திங்கள், 2 அக்டோபர், 2017

சூழலியலுக்கு எதிரானது தேயிலைத்தோட்டம்?


davamudhalvan.davan : சூழலியலுக்கு எதிரானது தேயிலைத்தோட்டம் என்பதை சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் அவர்கள் பல இடங்களில் வலியுறுத்தி வருகிறார். அது உண்மைதான். இன்றைக்கு உலகம் இருக்கிற நெருக்கடியில் இயற்கைவளம் குறைந்துகொண்டே போகும்போது, மலை சார்ந்த பகுதிகளில் மலைகளை மரங்களைவிட தேயிலை மரங்களே ஆக்கிரமித்து இருப்பதை காணமுடியும். தேயிலைத்தோட்டங்கள் வனங்களை மேய்வதை பல தோட்டங்களின் எல்லைகளை கவனித்தால் புரியும். சிலருக்கு எரிச்சல் வரும் இதை சொன்னால்; 'பொழைப்புக்கு எங்கே போவது ' என்று வாதிடலாம். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு உற்சாக பானத்தை தயாரிக்க நமது மலைகளை தேயிலை தோட்டங்கள் ஆக்கினான் அன்று. இன்று மீத்தேன் . நியூட்ரினோ ஆய்வு , கோக் தொழிற்சாலை ... இப்படி பல. தேயிலை விலை உலகமயத்தால் குறைந்தபோது மாற்று பயிராக பூந்தோட்டம் ( கார்னேசன் ) பயிரிட்டார்கள் . அற்புதமான உணர்வை , மெல்லிய உணர்வை வணிகமாக்கி அதற்கு ஒரு நாளை தீர்மானித்து மேற்குலக நாடுகளால் கொண்டாடப்படும் காதல் தினத்திற்கு எங்கள் ஊரில் 'பொக்கே 'விற்கு பூ பயிரிட்டார்கள் .
பாலித்தின் கூடங்களை அமைத்தார்கள்; ரசாயன உரங்களை கொட்டினார்கள் ; சிறு ஓடைகளை அழித்தார்கள் . நீரெல்லாம் பாழ். எஞ்சிய நல்ல நீரும் புட்டி வழியாக ஏற்றுமதியாகிறது. என்ன செய்யலாம் ....?
நீலகிரி மலையை இருபது வருடங்கள் பின்நோக்கி பார்க்கிறேன். காப்பி ,குருமிளகு. ஆரஞ்சு , சீத்தா, பேரிக்காய் , ஆப்பிள் ,அன்னாசி , பிளம்ஸ் , ஏலக்காய் , அவரை , என தேயிலையின் ஊடுபயிராக இந்த பழமரங்கள் இருக்கும். ஓன்று இல்லாவிட்டாலும் ஓன்று கை கொடுக்கும் விவசாயிகளுக்கு. பழங்களை யாரும் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை . தேயிலையை நம்பி யாருமில்லை . ஆனால் தேயிலையால் வந்த பண மோகம் இவை எல்லா பழமரங்களையும் தானியங்களையும் ஒழித்துகட்டியது . நாளடைவில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி அடையவே அந்த விவசாயிகளும் ஒழிந்துபோனார்கள்.
இன்று பழங்களையும் தானியங்களையும் விலை கொடுத்து வாங்குகிறோம் . மலையெங்கும் பாலித்தீன் பைகளால் அமைக்கப்பட்ட கார்னேசன் பூந்தோட்டங்கள் . வளமான பூமியை பூக்களுக்காக பாழ்படுத்துகிறோம் . வீட்டுமனைகளாக பிரித்து விற்கிறோம். ஓடைகளை மறித்து வீடுகளை கட்ட அனுமதிக்கிறோம். இது சரிதானா ?
இப்போது ஒன்றும் குடிமுழுகிபோய்விடவில்லை. நீங்கள் நினைத்தால் இந்த நீலமலையை பழமலையாக்கலாம். பத்தே வருடத்தில் மகசூலை எடுக்கலாம் . சூழலும் கெடாது . நல்ல லாபமும் கிடைக்கும். தேயிலைவிலைக்காக கெஞ்சவும் வேண்டியதில்லை. பழமோ ,தானியமோ நமக்குள்ளே பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் . பொன் விளையும் பூமியான மலை நம்முடையது; மாற்றை விதையுங்கள்; பழமரங்கள் நடுங்கள் நீலமலை எப்போதும் தயாராக உள்ளது . இந்த ஆண்டு கனத்து பெய்யும் மழையில் எல்லோரும் யோசிப்போம்!

( நண்பர்களுக்கு பகிருங்கள் மலைவாசிகளே! )

கருத்துகள் இல்லை: