சனி, 7 அக்டோபர், 2017

டெங்கு ... எடப்படியின் மாவட்டத்திலேயே அம்மணமாக தலைவிரித்து ஆடுகிறது!

thetimestamil : சந்திர மோகன் : தொடரும் குழந்தைகளின் சாவுகள்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் அழுகையும், கூக்குரலுமாக இருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மருத்துவமனை நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதால் ஊழியர்களும் செய்வதறியாது திகைத்து தடுமாறுகிறார்கள்.
நோயாளிகளோடு வரும் பொதுமக்களே, காய்ச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் குளுக்கோஸ் போடுவது முதல் கழற்றுவது வரை செய்கிறார்கள்.நோயாளிகள் படுப்பதற்கு பெட்கள் இல்லாததால் தரையில் படுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
போதிய மருத்துவ ஊழியர்கள் /நர்சுகள் இல்லை. சேலம் மாநகரத்தைவிட்டு வெளியிலிருந்து வருபவர்களை “எதற்காக இங்கு வந்தீர்கள்? “என்று மருத்துவமனை ஊழியர்கள் திட்டுகிறார்கள். இன்று காலையிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நான்கு குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலம் ஓமலூர், குட்டப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ராஜாவின் மகள் சிவானி வயது 7. கடந்த ஒரு வாரமாக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை மரணமடைந்தார்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த சீனிவாசன் மகள் பிரியா, வயது 15. தொடர் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணனின் மகள் லத்திகா, வயது 7. கடந்த 29-ம் தேதி காய்ச்சலால் சேலம் அரசு மோகன் குமாரங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலை மரணமடைந்தார்.
சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த செல்வி மகன் பூபதி என்கின்ற சந்தோஷ் வயது 6. இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.
இத்தகைய மோசமான நிலை பற்றி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, ”மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது மர்மக் காய்ச்சலில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 582. இதில் பெரியவர்கள் 312. குழந்தைகள் 270. இதில் டெங்கு அறிகுறி உள்ளவர்கள் 150. தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்”.

சாக்கடையாக மாறிய சேலம் மாநகரம்:
ஒரு வாரமாக மழை தொடர்ந்து கொட்டிக் கொண்டு இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டதிற்காக பழைய சாக்கடை கழிவுநீர் அமைப்புகள்/டிச்சிகள் மூடப்பட்டு விட்டன. புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.
ஏரிகள் சுற்றியுள்ள அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஏழைகள், தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளில் மழை நீர், சாக்கடை புகுந்து அன்றாட வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது. பழைய மண் , ஓட்டு வீடுகள் இடிந்து வருகின்றன.
தேங்கிய நீரில் கொசுக்கள், வைரஸ் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. டெங்கு, மலேரியா பரவிக் கொண்டே செல்கிறது. இயற்கையின் புதிய தாக்குதலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாரிப்பில் இல்லை.
1)”சாக்கடைகளை, கழிவுநீர் அடைப்புகளை அகற்ற மாநகராட்சியிடம் நிதி/பணம் இல்லை” என்கிறார், மாநகராட்சி பொறியாளர்.
2)அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ, சுகாதார ஊழியர்கள் இல்லை; மருந்துகள் இல்லை.
3)தாழ்வான குடியிருப்பு பகுதிகளில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கொசு ஒழிப்பு மருந்து கூட அடிக்கப்படவில்லை.
4)மாநகராட்சி மருத்துவ ஆணையர் என்ற அதிகாரி சேலத்தில் இருக்கிறாரா எனத் தெரியவில்லை.
5)மாநகராட்சிக்கு சென்று ஆணையரை பார்க்க மக்கள் முயற்சித்தாலும் அவர் சென்னையில் இருப்பதாகவே பதில் சொல்கிறார்கள்.
6)பரபரப்பாக பேசப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த சிறப்பு முயற்சிகள் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை Disaster management பிரிவு என்ன செய்கிறது?
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், மக்கள் பிரதிநிதிகள் என எவரையும் பொறுப்பாக்கி நிர்பந்திக்க முடியவில்லை. ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் “பணம் இல்லை, ஆள் இல்லை “என நழுவுகின்றனர்.
அவசரம், அவசியம் – உடனே தலையிடுக!
மக்கள் உயிர் பறிபோகிறது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. உட்கட்சி விவகாரங்களை கைவிட்டு விட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் நல்வாழ்விற்கான நடவடிக்கைகளில் விரைந்து இயங்க வேண்டும்.மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது!
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை: