செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ ஆற்றிய இரண்டு உரைகள்!

செப்டெம்பர் 25 ஆம் தேதியன்று ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இரண்டு முறை பேசினார்.முதல் உரையில் கூறியதாவது....
’’இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012 ஆம் ஆண்டில் இருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது.ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை.
தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது.இன்னும் வேதனையானது என்னவென்றால், தற்போது  தமிழ் இனக் கலாச்சாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள்,  குறிப்பாக, 90000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள். பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன்,தந்தை,பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள்.

தமிழ் ஈழப் பகுதியில் இருந்து  இலங்கை அரசின் இராணுவத்தை முற்றாக வெளியேற்ற மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் இனத்தை மொத்தப் பேரழிவில் இருந்து காப்பாற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கவுன்சிலும் முன்வர வேண்டும். ’’இந்த உரை முடித்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து, பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய இரண்டாவது உரை...’தலைவர் அவர்களே,வருகின்ற நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து, அனைத்துலக ஆய்வு நடைபெறப் போகின்றது.

முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் தான் நடத்திய இனப்படுகொலைக்குற்றங்களில் இருந்தும்,  2015 தீர்மானத்தில் இருந்தும்  தப்பித்துக்கொள்ள இலங்கை  அரசு தந்திரமான வழிகளைக் கையாள்கின்றது.இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது. 

உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன்ராஜ் சுலக்சன் சிங்களப் போலீசாரால் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்,

தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள இராணுவம் ஆளாக்குகிறது. 

கிளிநொச்சியில் கடந்த 210 நாள்களாக ஈழத்தமிழ்ப்பெண்கள் தாய்மார்கள் நீதிகேட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 

அவர்களின் விம்மல்களையும், அழுகைச் சத்தத்தையும் மனித உரிமைகள் கவுன்சில் செவி  கொடுத்துக் கேட்கட்டும்

கொடுமையான போது பால சேனா அமைப்பு, சிங்களக் குண்டர்களைக்கொண்ட  அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மசூதிகளைத் தாக்குவதோடு, இஸ்லாமிய மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது.

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும்  இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

மனித குலத்திற்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ,  அதே ஏற்பாடு  ஈழத்தமிழர்களுக்கும் நடக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தான நிலைமையை மனித உரிமைகள் கவுன்சில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான மனித உரிமைகள் காவலர் அண்டோனியோ குட்டரெசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் இலங்கைத் தீவுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும். ’’

இந்த உரையை அடுத்து, குர்திஸ்தான் பிரதிநிதி உட்படப் பலரும் வைகோவுக்குக் கை கொடுத்துப் பாராட்டினர்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: