செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இந்தித் திணிப்புக்கு எதிராக சகல பிற மாநிலங்களும் ஒரே அணியில் திரள்கின்றன!


thesakural.com   :  ஆழி.செந்தில்நாதன்  : பெங்களூருவில் “கன்னட ரட்சண வேதிகே’ என்கிற கர்நாடக அமைப்பு “இந்தியாவில் மொழிச் சமத்துவத்தைக் கோருவோம்’’என்கிற தலைப்பில் நடத்திய வட்டமேசை கருத்தரங்கில், மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கம் (CLEAR)இன் சார்பாக நான் கலந்துகொண்டேன். கர்நாடகத் தில் கன்னட மொழி உரிமைக்காக போராடுகிற பலரும் கலந்துகொண்டார்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்த அமைப்பினரும் பங்கேற்றனர்.
அண்மையில் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையான நம்ம மெட்ரோவில் இந்தி திணிக்கப்பட்டிருந்ததற்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் இந்த நிகழ்வைப் பார்க்கவேண்டும். அதுமட்டுமின்றி கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே பனபாசி பலகா, சாமான்ய கன்னடிகா, முன்னோட்டா போன்ற அமைப்புகள் நடத்திவரும் மொழியுரிமை தொடர்பான போராட்டங்களும் பரப்பியக்கங்களும் முயற்சிகளும் பெரிய அளவுக்கு தாக்கத்தைச் செலுத்தியவை.
இன்று கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அவர்களுடன் இணைந்த சங் பரிவார் அமைப்புகள் மட்டுமே இந்திக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸில் பெரும்பகுதியினர் -குறிப்பாக இளம் தலைமுறை காங்கிரஸ்காரர்கள் – இந்தித் திணிப்பை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான், கர்நாடகத்தில் கன்னட மொழி அனைத்துவகை பள்ளிகளிலும் கட்டாயம் என்பதை சட்டமாக்கும் அறிவிப்பை முதல்வர் சித்தராமய்யா வெளியிட்டார். கர்நாடகத்தின் மற்றொரு பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் மெல்ல தனது மொழிக்கொள்கையை மாற்றிக்கொண்டது.
கர்நாடகத்துக்கு கன்னடம் முதல்மொழி, ஆங்கிலம் துணைமொழி என்கிற இருமொழிக் கொள்கையை அந்நிகழ்வில் பேசிய ஒவ்வொருத்தரும் வலியுறுத்தினார்கள் என்பதிலிருந்து அது ஒரு பொதுக்கோரிக்கையாக இருந்ததை பார்க்க முடிந்தது. கர்நாடக மாநில தி.மு.க.வும் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளும் இருமொழிக் கொள்கையை முன்வைத்து, தமிழக உதாரணங்களைச் சுட்டிக்காட்டியபோது நல்ல வரவேற்பு இருந்தது.

கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் மேற்கு வங்கத்திலும் இன்று வெடித்திருக்கும் இந்த மொழிப்போராட்டம் மிகவும் ஆழமான பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாநிலங்களில் பெரும்பாலும் பள்ளிகளில் இந்தி படிக்கிறார்கள் என்பதையும், பெருநகரங்களில் இந்தியில் பேசுவது சகஜமாக ஆகிவிட்டது என்பதையும் நாம் மறக்கவேண்டாம். ஆனாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான கோபம் வெடித்துக் கிளம்புவது ஏன்?
ஒரு நிலத்தில் வாழும் மக்களுக்குள்ள வாழ்வாதார உரிமைகளின் வெளிப்பாடாகவே மொழிப் பிரச்சினை வெடிக்கிறது. நமது பழைய மொழிப் போராட்ட வரலாறுகளும், பங்களாதேஷ் விடுதலையும் அதையே நிரூபிக்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை – தொழில், வணிகம், உயர்நிலை வேலைவாய்ப்பு, கீழ்நிலை வேலைவாய்ப்பு – என எல்லாத்துறைகளிலும் பனியாக்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவை விஞ்சி, சகித்துக்கொள்ளக்கூடிய வரம்பையும் மீறி, உள்ளூர் மக்களை புறக்கணிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. பா.ஜ.க. அரசு என்பது வடஇந்திய மாநிலங்களின் நலன்களுக்காக தென் இந்திய மாநிலங்களை சுரண்டுகிற காலனியத் தன்மையுள்ள அரசாக மாறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கன்னட ரட்சண வேதிகே ஆகட்டும், வேறு பல கன்னட அமைப்புகள் ஆகட்டும் அல்லது நிகழ்வில் கலந்துகொண்ட மகாராஷ்ட்டிரத்தின் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனையாக ஆகட்டும்… –இதுபோன்ற அமைப்புகளும் அவர்களின் சித்தாந்தமும் செயல்படும் முறைகளும் இந்துத்துவ அமைப்புகளோடு ஒப்பிடத்தக்க நிலையில்தான் இருந்து வந்தன. இப்போது அதில் சிறிய மாற்றச் சலனங்களை பார்க்கமுடிகிறது.
நிகழ்ச்சியில் நான் பேசும்போது, “”இந்த கூட்டத்துக்கு வந்திருந்த தமிழகம், மகாராஷ்ட்டிரம் ஆகிய இரு மாநிலங்களுடனும் கர்நாடகத்துக்கு பிரச்சினை உண்டு. நம்மிடம் காவிரி பிரச்சினை, மகாராஷ்ட்டிரத்துடன் பெல்காம் பிரச்சினை. சகோதரர்களுக்கு இடையில்தான் சொத்துப் பிரச்சினை இருக்கும்”’என்று நான் வாதிட்டேன். ஆனாலும் அவர்கள் சகோதரர்கள்தானே. அந்த வாதம் நன்றாக எடுபட்டது. நிகழ்வில் பேசிய பலரும் “காவிரி, பெல்காம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மொழிப்பிரச்சினையில் நாம் ஒன்று சேர்ந்தாகவேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வின் அடிநாதமாக இருந்தது சுதந்திரத்தின் மீதான ஈர்ப்புதான். தன்னாட்சி, கூட்டாட்சி தொடர்பான முன்வைப்புகளும் ஆசைகளும்தான் என்றால் அதில் ஒரு துளிகூட மிகையில்லை. கன்னட நாட்டின் சுயாதிகாரத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசினார்கள்.
நமக்கு எதிரி தமிழர்களோ மராத்தியரோ அல்ல, தில்லிதான் நமக்கு நிஜமான எதிரி என்கிற கருத்தை மிகத்தீவிரமாக பரப்பிவரும் அமைப்புகள்தான் இப்போது கன்னட இன அரசியலில் பலம்பெற்று வருகின்றன.
“தமிழர் எதிர்ப்பு என்ற ஒற்றை பெயரில் உருவாக்கப்பட்டதுதான் கன்னட இன அமைப்புகளின் அரசியல். ஆனால் அது இன்று வலுவிழந்துவருகிறது. தமிழர்களோடு இணைந்து செயல்படவேண்டும் என்பதுதான் இந்த தலைமுறையினரின் கோரிக்கையாக இருக்கிறது’’ என்று பனபாசி பலகா அமைப்பினர் தெரிவித்தனர்.
மெட்ரோ போராட்டத்துக்கு ஆதரவு கோரி உள்ளூர் தி.மு.க. தலைவர்களைச் சந்தித்த கன்னட அமைப்பின் தலைவர் ஒருவர் என்னிடம், “”காவிரி பற்றி பேச்சு எழுந்தது. அப்போது தி.மு.க. பிரமுகர் ஒருவர் வட இந்தியாவைச் சுட்டிக்காட்டி பேசினார். கங்கைநதி நான்கு மாநிலங்களுக்கு பாய்கிறது. ஆனால் அவர்கள் சண்டைப் போட்டுக்கொள்வதில்லை. ஆனால் நாம் சண்டை போட்டுக்கொள்கிறோம்’’என்று அந்த தி.மு.க. பிரமுகர் கூறினார். இந்த வாதம் அவ்வளவாக பொருத்தமில்லை என்றாலும்கூட இது போன்ற உரையாடல்கள் சுமுகமான சூழலை உருவாக்குகின்றன, ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.
“பாகுபலி’ பட வெளியீட்டின்போது சத்யராஜுக்கு எதிராக வாட்டாள் நாகராஜ் பிரச்சினையைக் கிளப்பியபோது, “வாட்டாள் நாகராஜின் அணுகுமுறை கன்னடர்களுக்கு உதவாது’ என்று கூறி, பல கன்னட அமைப்பின் பிரமுகர்கள் சமூக ஊடகங்களில் எழுதினார்கள்.
இந்தக் கூட்டத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியது ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா அமைப்பின் பிரதிநிதி சந்தீப் தேஷ்பாண்டேவின் பேச்சுதான்.
“”மகாராஷ்ட்டிரத்தைத் தாண்டித்தான் இந்தி தெற்கே நுழையமுடியும், நாங்கள் வாயிற்காவலர்களைப் போல இருந்து இந்தித் திணிப்பை முறியடிப்போம்”’என்று தேஷ்பாண்டே கூறினார்.
கிளியர் அமைப்பின் மகாராஷ்ட்டிரத் தூணாக இருந்துவரும் மும்பைப் பல்கலைக்கழக பேராசிரியரும் மகாராஷ்ட்டிராவின் நவீன வரலாற்றை நன்கு ஆய்ந்தவருமான தீபக் பவார் ஒருமுறை, “”முகலாயர்களுக்கு எதிராக மராத்தியர்கள் போராடிய காலத்திலிருந்தே, இந்தியாவைக் காப்பாற்றும் முதல்வரிசை படைவீரர்கள் தாங்கள்தான் என்கிற எண்ணம் மராத்தியர்களுக்கு உண்டு. இந்திய தேசியத்தைக் காப்பாற்றுவதே மராத்திய தேசியம் என்ற ஒரு கருத்து இங்கே நிலவுவதற்கும் அதுவே காரணம்”’என்றார். பா.ஜ.க.வை விட மிக மோசமான இந்துத்துவ கருத்துகளை சிவசேனா வெளியிட்டு வருவதற்கு அதுவே காரணம் என்று நாம் புரிந்துகொள்ளமுடிகிறது. அனைத்தளவாவிய முற்போக்கு மராத்திய தேசியம் என்று ஒன்று உருவாகாமல் போவதற்கு இந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக இருந்து வருகிறது.
ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின் மீது ஏறி சவாரி செய்யும்போது ஒன்று கவிழ்த்துவிடுகிறது. இதை மராத்தியர்கள் அண்மைக்காலமாக உணர்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் சிவசேனை பிரதான கட்சியாகவும் பா.ஜ.க. ஜூனியர் பார்ட்னராகவும் இருந்த நிலை போய், இப்போது பா.ஜ.க. பிரதான கட்சியாக மாறி சிவசேனை தன் இறுதிக் காலத்தை எண்ணிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து பிரிந்த எம்.என்.எஸ்.ஸிலும் வேறு பல மராத்திய அமைப்புகளிலும் உள்ள சிலர் தங்களுடைய “இந்தி'(ய)க் காதலை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் மும்பை, புனே மெட்ரோவில் மராத்தி ஒதுக்கப்பட்டதற்கு எதிராக அண்மையில் போராட்டம் வெடித்தது. “நம்ம மெட்ரோ இந்தி பேடா’ என்று பெங்களூருவில் போராட்டம் நடந்த அதேசமயத்தில் “ஆப்லி மெட்ரோ இந்தி நகு’ என்று புனேயில் போராட்டம் நடந்தது.
மொழியுரிமை தொடர்பான கோரிக்கைகளோடு கூட்டம் நிறைவடைந்தபோது, தேசிய இனங்களுக்கிடையிலான உறவு மேம்படுவதற்கான கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது.

கருத்துகள் இல்லை: