செவ்வாய், 20 மார்ச், 2018

2014 இல் இருந்து 23,000 இந்திய பணக்காரர்கள் தப்பி ஓட்டம் .... சூறையாடிய செல்வத்தோடு எஸ்கேப் ?


மின்னம்பலம் :2014ஆம் ஆண்டிலிருந்து சுமார் 23,000 பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
மோர்கன் ஸ்டேன்லி முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் சர்வதேச மூலோபாயம் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான தலைவர் ருச்சிர் ஷர்மா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவின் பணக்காரர்களில் 2.1 சதவிகிதத்தினர் (மில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்புடைய) 2014ஆம் ஆண்டிலிருந்து 2017 நிறைவு வரையில் இந்தியாவை விட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை பிரான்ஸ் நாட்டில் 1.3 சதவிகிதமாகவும், சீனாவில் 1.1 சதவிகிதமாகவும் மட்டுமே இருக்கிறது. 2014 முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய 23,000 பேரில், 2017ஆம் ஆண்டில் மட்டும் 7,000 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

என்.எம்.வேர்ல்டு நிறுவனம் உலகளவில் சுமார் 1,50,000 மில்லியன் டாலர் பணக்காரர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளும் மேற்கூறிய ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கறுப்புப் பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாகவே பணக்காரர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறும் ருச்சிர் ஷர்மா, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் பணக்காரர்களால் இந்தியாவின் முதலீட்டுக் காரணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து வெளியேறும் பணக்காரர்கள் பெரும்பாலும் ஆக்லாந்து, துபாய், மாண்ட்ரியல், டெல் அவிவ் மற்றும் டொராண்டோ உள்ளிட்ட நகரங்களையே தேர்ந்தெடுக்கின்றனர் என்பது இந்த ஆய்வின் வாயிலாக தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை: