வியாழன், 28 செப்டம்பர், 2017

நீட் மிருகம் வேட்டையாட வருகிறது ... மிக அருகில் .. அடித்து விரட்டுங்கள்

Anitha Natarajan Jayaram  : சிபிஎஸ்சி தரம்" கும்பல் எல்லாம் வரிசைல வாங்க...//
கோர முகத்தை NEETட்டும் மிருகம் -- கோச்சிங் கிளாஸ் கொடுமைகள்.. பெற்றோர்களின் வாக்குமூலம் - 1 மகன் இந்த வருடம் 6 ஆம் வகுப்பு. பின்னர் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை, அதனால் பிள்ளையின் எதிர்கால நலன் கருதி, பல முனை விசாரிப்புகள் மற்றும் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு மகனை ஊரில் சிறந்தது என்று சொல்லப்பட்ட அந்த சிபிஎஸ்ஈ பள்ளிக்கு மாற்றினோம். இந்த வருடம் விட்டால் நடுவில் பள்ளியை மாற்றுவது கடினம், என்று தீர முடிவெடுத்து செயல்படுத்தினோம்.
இனி கவலை இல்லை. சிபிஎஸ்ஈ பள்ளியில் சேர்த்துவிட்டோம். மகன் தினமும் மாலை 5 மணிக்கு வீடு திரும்பி 9 வரை வீட்டுப்பாடம், மறுநாளைய க்ளாஸ் டெஸ்ட்கள் என இருக்கிறான், கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் எடுப்பான். அது மட்டுமல்லாது இப்போதே ஒலிம்பியாட், ஆல் இண்டியா சயன்ஸ் டெஸ்ட் போன்ற வருடாந்திர தேர்வுகளில் அவ்வப்போது நூறும், இருநூறுமாய்க் கட்டணமாக வாங்கிச் செல்கிறான். கட்டாயம் +2 வுக்குப் பின் வரும் முக்கியமான போட்டித் தேர்வுகளிலும் நன்றாக செய்வான் என்று உற்சாகமாக இருந்தது எங்கள் இருவருக்கும். எல்லாம் நல்லவிதமாகப் போய்க் கொண்டிருந்தது,
ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்பு வரை.
அன்று மாலை வீட்டுக்கு வந்த பிள்ளை கையில் பன்சால் அகடமி, உ.பி. என்ற தலைப்பில் ஒரு நோட்டீஸ். "அம்மா, நீட்,ஐஐடி, எய்ம்ஸ், ஜேஈஈ க்கு கோச்சிங் கிளாஸ் ஆரம்பிக்கறாங்க எங்க ஸ்கூல்ல அதுல சேர்றதுக்கு இஷ்டம் உள்ளவங்களோட பேரண்ட்ஸ் நாளை மறுநாள் மீட்டிங்ல கலந்துக்கணுமாம் என்றபடியே அந்த காகிதத்தை நீட்டினான்.
என்னாது?? பன்னென்டாங்கிளாசுக்கு பின்னாடி வரப்போற பரீட்சைக்கு ஆறாங்கிளாஸ்லருந்தே கோச்சிங்கா? ஏம்ப்பா ஏற்கனவே 4 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சு நீ வீட்டுக்கு வர அஞ்சாகிடுது. இது எந்த சமயம் நடத்துவாங்க? மா, அதனால தான் இது சாட்டர்டே, சண்டே வைக்கறாங்கமா. ஹாஃப்டே வாம், வாரத்துல 2 நாள் மட்டுந்தான் இந்தக் கிளாஸ்மா.. 3 ஹவர்ஸ். அதுக்கு ஃபீஸ் எவ்ளோ தம்பி? ஒரு வருஷத்துக்கு 25,000மாம்மா... ஸ்கூலின் ஒரு வருட ட்யூஷன் ஃபீசுக்கு கொஞ்சம் குறைவு (யூனிஃபார்ம், புத்தகம், எட்சட்ரா ஃபீஸ் தனி).
வந்த ஆத்திரத்தில் கோபத்தை பிள்ளையிடம் காட்டினேன். ஏண்டா சனி, ஞாயிறும் ஸ்கூலுக்குப் போகணும்னா எப்டிடா? உனக்குப் போகணுமா? நீங்க என்ன சொல்றீங்களோ அதானம்மா.. அடேய் 7 வருஷம் கழிச்சு வரப்போற பரீட்சைகளுக்கு நீ இப்பருந்தே வருஷத்துல 350 நாளும் படிச்சுக், கிழிச்சு, அதுவும் அவ்ளோ ஃபீஸ் கட்டி...
ஜூன் மாசம் ஹேமாவோடான ஃபோன் உரையாடல் நினைவுக்கு வந்தது..
நான்: "பொண்ணு எப்படிடீ இருக்கா?
அவ எய்த்துடீ, பாவம்... இப்பவே தினம் ஹோம்வொர்க், டெஸ்ட்டுன்னு சரியா இருக்கு அவளுக்கு. இதுல ஸ்கூல்ல நீட், எய்ம்ஸ், ஐஐடி கோச்சிங் க்ளாஸ்லாம் வேற ஆரம்பிச்சு நடக்குறதால பயந்துகிட்டிருக்கா. என்னது இதுக்குள்ளவா? ஆமா, இங்கல்லாம் சிக்ஸ்த்துலயே தொடங்கிடறாங்க. வருஷத்துக்கு நாப்பாதாயிரம். என்னாது நாப்பாதாயிராமா? ஆமா, நான் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா இங்க எங்க அப்பார்ட்மென்ட்ல எல்லா பசங்களும் போறாங்க, அதான் அவ மட்டும் போகாததுனால எங்க அவ மத்தவங்கள விட பின்தங்கிடுவாளோன்னு பயப்படறா.. டென்த்துக்குப் பிறகு பாத்துக்கலாம்னு சொல்லி தேத்தி வச்சிருக்கேன்" என்றாள், 17 வருடங்களாக குஜராத்தில் வசித்து வரும் தோழி ஹேமா அன்று..
அந்த மிருகம் இவ்வளவு சீக்கிரம் எங்களை நோக்கியும் வரும்ன்னு நாங்க எதிர்பாக்கவே இல்ல...
By Anitha Natarajan Jayaram

கருத்துகள் இல்லை: