திங்கள், 5 நவம்பர், 2018

பாக்கியராஜ் மீண்டும் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ... சன் பிக்சர்ஸ் நெருக்கடியோ?


பிரச்சனை தொடர்ந்தது tamiloneindia: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக பாக்யராஜ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தை சங்கத்தினர் ஏற்காத நிலையில், மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால் சங்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செங்கோல் மற்றும் சர்க்கார் பட பிரச்சனையில் சமரச பேச்சுவார்த்தைக்கு டைரக்டர் முருகதாஸ் உடன்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். கதையின் கரு வருணுடையது என்பது தெளிவாக தெரிந்ததால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவரும், இயக்குனருமான பாக்கியராஜ் வருணுக்கு பக்கபலமாக இருந்தார். முழு ஆதரவு அளித்தார்.




பிரச்சனை தொடர்ந்தது

இதன் காரணமாக பாக்யராஜ் மீது முருகதாஸ் பழி, குற்றம், அவதூறு என வாரி இறைத்தார். வருணுக்கு சப்போர்ட் செய்து பேசுவதாக கூறினார். அதேபோல முருகதாஸ் பக்கமும் சில இயக்குனர்கள் ஆதரவாகவும் பாக்யராஜுக்கு எதிராகவும் நின்றனர். ஒருவழியாக உண்மையை முருகதாஸ் ஒப்புக்கொண்டதுடன், வருண் ராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் போடுகிறேன் என்றும் சொல்லி விட்டார். ஆனாலும் பாக்யராஜூக்கு பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது.



கொந்தளித்தனர்

அவரை சுற்றியே சர்ச்சை எழுந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து பாக்யராஜையே எடுத்துவிட்டால் என்ன? என்ற பேச்சு முருகதாஸ் தரப்பிலும் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அடுத்துதான் பாக்யராஜ் தனது எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி விட்டார். அந்த கடிதத்தில் தனது நீண்ட விளக்கத்தையும் தந்திருந்தார். தர்மப்படி செயல்பட்ட பாக்யராஜுக்கே இந்த நிலைமையா என தமிழ் திரையுலகினர் ஆடிப் போய் விட்டார்கள். கொந்தளிக்கவும் செய்தார்கள்.



மன்னிப்பு கேட்கிறோம்

ஆனால் இப்படி பாக்யராஜ் ராஜினாமா செய்வார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அச்சங்கத்தினர், உடனடியாக அதற்கு பதிலும் தந்தனர். "எங்கள் இயக்குனரை நாங்கள் விடவே மாட்டோம், பாக்யராஜ்தான் எங்களுக்கு தலைவர்" என்றனர். இது சம்பந்தமாக நம்மிடையே பேசிய சங்க நிர்வாகிகளும், "இயக்குனர் பாக்யராஜிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், யாராவது ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கூட கேட்கிறோம்" என்று பகிரங்கமாக தெரிவித்தனர்.



குழப்பத்தில் சங்கம்

தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடைபெற்று கொண்டுதான் இருந்தது. ஆனாலும் பாக்யராஜ் 2-வது முறையாக ராஜினாமாவை அனுப்பியது சங்கத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு பாக்யராஜ் உடன்பட்டு விடுவார் என்று சங்கத்தினர் நினைத்தார்களா என தெரியவில்லை. இப்போது மறு ராஜினாமா என்பதும் செய்வதறியாது குழம்பி உள்ளனர்.

கருத்துகள் இல்லை: