புதன், 7 நவம்பர், 2018

சர்கார் பிளாக் டிக்கெட் – விஜய் ரசிகர் மன்றங்கள் தியேட்டர்கள் கூட்டு கொள்ளை

sarkar black ticket
sarkar theater.nakkheeran.in - சி.என்.ராமகிருஷ்ணன் : ‘படிப்பது
ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற வசனம் திரைத்துறையினருக்கு மிகச் சரியாகவே பொருந்தும். சர்காருக்கும், ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும்கூட இது வெகு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. எப்படி தெரியுமா?
‘ராஜபாளையத்தில் ரூ.600-க்கு சர்கார் டிக்கெட் விற்கின்றனர். அதனால், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸை நான் வாழ்த்துகிறேன்!’ என்று ஃபேஸ்புக்கில்  உறுமியிருக்கிறார் அய்யனார் பாண்டியன்.
மதுரையில் சர்கார் திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால், தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம். அதனால், சர்கார் திரையிடும் தியேட்டர்களில் கட்டணம் குறித்து தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


சட்டத்தை எந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் மதிக்கின்றார்கள்? சிவகாசியில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் கணேஷ், பாலகணேஷ், ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டர்களை ‘ரவுண்ட்’ அடித்தோம்.
நேரடி அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, கணேஷ் தியேட்டர் வாசலில் பிளாக்கில் மதியம் 2-30 காட்சிக்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த  தங்கேஸ்வரனிடம் இரண்டு டிக்கெட் கேட்டோம். “ஒரு டிக்கெட் விலை ரூ.400.. இரண்டு டிக்கெட்டுக்கு ரூ.800 கொடுங்க.” என்றார் சாதாரணமாக. ‘என்னங்க இது அநியாயமா இருக்கு. நாட்டைத் திருத்தணும்; மக்களைத் திருத்தணும்னு சினிமாவில் சொல்கிறார் விஜய். அதற்கு நேர்மாறாக அல்லவா அவருடைய ரசிகர்களாகிய நீங்கள் நடந்துகொள்கின்றீர்கள்.’ என்றோம். “சார்.. ரொம்ப பேசாதீங்க.. ரெண்டு நாளும் தியேட்டரில் கவுண்டரில் டிக்கெட் தர மாட்டாங்க. நாங்கதான் விற்போம். ஒரு டிக்கெட்டுக்கு ரூ.350-ஐ தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். மீதி 50 ரூபாய்தான் ரசிகர் மன்றத்துக்கு.” என்றார்.
sarkar tweet
ranee theater tweet
கணேஷ் தியேட்டர் சூபர்வைஸர் சக்கரவர்த்தியிடம் ‘ரசிகர் ஷோ என்றால் முன்பெல்லாம் ஒரே ஒரு ஷோதான் ஒதுக்குவீர்கள். இதென்ன இரண்டு நாட்களுக்கு அத்தனை காட்சிகளும்? அதுவும் இந்த அநியாய கட்டணத்தில்?’ என்று கேட்டோம். “அதையெல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார் அலட்சியமாக.
ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டர் மேனேஜர் நம்மிடம் “சி.எல்.என். பிக்சர்ஸ் நிறுவனம், சர்கார் திரைப்படத்துக்கு இரண்டு நாட்களும் 10 காட்சிகளுக்கான டிக்கெட்டை வெளியில் விற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. அதன்படி செயல்பட வேண்டியதாயிற்று” என்றார்.
vijay manram jegan
ஜெகன்
விருதுநகர் மக்கள் இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜெகன் நம்மிடம் “வருடம் முழுவதும் எவ்வளவோ நற்பணிகளைச் செய்கிறோம். வருடத்துக்கு ஒரு விஜய் சினிமாதான் வருகிறது. பழனியாண்டவர் தியேட்டரில் டிக்கெட் கட்டணம் ரூ.400 கிடையாது. ரூ.250-க்கே கிடைக்கிறது. ராஜபாளையத்தில் ரூ.600-க்கு டிக்கெட் விற்பது எனக்குத் தெரியாது” என்றார். ‘இது ஒருவகையில் மக்களைச் சுரண்டுவதாக அல்லவா இருக்கிறது?’ என்று கேட்டபோது, அவரிடம் பதில் இல்லை.
saravanan vijay fan
சரவணன்
கூடுதல் விலைக்கு நான்கு டிக்கெட்டுக்களை வாங்கிய சரவணன் என்ற குடும்பத்தலைவர் “தியேட்டர்காரர்களோடு கூட்டணி வச்சுல்ல இதைப் பண்ணுறாங்க. கோடி கோடியா சினிமாக்காரங்க விஜய்க்கு கொட்டிக் கொடுக்குறாங்க.   ரசிகர்களோ, பொதுஜனமோ, விஜய் நடிச்ச சினிமாவ முதல் வாரத்துல பார்க்கணும்னா.. டிக்கட்டுக்கு கூடுதலா கொடுக்க வேண்டியிருக்கு. விஜய்ன்னு இல்லை.. எல்லா நடிகர்களும் சினிமாவுல மட்டும்தான் நியாயம் பேசுவாங்க” என்று தன் பங்குக்கு புலம்பினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், சிவகாசி கோட்டாட்சியரும் நம் லைனுக்கு வராத நிலையில், சிவகாசி வட்டாட்சியர் பரமானந்தராஜாவை தொடர்பு கொண்டோம். ‘இங்கே கணேஷ், பாலகணேஷ் மற்றும் ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டர்களில் பல மடங்கு கூடுதல் பிளாக்கில் விலைக்கு டிக்கெட் விற்கின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் தியேட்டர்கள், கவுண்டரையே திறப்பதில்லை’ என்றபோது, ‘இன்றே நிச்சயம் சர்ப்ரைஸ் விசிட் போகிறேன். பார்வையாளர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்? என்று விசாரணை மேற்கொள்கிறேன். நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.
தமிழகம் முழுவதுமே சர்கார் வசூல் வேட்டைதான்!
nakkeeran

கருத்துகள் இல்லை: