வியாழன், 28 செப்டம்பர், 2017

கேரளா - ஆணின் கைகள் பெண்ணுக்குப் பொருத்தம்! ஆசியாவிலேயே முதல் ..

ஆணின் கைகள் பெண்ணுக்குப் பொருத்தம்!
மின்னம்பலம்:  ஆசியாவிலேயே முதல்முறையாக கேரளாவில் இளம் பெண் ஒருவருக்கு ஆணின் கைகளைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஃபகிர்கெளடா சித்தனகெளடா என்பவருக்கு ஸ்ரேயா சித்தனகெளடா (19) என்ற மகள் உண்டு. ஸ்ரேயா கடந்த ஆண்டு கல்லூரிக்குச் செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார்.
எர்ணாகுளம் ராஜகிரி கல்லூரியில் சச்சின் என்ற மாணவர் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். இவர், சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். அப்போது, அவரது உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டன. சச்சினின் கைகளை ஸ்ரேயாவுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கொச்சினில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சுமார் 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் இணைந்து 13 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஸ்ரேயா கைகளை அசைப்பதாகவும், இன்னும் சில வாரங்களில் மூட்டுகளை அசைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“விபத்தில் சிக்கி கைகளை இழந்த பிறகு திரும்ப எனக்கு கை கிடைக்கும் என்று நம்பவில்லை. இந்தியாவில் மாற்றுக் கைகள் பொருத்தும் வசதி இருப்பது தெரியவந்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. இன்னும் சில ஆண்டுகளில் என்னுடைய பழைய நிலைக்கு வந்துவிடுவேன்” என ஸ்ரேயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவர் மோஹித் கூறுகையில், ஸ்ரேயாவுக்கு ஏற்பட்ட அனைத்துச் சந்தேகங்களும் தீர்க்கப்பட்ட பின்னரே, கைகளைப் பொருத்த சம்மதம் தெரிவித்தார். ஆணின் கைகளைப் பெண்ணுக்குப் பொருத்தியது ஆசியாவிலேயே இதுவே முதல் முறையாகும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: