்திடம் மூலம் பெறப்போகிறோம்? வெறும் பத்தாண்டு அனுபவங்களை கொண்ட பெருநிறுவனங்கள் பெயர் அடிபடுகிறதே அப்படியானால் யாருடைய பணத்தை யார் எடுத்து யாருக்கு கொடுப்பது நாயமாரே!
8. இந்த பூமியில் உள்ள மரபு சார் பெட்ரோலிய எரிபொருள்கள் இன்னும் 25 முதல் 30 ஆண்டுகள் மட்டுமே இருப்பு உள்ளது என்கிற நிலையில் இந்த மின்சார பேருந்துகளும் மறைமுக பெட்ரோலிய சக்தியில் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே அடுத்த கால் நூற்றாண்டுகளில் மீண்டும் சோலார் அல்லது இன்னபிற தொழில்நுட்பத்தத்திற்கு மாறவேண்டி மீண்டும் புதிய புதிய முதலீடுகளை நிறுவவேண்டுமா!
9. நகர பேருந்து நிலையே இப்படி என்றால் முற்றிலும் பொருந்தாத புறநகர மற்றும் கிரமபுர பேருந்துகளின் நிலை என்ன? அல்லது அதற்கான மாற்று திட்டம் என்ன? ஏன் இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கு இம்மாதிரியான தொழில் நுட்பத்தை அரசே குறைந்த செலவில் கொணரலாமே அப்பொழுது நாடே பசுமை சக்தியாக மாறிவிடுமே ஏன் இதுபற்றி சிந்தனை இல்லையா?
10. ஆட்டு மந்தைகள் வாழும் நாட்டில் ஆட்டு மந்தைகளின் மூளை ஒருநாளும் வேலை செய்யாது என்பது மட்டும் புலனாகிறது!
உங்களுடன் சக பயணி,
பார்த்திபன் ப
20/01/2019
Ps:-
------
இதை விமர்சனம் செய்யும் தோழமைகள் மிகுந்த நேர்மையுடனும் மக்கள் பற்றுடனும் குறிப்பாக தொழில்நுட்ப புரிதலுடனும் அணுகுவது நலம். இல்லையெனில் போகிறபோக்கில் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு போவது போல்தான் அமையும் ஆகையால், அத்தகைய ஒன்றுக்கும் உதவாத விமர்சனங்கள் நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

கருத்துகள் இல்லை: