திங்கள், 17 செப்டம்பர், 2018

நடிகை நிலானி திருமணம் செய்ய மறுப்பு .. உதவி இயக்குனர் தீக்குளித்து தற்கொலை

tamilthehindu :தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மிரட்டுவதாக திரைப்பட
உதவி இயக்குநர் மீது துணை நடிகை அளித்த புகாரின் மீது போலீஸார் அழைத்து விசாரணை நடத்தியதால் மனமுடைந்த இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காந்தி லலித்குமார். இவர் சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். நடிகர் உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான நண்பரான லலித்குமார் திருவண்ணாமலை மாவட்ட உதயநிதி நற்பணி மன்றத்தின் தலைவராகவும் இருந்தார்.< இவருக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகி கணவரைப் பிரிந்து வாழும் சின்னத்திரை நடிகை நிலானிக்கும் நட்பு ஏற்பட்டது.
சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாரைக் கண்டித்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கைதானவர்.

போலீஸ் சீருடையில் சர்ச்சைக்குரிய கருத்து பேசியதால் வடபழனி போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நிலானிக்கு ஜாமீனில் வர உதவி செய்தவர் காந்தி லலித் குமார்தான். இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில் காந்தி லலித்குமாரை விட்டு நிலானி திடீரெனப் பிரிந்தாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சனிக்கிழமை மயிலாப்பூரில் சின்னத்திரை படப்பிடிப்பின் போது நடிகை நிலானியை காந்தி லலித்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் நிலானியைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
இதனால் தன்னைத் தொந்தரவு செய்வதாக லலித்குமார் மீது நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். நிலானியின் புகாரை அடுத்து மயலாப்பூர் போலீஸார் காந்தி லலித்குமாரிடம் விசாரித்தனர். அப்போது இனி நிலானியைத் தொந்தரவு செய்வதில்லை என அவர் உறுதியளித்ததை அடுத்து காவல் துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து நேராக கே.கே நகர் சென்ற காந்தி லலித்குமார், அங்கு தனியார் பள்ளி வளாகம் முன் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காந்தி லலித்குமார் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
துணை நடிகையுடன் பழகிவந்த நிலையில் அவர் திடீரென விலகியது மட்டுமின்றி, தன் மீதே புகாரும் கொடுத்ததால் உதவி இயக்குநர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி லலித்குமார் தற்கொலைக்கு முன் கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: