ஞாயிறு, 18 மார்ச், 2018

சந்தையூர் தீண்டாமைச் சுவர்: சந்தைக்கு வந்திருக்கும் தலித் “அரசியல்” சிக்கல்கள்!

அருந்ததியர்கள் சந்திக்கிற சிக்கல்களிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருத்துவது, அருந்ததியர்களுக்கும் மற்ற தலித் ஜாதியினருக்கும் இடையே இருக்கும் சிக்கல்களை பேசினாலே, தலித் ஒற்றுமை சீர்குலைவதாக அச்சுறுத்தப்படுவதுதான். அதன் காரணமாகவே, சந்தையூர் சிக்கல்குறித்து வெகுசன ஊடகங்களில் எந்த விவாதங்களும் நிகழவில்லை.
பிரபாகரன் அழகர்சாமி
thetimestamil : மதுரை மாவட்டம் சந்தையூரில். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, அருந்ததியர் (சக்கிலியர்) சமூக மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி, காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து, தங்கள் மீது பறையர் சமூகத்தினர் நடத்திவரும் தீண்டாமை வன்கொடுகளை கண்டித்து போராடிவருகிறார்கள்.
40 நாட்களுக்கும் மேலாக அந்த மக்கள் மழையிலும் வெயிலிலும் துன்பப்பட்டு தங்கள் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள். ஆனால் அந்த மக்கள் ஏதோ வீம்புக்கு போய் அந்த காட்டில் புள்ளைக் குட்டிகளோடு உட்கார்ந்திருப்போல் ஒரு பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார்கள். இது தலித் அரசியலின் வெற்றியா தோல்வியா என்பது உங்கள் முடிவு!!!
பறையர் சமூகத்து தலித் போராளிகளின் ஆகப்பெரும் ஆதங்கமெல்லாம் அதெப்படி அந்த சுவரை தீண்டாமை சுவர் எனலாம் என்பதாகமட்டும்தான் இருக்கிறது. அதைத் தாண்டி அவர்கள் வருவதாகவே தெரியவில்லை. எத்தனை எத்தனை உண்மையறியும் குழுக்கள் அந்த ஊரை நோக்கி படையெடுத்துப்போய், கண்டுவந்த உண்மையெல்லாம் அது தீண்டாமை சுவர் அல்ல என்பதுதான். எனக்கு வாட்ஸப்பில் ஒரு உண்மை அறியும் குழுவின் அறிக்கை வந்தது. அதில், இப்போதைக்கு அதை தீண்டாமை சுவர் என்று சொல்லமுடியாது, ஆனால் இதை இப்படியே வைத்திருந்தால் தீண்டாமை சுவராக மாறிவிடும் என்று சொல்லியிருந்தார்கள். விநோதமான கருத்தாக இருந்தாலும், இந்த அளவிற்காகவாது உண்மையை கண்டு அறிந்திருக்கிறார்களே என்று அவர்களை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.
உத்தபுரத்தில் ஊரையும் சேரியையும் பிரித்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் போல இது அல்ல. இது வெறும் ஒரு சிறு கோவிலை
சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் சுற்றுச்சுவர், அவ்வளவுதான் என்கிறார்கள் பலர். வெறும் 2- 3 அடி உயரம்கூட இல்லாத கோவிலை, வெளியில் இருந்து பார்த்துவிடாதபடி 6 அடி உயரத்துக்கு சுவர் கட்டி, அந்த சுவரில் PR என்று எழுதிவைத்திருப்பதை வெறும் சுற்றுச்சுவர் என்றுகூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சந்தையூர் அருந்ததிய மக்கள் அடுக்கடுக்காக சொல்கிற தீண்டாமை புகார்களை எப்படி பார்ப்பது? அருந்ததியர் பகுதியில் இருக்கும் அங்கன்வாடிக்கு பறையர் சமூகத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுப்பது, அருந்ததியர் மக்கள் மாட்டுக்கறி தின்பவர்கள் என்று ஒதுக்குவது என்பதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை அந்த மக்கள் சொல்கிறார்களே.
நாடெங்கும் நூற்றுக்கணக்கான வடிவங்களில் தீண்டாமை வன்கொடுமைகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. தீண்டாமை என்பது ஒரே ஒரு வடித்தில்மட்டும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் செயல் அல்ல. சமூக வளர்ச்சியுடன் தீண்டாமையின் வடிவங்களும் வளர்ந்துக்கொண்டுதான் வருகிறது. தேனீர் நிலையங்களில் இரட்டை குவளைக்கு மாற்றாக ப்ளாஸ்டிக் கப்புகள் வருவதைப்போல. அப்படியிருக்கு உத்தபுரம் சுவர்தான் தீண்டாமைச் சுவர், சந்தையூர் சுவர் தீண்டாமைச் சுவர் அல்ல என்பது வெறும் அபத்தம் மட்டுமல்ல, பெரும் மோசடியும்கூட. சந்தையூர் அருந்ததியர் மக்கள் மீது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் பல்வேறு தீண்டாமை வன்கொடுமைகளுக்கு சாட்சியாக அந்த சுவர் இருக்கிறது, அதன்பொருட்டு மட்டுமேகூட அதை தீண்டாமைச் சுவர் என்று சொல்வது முழுவதும் சரி!
தீண்டாமை என்பதுவே நோயல்ல. ஜாதி என்பதுதான் நோய். தீண்டாமை அதன் அறிகுறி (symptom). அருந்ததியர்களும் மற்ற பெரிய தலித் ஜாதிகளும் தனித்தனி ஜாதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. எந்த அளவுக்கு அவர்களுக்கு இடையிலான இடைவெளி இருக்கிறது என்பதுதான் மிக முக்கியம். இத்தனை ஆண்டுகாலமாக, அருந்ததியினருக்கு சேரவேண்டிய நியாயமான ஓதுக்கீடுகளில் பெருமளவு மற்ற தலித் ஜாதியினராக இருக்கிற பறையர்களும் பள்ளர்களுமே முறைகேடாக அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக மாட்டும்தான், வெறும் 3% மட்டும் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. அதன்மூலம் சில ஆயிரம் பொறியாளர்களும், சில நூறு மருத்துவர்களும், சில மாவட்ட நீதிபதிகளும், மற்றும் மாநில அரசுப்பணிகளும் கிடைக்கப்பெற்று வருகிறார்கள். மத்திய அரசு பணிகள் இன்னும் அருந்ததியர்களுக்கு எட்டாக்கனிதான். சந்தையூர் பகுதி அருந்ததியர்களில் இன்னும் ஒருவர்கூட பட்டப்படிப்பு படித்தவரில்லை என்கிறது ஒரு உண்மையறியும் குழுவின் அறிக்கை. யோசித்துப் பாருங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய நியாயமான இடஒதுக்கீட் உரிமைகளை அருந்தயர்கள் யாரிடம் இழந்துவருகிறார்கள் என்று. அருந்ததியர் மக்கள் தொகைக்கு அவர்கள் 8 – 10 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கவேண்டும். ஆனால், அதிகபட்சமாக 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேலாக அவர்கள் பெற்றதே இல்லை.
ஆதித்தமிழர் பேரவையின் ஆற்றல் மிகு களப்போராளிகளான தோழர்கள் நீலவேந்தனும், இராணியும் எதற்காக தீக்குளித்து மாண்டார்கள்? யார் அவர்களுடைய உயிரை பறித்தது? அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று தடுப்பவர்கள் மறுப்பவர்கள் யார்? அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்கு நடத்துகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. தலித் எழுச்சியின் கருத்தியல் தலைமையாக கொண்டாடப்படுகிற எழுத்தாளர் ரவிக்குமார் (விசிகவின் பொதுச்செயலாளர் ) அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார். விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் இதுவரை அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து மழுப்பலான பதில்களைதான் கொடுத்துவருகிறார். அதிகார பரவல் குறித்து பேசுகிற அண்ணன் திருமா அவர்கள், சட்டமன்ற தொகுதி ஒதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிப்பதாக தெரியவில்லை.
அருந்ததியர்கள் சந்திக்கிற சிக்கல்களிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருத்துவது, அருந்ததியர்களுக்கும் மற்ற தலித் ஜாதியினருக்கும் இடையே இருக்கும் சிக்கல்களை பேசினாலே, தலித் ஒற்றுமை சீர்குலைவதாக அச்சுறுத்தப்படுவதுதான். அதன் காரணமாகவே, சந்தையூர் சிக்கல்குறித்து வெகுசன ஊடகங்களில் எந்த விவாதங்களும் நிகழவில்லை. பரவலாக யாருமே பேசாதபோதே, சந்தையூர் சிக்கலைவைத்து தலித் அல்லாதோர் குளிர்காய்கிறார்கள் என்கிற ரீதியில் விசிகவின் துணைப்பொதுச் செயலாளராக இருக்கிறவரேகூட குற்றம் சுமத்த அரம்பித்துவிடுகிறார். தி இந்து, விகடன், நியூஸ் 18 போன்ற, தலித் மக்கள் பிரச்சனைகளில் அக்கறையுடன் செயல்படுகிறவர்கள்கூட, சந்தையூர் சிக்கலில் கள்ள மவுனம்காக்கவைக்கும் அளவுக்கு இருக்கிறது ஆதிக்க சக்தியாக இருக்கும் ஒரு தரப்புதலித் சமூகத்தின் லாபி!
பிரபாகரன் அழகர்சாமி, சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை: