திங்கள், 17 செப்டம்பர், 2018

முஸ்லிம்களின் உற்ற நண்பர்!.... இஸ்லாமியரை உள்ளடக்கிய திராவிட சித்தாந்தம்

கோம்பை எஸ் அன்வர் சிறப்புக் கட்டுரை: முஸ்லிம்களின் உற்ற நண்பர்!மின்னம்பலம்: அது ஆண்டு 1970. நீதிக்கட்சியால் 1920களில் உருவாக்கப்பட்ட தியாகராய நகர் சிறிது சிறிதாக வியாபார ஸ்தலமாக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த காலம். தியாகராய நகர் காவல் நிலையத்திற்கு அருகில் பேருந்து நிறுத்தத்திற்குப் பின்புறம், முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டிக்கொள்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த இடத்தில், ஓரிரவு திடீரெனப் பிள்ளையார் முளைத்திட, கலவரச் சூழல். அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி, சமயோசிதமாகச் செயல்பட்டு திடீரென முளைத்த பிள்ளையாரை அகற்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
நாத்திகராக இருந்தபோதிலும் கலைஞர் மு.கருணாநிதி இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த உற்ற நண்பனாக, பாதுகாவலராக விளங்கினார் என்றால் மிகையாகாது. அவருடைய வாழ்க்கையை, குறிப்பாக இளமைப் பருவத்தை அறிந்தவர்களுக்கு இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

சுயமரியாதைச் சித்தாந்தத்தால் கவரப்பட்ட இளம் கருணாநிதிக்குக் குடி அரசு இதழுடன் இணைந்து தாக்கத்தை ஏறபடுத்திய மற்றொரு பத்திரிகை பா தாவூத் ஷாவின் ‘தாருல் இஸ்லாம்’. மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் மூலம் தமிழில் இருந்த சமஸ்கிருதத் தாக்கத்தை அகற்றிக்கொண்டிருந்த அதேவேளையில், அரபியிலிருந்து திருக்குரானைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்துகொண்டிருந்தார் பா தாவூத் ஷா. தமிழகப் பள்ளி வாசலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் ஜும்மா பிரசங்கங்கள், தமிழ் முஸ்லிம்களில் பலருக்கும் புரியாத அரபியில் தரப்படுவதைக் கண்டித்து, அதற்கு மாற்றாகத் தமிழில் பிரசங்க உரைகளையும் இயற்றி, எடுத்துக்காட்டாய் விளங்கியவர் பா தாவூத் ஷா. தமிழ் இஸ்லாமிய சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தவர், ஆரியத்தை எதிர்ப்பதிலும் பெரும் முனைப்புக் காட்டி ‘ஆரியருக்கொரு வெடிகுண்டு’ என்ற நூலையும் கடும் எதிர்ப்பிற்கிடையே வெளியிட்டவர். தமிழ் முஸ்லிம்களிடையே சிந்தனையிலும் செயலிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயன்ற பா தாவூத் ஷாவின் பத்திரிகை, இளம் கருணாநிதியின் இஸ்லாமியர் குறித்த பார்வைக்கும், மீலாது விழா சொற்பொழிவுகளுக்கும் அடித்தளமாக அமைந்தது.
சமயங்களை இணைக்கும் மேடை

இறைத் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் மீலாது விழா நிகழ்ச்சிகளுக்கு 1920களிலிருந்து தமிழகத்தில் ஒரு சிறப்பிடமிருந்தது. பிற சமயத்தைச் சார்ந்த தலைவர்கள் இஸ்லாமியர்களுடன் உரையாடுவதற்கு, அரசியல் பேசுவதற்கு உகந்த இடமாக மீலாது விழா மேடை இருந்தது. பெரியார், அண்ணா, ராஜாஜி என்று பெருந்தலைவர்கள், குறிப்பாக திராவிட இயக்கத் தலைவர்கள் சொற்பொழிவாற்றிய மேடை அது. இஸ்லாத்தின் சிறப்பைப் பற்றி பேசிய பெரியாரும் அண்ணாவும் முஸ்லிம்களிடையே புழங்கும் மூட நம்பிக்கைகளையும், சீர்திருத்தத்தின் அவசியத்தையும் வலியுறுத்திய மேடையும் அதுவே. தன் இளம் வயதில் சமூக நீதியால் கவரப்பட்ட மு.கருணாநிதிக்கும் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள இடமளித்ததும் மீலாது விழா மேடைதான்.
திருவாரூரில் ஒரு மீலாது விழா மேடையில்தான் அறிஞர் அண்ணாவை முதன்முதலாக இளைஞரான கருணாநிதி நேரடியாகச் சந்தித்தார். முதல் திரைப்படத்தில் தன் பெயரைக் காணாமல் ஈரோட்டிலிருந்து திருவாரூர் திரும்பிய மு.க.வுக்கு மீண்டும் முரசொலி அச்சிட உதவியவர் கருணை ஜமால் என்ற இஸ்லாமியர். அதேபோல் மீண்டும் திரைப்படத்தில் பணியாற்றிட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்குச் சிபாரிசு செய்தவர் கவிஞர் கா.மு.செரீப். தன் தாய் அஞ்சுகம், மனைவி தயாளும்மாள், மகன் முத்துவுடன் குடும்பத்தோடு மாடர்ன் தியேட்டர்ஸின் "மந்திரி குமாரிக்கு"த் திரைக்கதை எழுத கருணாநிதி சேலம் சென்று வீடு பார்த்து தங்கிய இடம், பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் ஹபீப் தெரு. அவருடைய எழுத்தில் மயங்கி, திரைத் துறையில் அவருக்கு ஊக்கமளித்தவர்களில் பல தயாரிப்பாளர்கள் இஸ்லாமியர்கள். அரசியல், சினிமா, வாழ்விடம் என்று இளம் கருணாநிதியின் ஆரம்ப கால வாழ்க்கை இஸ்லாமியர்களோடு பின்னிப் பிணைந்திருந்தது.
திராவிடமும் இஸ்லாமியர்களும்
இவற்றோடு திராவிடர் என்ற சித்திரிப்பில் இஸ்லாமியரை உள்ளடக்கிய திராவிட சித்தாந்தம், சுயமரியாதை கொள்கைக்கு நெருக்கமானதாக பெரியார், அண்ணா போன்றோரால் கட்டமைக்கப்பட்ட இஸ்லாம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தமிழ் முஸ்லிம்கள், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் தமிழைத் தேசிய மொழியாக அரசியல் நிர்ணய சட்ட சபையில் முன்வைத்த நிகழ்வு போன்றவை மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவை மேலும் வலுப்படுத்தியது.
அதேபோல் தமிழின் மீதான காதலும், சுயமரியாதைக் கருத்துகளும் எண்ணற்ற இஸ்லாமியர்களை திராவிட இயக்கத்திடம் இழுத்தது. அவ்வாறு கவரப்பட்டு இளம் மு.க.வுடன் சமகாலத்தில் பயணித்தவர்தான் நாகூர் ஹனீபா. நாத்திகத்தை முன்னிறுத்திய திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து 1949இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவான திமுக "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று முழங்க, ஹனீபா உட்பட ஏக இறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை திமுக ஈர்த்தது. "இறைவனிடம் கையேந்துங்கள்.." என்று இறைஞ்சிய ஹனீபாவின் குரல் "அழைக்கிறார், அண்ணா அழைக்கிறார்", "ஓடி வருகிறான் உதய சூரியன்" என்று திராவிட இயக்கத்தின் குரலாகவும் ஒலித்தது வெகு இயல்பாகப்பட்டது. திமுகவின் மாநில மாநாடுகள் ஹனீபாவின் இசைக் கச்சேரியுடன் தொடங்கும் பாரம்பரியம் தற்செயலானதல்ல. கருணாநிதியின் கல்லக்குடி போராட்டமும் ஹனீபாவின் வெண்கலக் குரலில் "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" என்று பிரசித்தி பெற்றது.
இஸ்லாமியர்களுக்குக் கலைஞரின் பங்களிப்பு

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பல அரசியல் உரிமைகள் மற்றும் சலுகைகளை முஸ்லிம்கள் இழந்தபோது, இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்திற்காக, உரிமைகளுக்காக காயிதே மில்லத்துடன் இணைந்து பெரும்பாலும் குரல் கொடுத்தது அண்ணாவின் தலைமையிலான திமுக. 1967இல் காயிதே மில்லத், ராஜாஜி ஆகியோருடன் ஒரு மாபெரும் கூட்டணி அமைத்து முதல்வரான அறிஞர் அண்ணா 1969இல் கொடிய கான்சர் நோயால் பாதிக்கப்பட்டு மறையவும், அவரைத் தொடர்ந்து முதல்வரான கலைஞர் மு.கருணாநிதி, பேரறிஞர் அண்ணா வழி நடத்திய பாதையில், அவர் கட்டியமைத்த இஸ்லாமியருடனான நெருக்கமான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்.
சுதந்திரத்திற்கு முன்னர் சென்னையில், 1919இல் ஆங்கிலேயர் தொடங்கிய அரசு முகம்மதன் கல்லூரியில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு இட ஒதுக்கீடு சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் அரசால் அகற்றப்பட்டு, அக்கல்லூரி 1948இல் பொதுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. அதேபோன்று, சுதந்திரத்துக்கு முன்னர் நீதிக்கட்சி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட யுனானி மருத்துவப் பள்ளியும் இழுத்து மூடப்பட்டது. ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் பேரறிஞர் அண்ணா எதிர்பாராமல் இயற்கை எய்தியதால், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் இழந்தவற்றை ஈடு செய்யும் பொறுப்பு முதல்வரான கலைஞரிடம் சேர்ந்தது.
1948இல் பொதுக் கல்லூரியானதை, முதல்வர் கலைஞர் 1974இல் மகளிர் கலைக் கல்லூரியாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், 1972இல் மறைந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் நினைவாக அக்கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி என்று பெயரும் சூட்டினார். பிற்காலத்தில் காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம், நாகை மாவட்டத்திற்கு அவரது பெயர், சாலைகளுக்கு அவர் பெயர் என்று உரிய மரியாதை கலைஞரின் வெவ்வேறு ஆட்சிகளின்போது செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் மட்டுமே இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வாகாது என்றுணர்ந்திருந்த கலைஞர், இஸ்லாமிய சமுதாயத்துக்காகப் புதிய கல்லூரிக்குச் சென்னை புறநகர்ப் பகுதியில் நில ஒதுக்கீடும் செய்தார். அது காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி என்ற பெயரில் இன்றும் இயங்கி வருகிறது. அதேபோல் வக்ஃப் வாரியம் உதவியோடு மதுரையில் இஸ்லாமியர்களுக்கு மற்றொரு கல்லூரியைத் தொடங்குவதற்கும் முதல்வர் மு.கருணாநிதி உதவி செய்தார். யுனானி மருத்துவ முறையை மீண்டும் அறிமுகம் செய்தது கலைஞர் அரசு.
அண்ணாவின் அமைச்சரவையில் பொது சுகாதார அமைச்சராகப் பணியாற்றியவர் எஸ்.ஜே. சாதிக் பாட்சா. கலைஞர் முதல்வரானவுடன், அவர் வகித்த பொதுப்பணித் துறை சாதிக் பாட்சாவிடம் ஒப்படைக்கப்பட்டது. திமுகவை விட்டு 1972இல் எம்ஜிஆர் விலகியவுடன் அதுவரை அவர் வகித்துவந்த முக்கியமான பொருளாளர் பதவியும் சாதிக் பாட்சாவிடமே ஒப்படைக்கப்பட்டது. தமது இறுதிக் காலம் வரை சாதிக் பாட்சா திமுகவின் பொருளாளராகப் பணியாற்றினார்.
சமூக, இலக்கியத் தளங்களில்…
கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான் 1969ஆம் ஆண்டு மீலாது நபி விழாவுக்கு, அரசு விடுமுறையை அறிவித்தது. ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறும் வகையில் முஸ்லிம் சமுதாயத்தவர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டனர். சிறுபான்மை இன மக்களைக் கல்வி, சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் உயர்த்துவதற்காக சிறுபான்மையினர் நல ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
15ஆம் நூற்றாண்டு தொடங்கித் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்கள் முஸ்லிம்கள். தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா என்று பரவிக் கிடக்கும் தமிழ் முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் நடத்திய உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பைக் கலைஞர் கருணாநிதி ஒருபோதும் தவறவிட்டதில்லை.
தமிழைப் போற்றி, தமிழ் முஸ்லிம்களுடன் ஆத்மார்த்தமான உறவைக் கலைஞர் கொண்டிருந்த அதேவேளையில் தமிழகத்தில் கணிசமாக வாழும் உருது முஸ்லிம்களையும் அவர் ஆட்சியில் புறக்கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உருது முஸ்லிம் சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு செய்தது மட்டுமின்றி, உருது மொழியின் வளர்ச்சிக்காகக் கலைஞர் உருது அகாடமியையும் ஏற்படுத்தினார்.
சோதனையின் காலம்

கலைஞருடனும் திமுகவுடனும் முஸ்லிம்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டிருந்த இந்த அசாதாரண உறவு 1990களின் பிற்பகுதியில் கலைஞரின் நான்காவது ஆட்சிக் காலத்தின்போது சோதனைக்குள்ளானது. 1981இல் நடைபெற்ற மீனாட்சிபுரம் மத மாற்றங்கள் வகுப்புவாத சக்திகளின் கவனத்தைத் தமிழகத்தின் மீது திருப்பின. திமுக உட்பட திராவிட இயக்கங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிரமாக கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரத்தில் வகுப்புவாத சக்திகள் கோவை போன்ற நகரங்களில் காலூன்ற ஆரம்பித்தன. இதுகுறித்து எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேல் கூறுகையில், "திராவிட இயக்கத்தவரின் சக்தியும் முழு கவனமும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இருந்தபோது, இங்கே வகுப்புவாத சக்திகள் தலைதூக்குவதை கவனிக்கத் தவறிவிட்டனர்" என்கிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசின் நடவடிக்கைகளும், 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், தமிழகத்தில் வகுப்புவாதக் கொப்பரையைச் கொதிக்க வைக்கத் தொடங்கின. திமுக மீண்டும் 1996இல் ஆட்சிக்கு வந்தபோது, கோவையில் தலைதூக்கியிருந்த வகுப்புவாத சக்திகளை, அடிப்படைவாத அமைப்புகளை அது குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். ஏற்கெனவே இரு முறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ் தனது ஆட்சியை திமுக இழந்திருந்த நிலையில், புது டெல்லியில், நட்பு பாராட்டக்கூடிய தேசியக் கட்சியின் துணை அதற்கு அவசியமானது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர மறுத்த சமயம் அது. மூன்றாவது அணிக்கான திமுகவின் முந்தைய பரிசோதனைகள் அதிகப் பலனை அளிக்காத தர்ணம். இந்த நிலையில், கொள்கை அளவில் நேர் எதிரான பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டு சேரும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டது. "தலைவர் அவர்கள் உண்மையில் வாஜ்பாயுடனும், பாஜக தலைமையுடனும் இந்தக் கூட்டணி சில உத்தரவாதங்களின் அடிப்படையில் மட்டும்தான் அமையும். அவற்றுள் சிறுபான்மை மக்களின் கவலைக்குரிய பிரச்சினைகளும் அடங்கும் என்றும் (குறைந்தபட்ச பொதுத்திட்டம்) உறுதி செய்திருந்தார்" என்று திமுகவின் மூத்த தலைவரான ரகுமான்கான் கூறுகிறார். என்றாலும், திமுகவிற்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பெரிய சலசலப்பை இந்த முரணான கூட்டணி ஏற்படுத்தியது. 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது.
புதுப்பிக்கப்பட்ட உறவு
பாஜகவுடனான கூட்டணி முறிந்த பின்னர் மீண்டும் (2006-2011) முதலமைச்சர் ஆன கலைஞர் தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக அமைச்சரவையில் டி.பி.எம். மைதீன்கான், எஸ்.என்.எம். உபைதுல்லா என இரு முஸ்லிம்களை மந்திரிகளாக்கினார். ரகுமான்கானுக்குச் சிறு சேமிப்புத் துறை வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் மீலாது நபி விழா கட்டாய அரசு விடுமுறை பட்டியலிலிருந்து அகற்றப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் கட்டாய அரசு விடுமுறைப் பட்டியலில் அதைச் சேர்த்தார் கலைஞர். அத்துடன் மிக முக்கியமாக, கலைஞர் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அறிவித்தார். இஸ்லாமிய உலமாக்கள் நலனுக்காக உலமா வாரியம் அமைத்து, அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இரு திட்டங்களும் ஏழ்மையில் இருக்கும் உலமாக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டவை.
இவையனைத்திற்கும் மேலாக கலைஞர் தனது கடைசி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களிடையே ஆறுதலான உணர்வைக் கொண்டு வந்தார். அதுவரை அவர்கள் பாதுகாப்பு அமைப்புகளின் எளிதான இலக்குகளாக இருந்து வந்தனர். "2006இல் கோயம்புத்தூரில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி மனித நீதிப் பாசறை (MNP) அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு தொடர முயற்சி செய்தார். இது முதல்வர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, உடனடியாக விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரியைப் பணிமாற்றமும் இடமாற்றமும் செய்ய உத்தரவிட்டார். வேறு மாநிலமாக இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டிருப்பார்கள்" என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார் எம்.என்.பி. இயக்க நிறுவனரும், தலைவருமான பத்திரிகை ஆசிரியர் மு.குலாம் முஹம்மது. "முஸ்லிம்கள் மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டபோது, அந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்காகக் கலைஞர் குரல் கொடுத்து, முஸ்லிம்களின் பதற்றத்தையும் பீதியையும் தணித்தது மறக்க முடியாதது" என்கிறார் குலாம்.

தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5 சதவிகிதம் மட்டுமே. பெரும்பாலும் மாநிலம் முழுவதும் சிதறியிருக்கும் அவர்களுடைய வாக்குகள் சில தொகுதிகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும், முஸ்லிம்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும், அதனைக் கடந்த 50 ஆண்டுகளாக வழிநடத்திவந்த கலைஞருக்குமான உறவு வாக்கு அரசியலைக் கடந்தது.
வாக்கு அரசியலைக் கடந்த உறவு
வரலாற்றில் இதற்கு முன்னரும் கடுமையான நெருக்கடிகளை தமிழ் முஸ்லிம் சமூகம் சந்தித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் வணிகத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்னர் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம் சமூகம், ஐரோப்பியக் காலனிய வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வணிகத்தைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியா வந்தடைந்த போர்த்துகீசியர், ஒல்லாந்தர் (டச்சு), ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோரின் ஏகபோக வணிகத்திற்கு பெரும் தடையாக இருந்தது தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான தமிழ் முஸ்லிம்களின் கடல் வணிகம். ஆகவே, தங்கள் கடற்படை வலிமையை வைத்து, இந்தியப் பெருங்கடலே தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டதென்று சொல்லி, கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வணிகர்கள் மீது, குறிப்பாகத் தமிழ் முஸ்லிம்கள் மீது கடுமையான வன்முறையைப் பிரயோகித்தனர். பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் மரைக்காயர்கள் கையில் இருந்த கடல் வணிகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு முழுவதும் ஐரோப்பியர் வசமாகியது. இந்த இக்கட்டான சூழலிலும் காலனிய சக்திகளின் கட்டுப்பாடுகளையும் மீறி ராமநாத சேதுபதிகள் தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களுக்கு உறுதுணையாகவே இருந்தனர். ஏனென்றால் தங்கள் குடி மக்களான முஸ்லிம்களின் வணிக வீழ்ச்சி தங்களுடைய வீழ்ச்சியும்தான் என்பதை நன்கு அறிந்திருந்தனர்.
சேதுபதிகளும் பிற தமிழக மன்னர்களும் வழங்கிய ஆதரவைத்தான், முஸ்லிம்கள் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டபோது நீதிக் கட்சி தொடங்கி, பெரியார் மற்றும் அண்ணா தலைமையில் திராவிட இயக்கம் வழங்கியது. தமிழக வரலாற்றை நன்கு அறிந்தவர் கலைஞர் என்பதால் தமிழகத்தை ஆண்ட கடந்த கால ஆட்சியாளர்களைப் பின்பற்றி, அண்ணாவின் பாதையில் இக்கட்டான சூழலில் இஸ்லாமியருக்கு உறுதுணையாக, உற்ற நண்பனாக இருந்துள்ளார்.
(Frontline இதழ் வெளியிட்ட கலைஞர் சிறப்பிதழில் இடம்பெற்ற கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்)

கட்டுரையாளர் கோம்பை எஸ் அன்வர் பத்திரிகையாளர், ஆவணப் பட இயக்குநர், வரலாற்று ஆய்வாளர். தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது இந்தியத் தொல்லியல் துறைக்காகத் தஞ்சை பெரிய கோயிலின் வரலாறு குறித்த குறும்படங்கள் உருவாக்கிய பெருமை பெற்றவர். தமிழ் முஸ்லிம்கள் வரலாறும் அடையாளமும் குறித்த இவருடைய ஆவணப்படம் 'யாதும்’ அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 48th World Fest Houston International Film Festival என்னும் சர்வதேசத் திரைப்பட விழாவின் கலாச்சாரப் பிரிவில் Bronze ரெமி விருது பெற்றது. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பண்பாடு, வரலாறு குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார்.
இவருடைய மின்னஞ்சல்
இவருடைய வலைப்பூ
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை: