சனி, 22 செப்டம்பர், 2018

நாகர்கோவில் மாநகராட்சியாக மாறுகிறது!

நாகர்கோவில் மாநகராட்சியாக மாறுகிறது!மின்னம்பலம் : நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஆண்டில் இருந்து அதிமுக அரசு கொண்டாடி வருகிறது. இதுவரை 30 மாவட்டங்களில் நடைபெற்றுள்ள நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னையில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் இன்று(செப்டம்பர் 22) நூற்றாண்டு விழா நடைபெற்றது.

நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்ததோடு, 31 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் உரையாற்றிய அவர், “வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல விருதுகளை தமிழக அரசு பெற்றிருக்கிறது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாத எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நம் மீது குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தமிழகம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதிமுக அரசின் மீது அரசியல் லாபத்திற்காகத்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்” என்றவர், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலனுக்காகத் தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளையும், ஒக்கி புயலில் இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் 12ஆவது மாநகராட்சியாக நாகர்கோவில் தரம் உயர்த்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் முதல்வர் இந்நிகழ்வில் வெளியிட்டுள்ளார். எல்லைகளில் மறுசீரமைப்பு பணிகள் முடிந்த பின் மாநகராட்சியாக நாகர்கோவில் தரம் உயர்த்தப்படும் என கூறினார்.
முன்னதாக, இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தும்படிக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் விடுத்தக் கோரிக்கையை மாலையிலேயே நிறைவேற்றுவதாக முதல்வர் அறிவித்துள்ளது பாஜக மற்றும் அதிமுக இடையே உள்ள உறவை வெளிப்படையாகக் காட்டியுள்ளது என்கின்றனர் குமரி அதிமுகவினர்

கருத்துகள் இல்லை: