ஞாயிறு, 4 நவம்பர், 2018

கத்தி படக்கதைக்கு நீதிகேட்ட குறும்பட இயக்குநர் மருத்துவமனையில்!

நீதிகேட்ட இயக்குநர் மருத்துவமனையில்!மின்னம்பலம்: கத்தி படக்கதை தன்னுடையது என்று நீதி கேட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் மயங்கி விழுந்ததால் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தக் குறும்படத்தின் கதையைத் திருடி கத்தி படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்துள்ளதாக வழக்குத் தொடுத்திருக்கும் இவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் ‘எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார். எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்குமாறு (ரெட் கார்டு) கேட்டுக் கொள்கிறேன்’ என்று விரிவாக தனது பக்க கோரிக்கையை முன் வைத்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தனது குடும்பத்தினருடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ராஜசேகர். தொடர் உண்ணாவிரதத்தால் அவருக்கு இன்று (நவம்பர் 4) காலை மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: