திங்கள், 2 அக்டோபர், 2017

கர்நாடகாவில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் வருகிறது . பார்ப்பனர்களின் எச்சில் மீது தலித்கள் அங்க பிரதட்சணம் .....

minnambalam :கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 27) சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் வரும் நவம்பர் மாதம் கூடும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மாற்றுவதாகக் கூறி ஏமாற்றுதல், நரபலி, செய்வினை, பேய் ஓட்டுவது, நிர்வாண பூஜை, குறிப்பாக மங்களூரு குக்கே சுப்ரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு ஆகியவையும் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கர்நாடகாவில் அமலாவது மகிழ்ச்சியாக உள்ளதாகச் சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு முற்போக்கு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பளித்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று (அக்டோபர் 1) ஒன்றரை வயது குழந்தையை நெருப்புக் கனலின் மீது சடங்குக்காகப் படுக்க வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி குண்டக்கல் தாலுக்கா, அல்லபுரா கிராமத்தில் மொகரம் பண்டிகையின் ஒரு பகுதியாக வாழை இலையில் குழந்தையை படுக்க வைத்து, அதை நெருப்புக் கனலின் மீது வைக்கும் சடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதை புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்து முடிக்கும்வரை குழந்தையை கனலின் மீது வைத்துள்ளனர். குழந்தைக்கு எந்த ஓர் அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காகவும், அவர்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த சடங்கு மேற்கொள்ளப்பட்டதாக கல்கோட் இன்ஸ்பெக்டர் வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “அல்லபுரா தர்காவில் சன்னப்பா கவுடா - சிவ லீலா என்னும் தம்பதி இரண்டாண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை வேண்டும் என வழிபாடு செய்தனர். அப்போது சிவ லீலா கர்ப்பமாக இருந்தார். தங்கள் விருப்பம் நிறைவேறினால், குழந்தையை நெருப்பு கனலில் படுக்க வைப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகத் அவர்கள் தர்காவுக்கு வந்திருந்தனர். நெருப்பு கனல் அணைந்து சாம்பலான பிறகு அதன் மீது குழந்தையை வைக்க முடிவு செய்தனர். ஆனால், அந்த சாம்பல் கொஞ்சம் சூடாக இருந்த காரணத்தினால், வாழை இலை மீது குழந்தையை படுக்க வைத்து அதன் பிறகு குழந்தையைச் சாம்பல் மீது எட்டு விநாடிகள் வரை வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. குழந்தைகள் நல ஆணையம் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: