சனி, 7 அக்டோபர், 2017

தலித்கள் மீசை வைத்துக்கொள்ள குஜராத்தில் அனுமதி கிடையாது!

சிறப்புக் கட்டுரை: தலித் மீசை வைத்திருக்கக் கூடாதா?
மின்னம்பலம் : தமயந்தி தார்: ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை கோலாகலத்தில் குஜராத் மூழ்கிக் கிடக்கும்போது, தலித்துகள் மாநிலம் முழுவதும் சாதி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன.
செப்டம்பர் 25 மற்றும் 29 தேதிகளில் இரண்டு தலித்துகள் காந்திநகர் மாவட்டத்தில் லிம்போதரா கிராமத்தில் ராஜபுத் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் என்ன? மீசை வைத்திருந்ததுதான்.
செப்டம்பர் 29இல் பதான் மாவட்டத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கார்பா கொண்டாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்ததற்காகத் தாக்கப்பட்டனர்.
அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, அக்டோபர் 1ஆம் தேதி ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞர் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த நபர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது குற்றம்? கார்பா கொண்டாட்டத்தைப் பார்த்ததுதான்.


ஆனந்த் மாவட்டத்தில், போர்சாத் தாலுக்காவில் உள்ள பத்ரானியா கிராமத்தில் வசிக்கும் 20 வயது ஜெயேஷ் சோலங்கி, பண்டிகைக் காலத்தில் தன் குடும்பத்தோடு வார இறுதியைக் கழிப்பதற்காக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். விதி விளையாடிய அந்த விடியற்காலை 4 மணிக்கு ஜெயேஷ் தன் உறவுக்காரப் பையன் மற்றும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சோமேஷ்வர் கோயிலில் திறந்தவெளியில் நடைபெறும் கார்பா நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகக் கிளம்பினார்.
“அது என் யோசனைதான். எங்கள் சகோதரிகளும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களும் ஏற்கெனவே கார்பா நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் இருந்தனர். எனவே, நாங்கள் அதைப் பார்த்துவிட்டு அவர்களுடனே திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். இந்தப் பண்டிகை ஒன்பது நாள்களுக்கு நடைபெறும். எனவே, அங்கே நடனம் ஆடாமல் உட்கார்ந்து பார்க்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்” என்று அந்த நாளைப் பற்றி ஜெயேஷின் உறவுக்காரரும் இந்த வழக்கின் சாட்சியும், புகார்தாரருமான 23 வயதான பிரகாஷ் சோலங்கி நினைவுகூர்ந்தார்.
“வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஜெயேஷ் தன் அம்மாவை எழுப்பி வெளியே போய்விட்டுத் திரும்பிவந்து, வேலைக்குத் திரும்ப உடனே வதோதரா சென்று விடுவேன் என்று கூறினார். ஆனால் அவன் திரும்பி வரவே இல்லை, வீட்டிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் அவன் இறந்துவிட்டான்” என்று பிரகாஷ் கூறினார்.

கோயிலுக்குச் சற்று வெளியே பிரகாஷ், ஜெயேஷ் மற்றும் அவர்களின் நண்பர்கள் அமர்ந்து கார்பா நடனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அதே கிராமத்தில் வசிக்கும் சஞ்சய் படேல் அங்கு வந்தார்.
“அவர் எங்களிடம் இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஜெயேஷ் நாங்கள் கார்பா பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று பதில் கூறினான். அவன் எங்களைப் பார்த்து தேரா (சாதியைக் குறிக்கும் இழிவான சொல்) என்று கூறி, கார்பா நிகழ்ச்சி தலித்துகளுக்கானது அல்ல என்றும் எங்களை அங்கிருந்து போய்விடுமாறும் கூறினார். அப்படிச் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். படேல் தன் ஏழு நண்பர்களோடு திரும்பி வருவார் என்பதை அறியாத நாங்கள் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தோம்” என்று தொடர்ந்து கூறினார் பிரகாஷ்.
“சுமார் 4.30 மணிக்கு அவர் திரும்பி வந்து என்னை பிடித்து இழுத்து அறைந்தார். மீண்டும் என்னை அறைய முற்பட்ட படேலைத் தடுத்தான் ஜெயேஷ். உடனே அவர்கள் ஜெயேஷைப் பிடித்து அவரை தொடர்ந்து உதைத்துக்கொண்டே அவன் தலையை சுவற்றில் மோதினார்கள். இரண்டு பேர் என்னைப் பிடித்துக்கொண்டார்கள். மீதிபேர் அவன் மயக்கமடைந்த பிறகும் அவன் தலையைச் சுவரில் மோதிக்கொண்டே இருந்தனர். அவனை அப்படியே உட்காரவைத்து அவனைக் குத்தினார்கள், எங்களை அடித்து நொறுக்கிய பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர்” என்று பிரகாஷ் கூறினார்.
படேல் சமுதாய மக்கள் அங்கிருந்து சென்ற பிறகு பிரகாஷும் அந்த வழியில் சென்றுகொண்டிருந்த சிலரும் ஜெயேஷை இருசக்கர வாகனத்தில் போர்சாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து 16 கி.மீ. தொலைவில் கரம்சத் என்ற ஊரில் உள்ள பிரமுக் ஸ்வாமி மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லுமாறு கூறப்பட்டது. அங்கே கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஜெயேஷ், வதோராவில் செக்யூரிட்டி காவலராக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தார். இவருடைய அம்மா மதுபென், அப்பா பாயிலால்பாய். வதோராவில் வசிக்கும் இவரது அக்காவுக்குத் திருமணமாகிவிட்டது. இவர்கள் தங்களது திடீர் இழப்பை நம்ப முடியாமல் தவிக்கின்றனர்.
பதினெட்டு வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தனை பேருமே பத்ரானியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எஃப்.ஐ.ஆரில் பின்வரும் ஏழு பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன:
பிம்போ என்கிற சஞ்சய் படேல் (24), ரித்விக் படேல் (22), தவல் படேல் (27), ரிபேன் படேல் (22), சிந்தன் படேல் (27), தீபேஷ் படேல் (22) மற்றும் ஜிக்னேஷ் படேல்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போர்சத் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக நாங்கள் கோரிய ஏழு நாள்கள் போலீஸ் காவலை நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் நீதிமன்றக் காவலில் ரிமான்ட் செய்யப்பட்ட பின்னர் போர்சத் சப்-ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர் என்று பெட்லாட் துணை கண்காணிப்பாளரும் இந்த வழக்கை விசாரணை செய்துவருபவருமான ஜே.என்.தேசாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் (வன்கொடுமைத் தடைச் சட்டம்) ஐபிசி பிரிவுகள் 143 (சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல்), 323 (தூண்டுதல் இல்லாமல் தாக்கியது), 302 (கொலை) மற்றும் 504 (அமைதியை குலைக்கும் நோக்கில் அவமதித்தல்) ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் தீபேஷ் அந்த கிராமத்தின் சர்பஞ்ச் சர்ஜுலா படேலின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ரானியா கிராமத்தின் ஜாதி வன்முறை வரலாறு
பத்ரானியா கிராமத்தைப் பொறுத்தவரை சாதி வன்முறையும் அட்டூழியமும் பொதுவாக நடைபெற்றுவரும் விஷயங்கள். அந்த கிராமத்தில் உள்ள 4,000 குடும்பங்களில் 45 குடும்பங்கள் மட்டுமே தலித்துகள்.
2000ஆவது ஆண்டில், படேல் சமூக மக்கள் சுமார் 500 பேர் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை வர வேண்டியிருந்தது என்று உள்ளூர் சமூக ஆர்வலர் கிரண் சோலங்கி கூறினார். 2002, 2011 ஆண்டுகளிலும் இங்கு தலித்துகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன.
இந்தக் கிராமத்தில் தலித் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது, புது ஆடைகளை அணிந்துகொண்டு உயர்சாதி மக்கள் வசிக்கும் தெருக்கள் வழியாகப்போவது எனப் பல விஷயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைகளுள் ஒன்றை மீறியதுதான் ஜெயேஷ் செய்த தவறு.

லிம்போத்ரா கிராமத்தில் நடைபெற்ற சம்பங்கள்
இது ஒரே ஒரு கிராமத்தில் நடைபெறும் சம்பவம் மட்டுமல்ல. காந்திநகர் மாவட்டத்தில் கலோல் தாலுக்காவில் உள்ள லிம்போத்ரா கிராமத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு காரணமாக இப்படிப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 2000 தர்பார் சமூக மக்கள் வாழும் இந்த கிராமத்தில், வெறும் 100 தலித் குடும்பங்களே வாழ்கின்றன.
இங்கு பல தலைமுறைகளாகத் தலித்துகளுக்குப் புது ஆடை உடுத்துவது, முறுக்கு மீசை வைத்திருப்பது, கிராம முடிதிருத்துபவர் மூலம் ஷேவ் செய்துகொள்வது, தங்கள் திருமணத்தில் குதிரை மேல் ஊர்வலம் வருவது, பொதுக் கிணற்றில் அல்லது மேல் சாதியினர் பயன்படுத்தும் கிணற்றில் தண்ணீர் எடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
செப்டம்பர் 25ஆம் தேதி பியூஷ் பார்மர் (24), தன் கிராமத்தில் நடைபெற்ற கார்பா நடன நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் தன் உறவினர் திகந்த் மஹேரியாவுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வரும் வழியில் தர்பார் சமூகத்தைச் சேர்ந்த சிலர், இருவரையும் தடுத்து நிறுத்தி சாதியைக் குறித்து அவமதிக்கும் சொற்களால் அவமதித்தனர். பிரச்னையைத் தவிர்க்க இருவரும் இதைக் கண்டுகொள்ளாமல் மேற்கொண்டு நடந்தாலும் “எங்களைத் தடுத்து நிறுத்தி, முதலில் திகந்தை அடித்து நொறுக்கினர். பின்னர் என்னைத் தாக்க ஆரம்பித்தனர். நான் மீசை வைத்திருந்ததுதான் அவர்களுக்கு அதிக எரிச்சலூட்டியது” என்று பார்மர் கூறினார். ஒரு தலித் எப்படி மீசை வைத்துக்கொள்ளலாம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே தாக்கினர் என்று மேலும் அவர் கூறினார். அதே கிராமத்தில் கிருணால் மஹேரியா என்பவரும் இதே காரணத்துக்காகத் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்தும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பார்மரைத் தாக்கியவர்களில் மூன்று பேரும், கிருணாலைத் தாக்கியவர்களின் ஒருவரும் அக்டோபர் 3ஆம் தேதி பெயிலில் விடுவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வெளிவந்தன. அன்றைய தினமே பார்மரின் 17 வயது உறவுக்காரர் அடையாளம் தெரியாத நபர்களால் பிளேடால் தாக்கப்பட்டார்.
நன்றி: Thewire.in
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: