வியாழன், 22 மார்ச், 2018

உணவு கேட்டு வந்த மூதாட்டியை கட்டி கடலில் வீசிய இளைஞர்கள்.. குமரியில் அரங்கேறிய கொடூரம்


சமீப காலமாக ஒருவரை அடிப்பதற்கு முன்பு அந்தக் குற்றத்தை அவர் செய்திருப்பாரா என்பதை யோசிக்காமல், உடனே அவர் மீது குற்றம் சுமத்தி தண்டனைக்கு உட்படுத்தும் சம்பவம் அதிகரித்துகொண்டே செல்கிறது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் உணவு கேட்டு வந்த மூதாட்டி ஒருவரை, குழந்தையைத் திருட வந்தவர் எனக் கூறி மரத்தில் கட்டிவைத்து, பின்பு கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, குழந்தைகளைக் கடத்துவதாகத் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், மணக்குடியில் மூதாட்டி ஒருவர் வீடு வீடாகச் சென்று உணவு கேட்டுள்ளார். ஆனால் அவர் குழந்தைகளைத் திருடுவதற்காக வந்துள்ளார் எனக் கூறி இளைஞர்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து பிறகு கை,கால்களைக் கட்டி கடலில் வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மூதாட்டி என்றும் பாராமல் மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்று, கேரளாவில் அரிசியைத் திருடியதாகக் கூறி மது என்ற பழங்குடி இளைஞரை அடித்துக் கொன்றனர்.
மேற்கு வங்கத்தில் குழந்தையைக் கடத்தியதாகக் கருதி மிதிப்பூர் பனாகர்ஹ் கிராமத்தைச் சேர்ந்த 42 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கயிற்றில் கட்டி கிராம மக்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், குழந்தைகள் திருடப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து, அப்பாவி இளைஞர்கள் நால்வரைக் கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.

கருத்துகள் இல்லை: