திங்கள், 19 மார்ச், 2018

திருப்பூரில் தாக்கப்படும் ஆப்பிரிக்கர்கள்: காட்டுமிராண்டிகளின் தடித்தனம்

கனடிய பிரதமர் அங்கு தமிழர்களோடு பொங்கல் கொண்டுவதை பாராட்டிக்கொண்டே நம் ஊரில் இருக்கும் வேற்று நாட்டினத்தவர் மீது வன்மத்தோடும் துவேசத்தோடும் நடந்து கொள்ளும் இந்த சில்லறை பசங்களை என்ன செய்யலாம்? இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களையே சாதியின் பொருட்டு வந்தேறி என்று ஒதுக்கும் சில்லறை பசங்கள் இருக்கும் ஊரில் நாம் பன்முகத்தன்மையை எப்படி உயர்த்தி பிடிப்பது?
thetimestamil.com ப. ஜெயசீலன்: உலகமயமாக்கலும், தாராளமயமாக்களும் மனிதர்களின் இடப்பெயர்ப்பை தவிர்க்க முடியாததாக்கியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இந்த இட பெயர்ச்சி இன்றுவரை தீவிரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள், வாழ்க்கை தர மேம்பாடு போன்ற அடிப்படையான தேவைகளுக்காகவும் போர், பஞ்சம், வறட்சி போன்ற சமூக,சுற்றுசூழல் காரணங்களுக்காகவும் இந்த இடப்பெயர்ச்சிகள் நடக்கின்றன. இதன் பின்புலத்தில் தான் கோடிக்கணக்கான இந்தியர்களும், தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்திருக்கிறார்கள்.
இந்த பெரும் இடப்பெயற்சிகள் இயல்பாக உலகம் முழுவதும் பல சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய நகரங்களான லண்டன், நியூயார்க், சிட்னி போன்ற இடங்களில் நீங்கள் தெருவில் நடக்கறீர்கள் என்றால், உலகின் அத்தனை நாடுகளை சேர்ந்தவர்களும், இனங்களை சேர்ந்தவர்களும் உங்களோடு அந்த தெருவில் நடந்து கொண்டிருப்பார்கள். கவனித்து பார்த்தால் அது ஒரு அற்புத காட்சியாக தெரியும்.


மனிதர்களுக்குள் இருக்கும் எல்லா வேற்றுமைகளும் ஒரு நொடி காணாமல் போனதாய் உணர்வீர்கள். கூடி வாழ்வது எவ்வளவு எளிதாகவும், உன்னதமாகவும் உள்ளது என்று உங்களுக்கு தோன்றும். இது இடப்பெயர்ச்சிகள் குறித்த ஒரு பார்வை மட்டுமே.
அதே நகரங்களில் தங்கள் இடத்தில் திடீரென்று எங்கிருந்தோ வந்த வேற்றினத்தவர் தங்களை முற்றிலுமாக சூழ்ந்து கொண்டு அதுவரை அந்த நகரங்களுக்கு இருந்த இயல்பை, அழகை முற்றிலுமாக சிதைத்து விட்டார்கள் என்று கருத்துபவர்களும் இருக்கிறார்கள். இந்த அந்நியமனிதர்கள் தங்களுக்கு எந்த வகையிலும் சரிசமமானவர்கள் அல்ல, தங்களது வளங்களை சிதைக்க வந்திருக்கும் இவர்கள் தங்களது மதத்திற்கு, கலாச்சாரத்திற்கு, இனத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள் என்று எண்ணுபவர்களும் அங்கு இருப்பார்கள். இது ஒரு பக்கம் என்றால் புதிதாக ஒரு நாட்டிற்கு குடியேறுபவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காமல், அந்த நாட்டின் கலாச்சாரத்தை கற்க விரும்பாமல்/முயலாமல், அந்த நாட்டின் பன்முகத்தன்மைகு எந்த பங்களிப்பையும் அளிக்காமல் வேலைக்கு போனமா, டாலர்ல சம்பளம் வாங்கனமா, தமிழ்ப்படம் வந்தா பார்த்தமா, இந்தியன் ரெஸ்டாரண்ட் போனமா, இந்தியன் grocery கடை போனமா, இந்தியன் சலூன் போனமா, இந்திய நண்பர்கள் வீட்டிற்கு போய் தண்ணியபோட்டமா, இந்தியர்களோடு தங்கினோமா, இந்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் குடிபோனமா என்று அச்சு அசல் அவர்கள் நாட்டில் அவர்கள் எப்படியிருந்தார்களோ அப்படியேயிருந்து பணம் சம்பாதிக்க மட்டுமே வந்தவர்களும் இருப்பார்கள். எனவே இதுபோன்ற ஆட்களால் முரண்கள் ஏற்படுவது இயல்பு.
இதுபோன்ற முரண்களை களைய அந்தந்த அரசாங்கங்களும், சமூகங்களும் பல முயற்சிகள் செய்கிறார்கள். கடுமையான இனவெறி நாடுகளாயிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இன்று “proudly multicultural” என்கின்ற கோசத்தை முன்வைக்கிறார்கள். தங்கள் சமூகம் பல்வேறுதரப்பட்ட இனங்கள், மதங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் கொண்டவர்கள் கூடி வாழும் இடம் என்பதில் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை என்று ஒரு சமூகமாக நம்புகிறார்கள். அந்த நாடுகளின் வலதுசாரி அரசியல் தலைவர்களும் கூட குடியேற்றத்தை எதிர்த்து கொண்டேயாவது தங்களது பன்முகத்தன்மையை பெருமையான ஒன்றாக மேடைகளில் பேசுகிறார்கள். பன்முகத்தன்மையால் ஏற்படும் சவால்களை அவர்களது அரசாங்கமும், சமூகமும் இணைந்து சந்திக்கிறார்கள். xenophobia எனப்படும் வேற்றினத்தவர் குறித்தான அச்சமே பெரும்பாலான இடங்களில் வேற்றினத்தவர் மீதான வெறுப்பாக மாறுகிறது. இதை தடுக்க கல்விக்கூடங்கள் தொடங்கி கலை, கலாச்சார நிகழ்வுகள் முதற்கொண்டு அவர்கள் முயற்சிக்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கு கூட இனவெறி என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று என்று போதிக்கிறார்கள். வேற்றினத்தவரின் உணவு, உடை, மொழி போன்றவற்றை குறித்தான அறிமுகத்தை அளிக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் பல்வேறு இனக்குழுக்களின் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். அந்த இனக்குழுவும் தங்களது சமூகத்தில் ஒரு அங்கம்தான் என்று உணர்த்துகிறார்கள். கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ராடோ பொங்கல் விழாவில் வேஷ்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு தமிழில் வாழ்த்து சொல்லும் நோக்கமும் இதுதான்.
எப்படி இந்தியர்கள் அவர்களுக்கிருக்கும் கல்வி, வசதியை வைத்து மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்கிறார்களோ அதே போல மூன்றாம் உலகநாடுகளை சேர்ந்தவர்கள் சிலர் இந்திய போன்ற நாட்டிற்கும் கல்வி வேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் நிலை உள்ளது. இதன் பின்னணியில்தான் ஆப்பிரிக்க நாட்டினார் பாவம் சில்லறை பசங்கள் வாழும் இந்தியாவையும் ஒரு நாடாக மதித்து கல்வி, வியாபாரத்திற்காக குடிபெயருகிறார்கள். முறைப்படி விசா பெற்று நமது குடியுரிமை துறையின் அனுமதியை பெற்றுத்தான் இங்கு வருகிறார்கள். உண்மையில் இந்த குடியேற்றம் குறிப்பாக அவர்களது தமிழக இருப்பு மிக இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். கருப்பினத்தவருக்கு மிக நெருக்கமான ஒரு இனம் இருக்குமானால் அதாவது நிறம், தோற்றம், நம்பிக்கைகள், கலை, கலாச்சாரம் என்று எந்த பின்புலத்தில் பார்த்தாலும் அல்லது மரபணு தொடர்ப்பை வைத்து பார்த்தாலும் அது தென்னிந்தியர்களாத்தான் இருக்கும். அவர்கள் நமக்கு நெருங்கிய பங்காளிகள். அவர்களை வரவேற்று, உபசரித்து, கூடி, குலாவி, களித்திருக்க வேண்டும்.
ஆனால் இங்கிருக்குபவர்களுக்கு கலாச்சாரம் என்றாலோ பன்முகத்தன்மை என்றாலோ என்னவென்றே தெரியாத சாதியில் உழலும் சில்லறை பசங்கள் என்பதால் இங்கு வந்திருக்கும் நம் பங்காளிகளை இனவெறியோடு பார்க்கும் பார்வையிருக்கிறது. பொதுவாகவே வெள்ளையினத்தவர் என்றால் வாங்க துரை என்னும் தோரணையில் பல்லிளிப்பதும் ஆப்பிரிக்க நாட்டினர் என்றால் உதாசீனப்படுத்துவதும் தெரிகிறது. ஆப்பிரிக்கர்கள் மீதான இந்த வெறுப்பும், உதாசீனமும் நம் சமூகத்தின் பொதுவான மனப்போக்காக சொல்ல முடியும். சிங்கம் 2 படத்தில் லோயாலோ காலேஜில் படித்து பட்டம் பெற்றவரான சூர்யா ஒரு காட்சியில் “அந்த ஆப்பிரிக்க குரங்கை பிடித்து சிறையில் அடைப்பேன்” என்று (இந்த வசனத்தை எழுதிய இயக்குனர் ஹரியின் முகத்தை நினைத்து கொள்ளுங்கள்). வெள்ளையினத்தவரை பொருத்தவரை சீனர்களையே அவர்கள் வெள்ளையர்களாக ஏற்றுக்கொள்வது இல்லை. அதாவது வெள்ளையாக இருப்பவர்கள் வெள்ளையர்கள் அல்ல. நீங்கள் வெள்ளையினத்தவராய் இருக்க வேண்டும். நானும்(நான் சுத்தமான கருப்பு), கமலும் நியூயார்க் நகரில் இரவில் நடந்து சென்றால்,ஒரு இனவெறியனை எதிர்கொண்டால் எங்கள் இரண்டு பேரையுமே you curry fuckin black cunts fuck of too india என்று கத்துவான். அதாவது அவனை பொறுத்தவரை கமலும் நானும் ஒரே கருப்புதான். இதையே இன்னொரு வகையில் சொல்வதென்றால் நான், இயக்குனர் ஹரி, நடிகர் சூர்யா எல்லாருமே கருங்குரங்குகள்தான். இந்நிலையில் நாம் அப்பிரிக்கர்களை கருப்பு குரங்கு என்று நினைப்பது எவ்வளவு பெரிய காமெடி எவ்வளவு பெரிய முட்டாள்தனம் எவ்வளவு பெரிய திமிர்த்தனம், நமது சென்சார் போர்டில் இருப்பவர்கள் முட்டாள் கு ப ச கள் என்பதால் அந்த வசனத்தை அப்படியே அனுமதித்திருக்கிறார்கள். அப்பட்டமான இனவெறி வசனம் அது. அது சமூகத்தில் எந்த சலனத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை.
சிலமாதங்களுக்கு முன் நியூஸ் 7 சேனலில் திருப்பூரில் நைஜிரியர்கள் என்னும் பொறுக்கிதனமான டாக்குமெண்ட்ரி ஒளிபரப்ப பட்டது. https://www.youtube.com/watch?v=xfTCzshsDds . ஆறடி உயரம் ஆஜானுபாகுவான உடல் (…தா நல்ல சாப்பிட்டு ஜிம்முக்கு போய் ஒடம்ப அப்படி வச்சி இருக்கான்..உனக்கும் வேணும்னா நீயும் போய் அதை செய்டா வென்று) என்று மாயாவி மாரீசனில் டப்பிங் பேசுவதை போல ஒரு குரல் நைஜீரியர்களை பற்றி விவரிக்க தொடங்கி அவர்கள் ஒரு ஏரியா முழுவதும் இருக்கிறார்கள் (சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று ஒரு ஏரியாவே இருந்தால் இவர்களுக்கு இனிக்கும்), வியாபாரம் செய்கிறார்கள், ரொம்ப நாளா இருக்கிறார்கள், இங்கயே கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்று கோமாளித்தனமான குற்றச்சாட்டுகளை பின்னணி இசையோடு சொல்லிக்கொண்டு சில சில்லறை பசங்களை அப்பிரிக்கர்களுக்கு எதிராக பேசவைத்து டாக்குமெண்ட்ரி எடுத்திருந்தார்கள். அவர்கள் சொன்ன அத்தனை குற்றசாட்டுக்களும் வரிக்குவரி உலகம் முழுதும் வாழும் இந்தியர்களுக்கும் பொருந்தும். அவை எல்லாம் குற்றசாட்டுகளே இல்லை. பன்முகத்தன்மை பற்றியும், கூடி வாழ்தல் பற்றியும் தெரியாத சாதியில் உழலும் சில்லறை பன்றிகளின் பிதற்றல்.
இப்படி மீடியாவும், சினிமாவும் பொதுவாக அறியாமையின் காரணமாகவும், முட்டாள்தனத்தின் காரணமாகவும் மக்களுக்கு ஆப்பிரிக்கர்கள் மீது இருக்கும் வெறுப்பை, பயத்தை கூட்டிவிட்டதின் விளைவுகள் இங்கிருக்கும் அப்பிரிக்கர்களின் வாழ்க்கையை ஆபத்தில் விட்டிருக்கிறது. சமீபத்தில் திருப்பூரில் இரண்டு ஆப்பிரிக்கர்கள் ரோட்டில் நடந்து சென்ற யார்மீதோ இருசக்கர வாகனத்தில் சென்று இடித்து விட்டார்கள் என்று அங்குகூடிய பொதுமக்கள் அவர்களை கண்மூடி தனமாக தாக்கும் விடீயோவை news 18 ஒளிபரப்பியது. https://www.youtube.com/watch?v=Xh6UacVOFhs . மிகுந்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானேன். இந்தக் காட்சியை வேறொருவர் வேறொரு நாட்டில் பார்த்தால் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? தமிழக்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான அப்பிரிக்கர்களுக்கு குறிப்பாக ஆப்ரிக்க மாணவர்களுக்கு என்னமாதிரியான மனஉளைச்சல், அச்சம் ஏற்பட்டிருக்கும்?
கனடிய பிரதமர் அங்கு தமிழர்களோடு பொங்கல் கொண்டுவதை பாராட்டிக்கொண்டே நம் ஊரில் இருக்கும் வேற்று நாட்டினத்தவர் மீது வன்மத்தோடும் துவேசத்தோடும் நடந்து கொள்ளும் இந்த சில்லறை பசங்களை என்ன செய்யலாம்? இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களையே சாதியின் பொருட்டு வந்தேறி என்று ஒதுக்கும் சில்லறை பசங்கள் இருக்கும் ஊரில் நாம் பன்முகத்தன்மையை எப்படி உயர்த்தி பிடிப்பது?
தற்போதைய உலகமயமாக்கல் சூழ்நிலையால் எதிர் காலத்தில் இன்னும் பல நாட்டினர் நம் ஊரில் நம்மோடு வசிக்கும் நிலை நிச்சயம் வரும். நாம் ஒரு சமூகமாக அதற்க்கு ஆர்வமாக திறந்த மனதோடு, விசாலமான பார்வையோடு தயாராகவேண்டும். நம்மவர்களையும் அப்படித்தான் உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த பொறுப்பு அரசாங்கம் தொடங்கி கலைஞர்கள் வரை எல்லோருக்கும் இருக்கிறது. தற்போதைய தேவையாக விடுதலை சிறுத்தைகள், இடது சாரி கட்சிகள் போன்ற இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழகத்திலிருக்கும் ஆப்பிரிக்க இனத்தவருக்கு அரணாகவும் அந்த நாட்டினரிடம் நீங்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று உறுதியையும் தரவேண்டியது அவசியம். அவர்களின் கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்வில் நாம் பங்கெடுத்தும் நம்முடையதில் அவர்களை பங்கெடுக்க வைத்தும் மக்கள் மத்தியில்லிருக்கும் xenophobia மனநிலையை போக்க வேண்டும். பொங்கலுக்கு வேஷ்டி அணிந்து வாழ்த்து சொன்ன ஜஸ்டின் ட்ரடோ பார்த்து ரசித்தால் மட்டும் போதாது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டும்.
எல்லா இனத்து/நாட்டு குழந்தைகளும் கைகோர்த்து நம்முடைய சாலையில் நடந்து பள்ளிக்கு செல்லும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அற்புதம். இல்லையா?
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்

கருத்துகள் இல்லை: