செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அமைச்சர் நீட் பாண்டியராஜன் : எச்.ராஜா, எஸ்.வி.சேகர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தவில்லை


tamil.thehindu.com/ உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜா மீது உயர் நீதிமன்றமே சுமோட்டோ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில்
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் தடையை மீறி செல்ல முயன்ற


ஹெச்.ராஜாவிடம் நீதிமன்ற ஆணையை சுட்டிக்காட்டி போலீஸார் தடை விதித்தபோது அவர் கடுமையான வார்த்தைகளால் உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் விமர்சித்தார்.
ஹெச்.ராஜாவின் பேச்சை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்தனர். அவரது பேச்சை ஒப்புக்கொள்ள முடியாது என்று பாஜக தலைவர் தமிழிசை பேட்டி அளித்தார். ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைத்துள்ளது. நேற்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஹெச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அமைச்சர் பாண்டியராஜன் ஹெச்.ராஜாவை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் எஸ்.வி.சேகரையும் சேர்த்து நியாயப்படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் அமைச்சர் பாண்டியராஜன் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள், ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது, அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன் ஹெச்.ராஜாவின் பேச்சு சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையைத் தூண்டும் வகையில் இல்லை. சோபியா விமான நிலையத்தில் கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டார். ஆனால் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் பேச்சால் சட்டம் ஒழுங்கு எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்து அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில் பேட்டி அளித்தார்.
அதே கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கோபப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூம் எங்களை அதிமுக ஆட்சி பாஜக சொல்பேச்சு கேட்டு நடக்கும் ஆட்சி என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதை எடுப்போம். எங்கள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதைத்தான் நானும் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
ஒரே விழாவில் ஹெச்.ராஜாவை ஒரு அமைச்சர் ஆதரித்தும், ஒரு அமைச்சர் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை என்று கூறுவதையும் கேட்ட செய்தியாளர்கள் என்ன நடவடிக்கை என்பது புரியாமல் சென்றனர்.

கருத்துகள் இல்லை: