சனி, 22 செப்டம்பர், 2018

ராஜீவ் படுகொலையில் உயிரிழந்த தலைமைக் காவலரின் மகன் புதுச்சேரியில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரகம்

tamil.thehindu.com செ.ஞானபிரகாஷ் ராஜீவ் காந்தி படுகொலையில் பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த தலைமைக்காவலரின் மகன் புதுச்சேரியில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். இவ்வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 பேர் விடுதலை செய்ய அமைச்சரவையைக் கூட்டி விடுதலைக்கான அமைச்சர்கள் கையெழுத்திட்ட கோப்பினை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் தர்மன் உயிரிழந்தார். அவரது மகனான தற்போது புதுச்சேரியில் பணிபுரிந்து வரும் ராஜ்குமார் (33) தனது தந்தை உயிரிழப்புக்குக் காரணமான 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாதென வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு ராஜ்குமாரை போலீஸார் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
தனி நபராக தனது தந்தை புகைப்படத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது தொடர்பாக ராஜ்குமார் கூறியதாவது:
''எனது தந்தை தர்மன் 40 வயதில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தபோது எனக்கு 8 வயது. அம்மா, அக்கா, அண்ணன் என எங்கள் குடும்பத்தின் நிலையே பாதிக்கப்பட்டது. எங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு தமிழர்களாகிய எங்கள் குடும்பம் படு துயரத்தைச் சந்தித்தது. வாழ்வுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உள்ளோம். சாப்பிட வழியில்லாச் சூழலையும் சந்தித்துள்ளோம்.
இனி எக்காலத்திலும் என் தந்தையை நான் காண இயலாது. அதே நேரத்தில் தற்போது சிறையில் உள்ளோரை அவர்களின் குடும்பத்தினர் பார்க்க இயலும். எனது தந்தையின் கொலைக்கு நீதிகேட்டு காந்தியடிகள் சிலை முன்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டேன். அதையடுத்து போலீஸார் என்னை அழைத்துச் சென்று விசாரித்தபோது அனைத்தையும் தெரிவித்தேன். பின்னர் போலீஸார் விடுவித்தனர். இவ்வழக்கில் சிறையில் உள்ளோரை விடுவிக்கக்கூடாது'' என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: