செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தலைமைச் செயலாளர்- டி.ஜி.பி. அவசர உத்தரவு!.. எடப்பாடி மீது ஆளுநருக்கு கோபமாம்?

மின்னம்பலம்: “கவர்னர் வித்யாசாகர் ராவுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வரும் மோதல் பற்றி நாம் தொடர்ந்து மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம். கவர்னருடன் எடப்பாடி பேசிப் பார்த்தார். அருண் ஜெட்லியிடம் போனார்கள். ஆந்திராவில் உள்ள நண்பர் மூலம் பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியாக ஜனாதிபதி வரையிலுமே எடப்பாடி முட்டி மோதிப்பார்த்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எடப்பாடி மீது கவர்னருக்கு கோபம் குறையவே இல்லை. இந்த சூழ்நிலையில்தான் எடப்பாடி அரசுக்கு கவர்னர் அடுத்தடுத்த செக் வைக்க ஆரம்பித்திருக்கிறார்.

தலைமை செயலாளரிடம் பேசிய கவர்னர், ‘நிறைய இடங்களில் அமைச்சர்கள் தலையீடு அதிகமாக இருக்குன்னு எனக்கு புகார் வந்துட்டு இருக்கு. விதிகளை மீறி அதிகாரிகள் எதையும் செய்ய வேண்டாம் என்பதை சொல்லிடுங்க...’ என உத்தரவிட்டிருந்தார். கவர்னரின் உத்தரவைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் ஏற்கெனவே இது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டார். நேற்று காலையில் தலைமைச் செயலாளர் தனக்கு நெருக்கமாக உள்ள சில மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு பேசினாராம்.

‘கவர்னர்கிட்ட இருந்து எனக்கு சில உத்தரவுகள் வந்திருக்கிறது. அமைச்சர்கள் விதிகளை மீறி செய்யச் சொன்ன சில விஷயங்களை இதுவரை செய்து கொடுத்துட்டு இருந்திருப்பீங்க... அவங்க சொல்றதை கேட்டுட்டு இருந்துரூப்பீங்க. இனி அப்படி செய்ய வேண்டாம். ரூல்ஸ்படி என்ன செய்யணுமோ அதை மட்டும் செஞ்சா போதும். அதைத்தாண்டி எதுவும் செய்ய வேண்டாம். இதை அமைச்சர்களிடம் நேரடியாக சொல்லாமல் சரி... சரின்னு சொல்லிட்டு தவிர்த்துடுங்க...’ என்று சொன்னாராம் தலைமைச் செயலாளர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு பெண் மாவட்ட ஆட்சியர், ‘எங்க மாவட்டத்துல இருக்கும் டி.ஆர்.ஓ. ஒருத்தர்தான் அமைச்சருக்கு ஆல் இன் ஆல். அவர்தான் மாவட்டச் செயலாளர் மாதிரியே நடந்துக்குவாரு. நாம என்ன விஷயத்தை செஞ்சாலும் அது அடுத்த நிமிஷம் அமைச்சருக்கு போயிடும். அவருக்கு இந்த உத்தரவை எப்படி சொல்றது?’ என்று தலைமைச் செயலாளரிடம் கேட்டாராம். ‘அப்படி போனால் போகட்டும். தெரிஞ்சா என்ன ஆகிடப் போகுது. நாம எதுவும் தப்பு செய்யலையே.. கவர்னர் சொன்னதை செயல்படுத்துறோம். டி.ஆர்.ஓ.வுக்கெல்லாம் பயந்தால் நாம இந்த வேலையில் இருக்க முடியாது. தேவைப்பட்டால் அந்த டி.ஆர்.ஓவை டிரான்ஸ்பர் பண்ணிடலாம். நீங்க தைரியமா வேலையைப் பாருங்க...’ என சொல்லிவிட்டாராம் தலைமைச் செயலாளர். அதனால், இனி மாவட்டங்களிலும் சிக்கல் ஆரம்பமாகும்...” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதை காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “கொங்கு மண்டலத்தில்தான் முதல்வரின் மாவட்டமும் வருகிறது என்பதால் ஆப்பு வைக்கும் வேலையை அங்கிருந்தே தொடங்கிவிட்டாரா கவர்னர்?” என்ற கேள்வியை வாட்ஸ் அப்பில் போட்டது. பதிலுக்கு ஒரு ஸ்மைலி போட்டு சைலண்ட் ஆக இருந்தது வாட்ஸ் அப்.


‘’தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், செப்டம்பர் 26-ம் தேதி மதியம் காவல் துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு போட்டிருந்தார். அதில் தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புக் காவல் படையினர் அவரவர் மாவட்டத் தலைமையிடத்தில் தயாராகவிருக்கவேண்டும், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது பாதுகாப்பிற்கு சென்ற சிறப்பு காவல் படையினர், அவரவர் மாவட்டங்களுக்குச் சென்று தலைமையிடத்தில் ரிப்போர்ட் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. டிஜிபி உத்தரவைக் கேட்டதும் எஸ்.பி, முதல் ஏ.டி.ஜி.பி, வரையில் பரபரப்பானார்கள். தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்திகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது வழக்கமான உத்தரவுதான் என சொல்லப்பட்டது என்றாலும் மூத்த அதிகாரிகளே கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள்’’ என்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட,
‘’கவர்னர் சென்னை வருகிற நேரத்தில், தலைமைச் செயலாளர் இப்படி உத்தரவு போட்டிருக்கிற நிலையில் டி.ஜி.பி.யிடம் இருந்தும் இப்படி ஒரு உத்தரவு வந்தது. இதை வைத்து ஆட்சிக்கு ஆபத்து என்று ஒரு தரப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி பரபரப்பான வதந்தி என ஒரு தரப்பினரும் பரபரப்பாகிவிட்டார்களே..?” என்று கேட்டது வாட்ஸ் அப்.
அதற்கு பதிலளித்தது ஃபேஸ்புக். ‘’திமுக வட்டாரத்தில் விசாரித்தேன். கருணாநிதியின் உடல்நிலை வழக்கம்போலதான் இருக்கிறது. வழக்கமான சிகிச்சையில்தான் இருக்கிறார்’ என்று சொன்னார்கள். இது ஒருபுறம் இருக்க... கவர்னர் சென்னைக்கு வந்திருக்கும் நாளில், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும், டிஜிபி ராஜேந்திரனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இது வழக்கமாக மாதம் தோறும் நடக்கும் நிகழ்வு என்று சொன்னாலும், கவர்னர் வந்த நாளில் இந்த நிகழ்வு நடப்பதால், அதற்கும் முடிச்சுப் போடுகிறார்கள். ” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: